அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சமீபத்தில் BAPS இந்து கற்கோவில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதன்முறையாக சர்ச் ஆஃப் சவுத் இந்தியா (CSI) திருச்சபைக்கு சொந்தமான புதிய கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் தற்போது அபுதாபியில் திறக்கப்பட உள்ளது.
அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களால் வழங்கப்பட்ட 4.37 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள தென் இந்தியாவின் இந்த முதல் சர்ச், கலாச்சார மாவட்டம் (cultural district) என பெயரிடப்பட்டுள்ள அபு முரீகாவில் (Abu Mureikha) BAPS இந்து கோவிலுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.
இந்த கட்டிடமானது, மண்ணின் நிறம் (earthy-tone) மற்றும் எண்கோண வடிவத்தில் ஒரு தனித்துவமான வடிவமைப்பிலும், தேவாலய கட்டிடத்தின் முன்புறம் தேவதூதர்களின் இறக்கைகளை குறிக்கும் வகையில் உயரமான சுவர்களையும் கொண்டுள்ளது. மேலும் இது மனிதகுலத்தின் பாதுகாப்பு மற்றும் கடவுளின் படைப்பு என்பதை குறிப்பதாகவும் தேவாலயம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சபையின் விகார் ரெவ். லால்ஜி எம். பிலிப் பேசுகையில், “கடவுளின் நிபந்தனையற்ற மற்றும் தியாக அன்பைப் பகிர்ந்து கொள்ள நாங்கள் இங்கு வந்துள்ளோம், மேலும் இந்த வழிபாட்டுத் தலம் எல்லா நேரங்களிலும் சமூகத்திற்கு எங்கள் சேவைகளை வழங்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த தேவாலாயம் CSIயின் மத்திய கேரள பேராயர் பிஷப் ரைட் ரெவரெண்ட் டாக்டர் மலையில் சாபு கோஷி செரியன் என்பவரின் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மென்மையான திறப்பு விழாவுடன் திறக்கப்பட உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுடன் திறக்கப்படவுள்ள இந்த தென் இந்தியாவின் முதல் சர்ச், அடுத்த மாதம் மே 5ம் தேதி முதல் அனைத்து பொதுமக்களுக்கும் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் என்றும் CSI நிர்வாகத்தால் கூறப்பட்டுள்ளது.
CSI ஆனது, சுமார் 4 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ தேவாலயமாகும். தற்போது அபுதாபி சிட்டியில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ தேவாலயத்தில் இந்த CSIன் பிரார்த்தனை கூட்டங்கள் நடந்து வரும் நிலையில், உறுப்பினர்கள் வெகுவிரைவில் தங்கள் சொந்த தேவாலய கட்டிடத்தில் ஒன்று கூடி பிரார்த்தனை செய்யலாம் என்றும் CSI சர்ச் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.