சென்னை: சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் அக். 14-ல் தொடங்கி வைத்தார்.
நாகையில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் செரியபானி என்ற இந்தப் பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் சென்றடையும். ஒரு பயணி 50 கிலோ வரை பொருட்களை தங்களுடன் கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது.
தொடர் மழை காரணமாக, நாகை மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே செரியபானி என்ற கப்பல் இயங்கிய நிலையில் வேறொரு கப்பல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள கப்பலில் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ஜி.எஸ்.டி. வரியுடன் 5,000 ரூபாயும், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 7,000 ரூபாயும் வசூல் செய்யப்பட உள்ளது.
அந்தமானில் தயாராகியுள்ள சிவகங்கை கப்பல் மே 10-ம் தேதி நாகை துறைமுகம் வரவுள்ளது. இந்தியர்களுக்கு விசா கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள காரணத்தால் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானதாகும்.
கோடை விடுமுறையையொட்டி அதிகளவில் பயணிகள் கப்பல் பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் ஆதரவை பொறுத்து கூடுதல் கப்பல் இயக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது