தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.அவர் இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து தனது பாவத்தை கழுவிக்கொள்ள முயற்சிக்கின்றார்என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பற்ற 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
கோட்டாபய ராஜபக்ஷ தான் எழுதிய புத்தகத்தில் முஸ்லிம்கள், தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தவர்களே தன்னை விரட்டியடித்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும். சிங்கள மன்னர்கள் காலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் மன்னர்களை காட்டிக்கொடுக்கும் வகையில் நடந்துகொண்டதில்லை. இதனை சிறுபான்மை மக்களின் சூழ்ச்சியென்றே கூறுகின்றார். இவை கோட்டாபய தனது பாவத்தை கழுவிக்கொள்வதற்காக கூறும் பொய்யாகும்.
சிறுபான்மை மக்களால் அவரை விரட்டியடிக்க முடியுமா?
2019 மேடையில் நாட்டை தன்னாலேயே மீட்க முடியும் என்றும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு இனவாதத்தை பரப்பியே அவர் ஆட்சிக்கு வந்தார். இறுதியில் சிங்கள மக்களின் வயிற்றிலும் அவர் அடித்தார். இதனை தொடர்ந்தே போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எரிபொருள், எரிவாயு பிரச்சினைகளால் மக்ககள் போராட்டம் நடத்தினர். அதில் சிறுபான்மை மக்களும் கலந்துகொண்டார்கள். ஆனால் அவரை சிறுபான்மை மக்கள் மட்டும் விரட்டியடிக்கவில்லை என்றார்