ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 17 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம்பக்கம் வளைத்துப் போடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சி வெற்றியளிக்கவில்லை எனத் தெரியவருகின்றது.
குறித்த நபர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினத்துக்கு மேடையேற்றும் நோக்கிலேயே நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும், ஓரிருவர் மாத்திரமே ஜனாதிபதி ரணிலுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
எதிரணியில் இருந்து ஆதரவு வழங்கும் உறுப்பினர்களைக் கூடிய விரைவில் வளைத்துப் போடுமாறு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியால் தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், எதிரணி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் வஜிர அபேவர்தன, சாகல ரத்னாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
தலதா அத்துகோரள, கபீர் ஹாசீம், ராஜித சேனாரட்ன ஆகிய எம்.பிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அண்மைய செயல்பாடுகள் குறித்து அதிருப்தியான மனநிலையில் உள்ளனர்.
குறிப்பாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை கட்சிக்குள் இணைத்துக்கொள்ளப்படுவது குறித்து எவ்வித கலந்துரையாடல்களும் நடத்தப்படுவதில்லையென அவர்கள் வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
பொதுஜன பெரமுனவை இணைத்துக்கொள்ள முடியும் என்றால், ஏன் ஐ.தே.கவுடன் இணைந்து பணியாற்ற முடியாதெனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
எதிர்வரும் மே தினத்தை பிரமாண்டமான முறையில் நடத்தி மக்கள் செல்வாக்கை தம்பக்கம் ஈர்க்கும் முயற்சியில் ஐ.தே.க ஈடுபட்டுள்ளது.
என்றாலும், ரணில் தரப்பு தொடர்ந்து 10 முதல் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களை சஜித் தரப்பிலிருந்து தம்பக்கம் ஈர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த விடயம் வெற்றியளித்தால் ரணிலின் செல்வாக்கும் அதிகரிக்கும் என்பது ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கான வெற்றிவாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் கருதுகிறது.