தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா உடபுஸ்ஸலாவ பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான நீதிமன்ற கோர்ட் லொட்ஜ் தோட்டத்திற்கு இன்று (16) காலை சென்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
Peko Trail பாதையினூடாக ஜனாதிபதி நடைபயணமாக இப்பகுதிளை மேற்பார்வை செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
“Peko Trail” என்பது இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளூடாகச் செல்லும் 300 கிலோ மீற்றர் மலையேறும் பாதையாகும். ஆசியாவின் மிக ரகசியமான பாதைகளில் இதுவும் ஒன்றாகும்.
Peko Trail என்று அறியப்படும் இந்தப் பாதையானது கண்டியில் ஆரம்பித்து அட்டன் ஊடாக ஹோட்டன் தென்ன தேசிய வனப் பூங்கா வரையில் செல்கிறது.
அதன் பின்னர் ஹப்புத்தலை – எல்ல ஊடாக பயணித்து அழகிய நுவரெலியா நகரத்தில் பயணத்தை நிறைவு செய்யலாம்.
இந்த பாதை பிரித்தானிய காலணித்துவக் காலத்தில் பெருந்தோட்டங்களிலிருந்து தொழிற்சாலைகளுக்குச் செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.
Peko Trail பாதையினூடாக 3.2 கி.மீ தூரத்திற்கு நடைப் பயணமாக சென்ற ஜனாதிபதி கோர்ட் லொட்ஜ் தோட்ட மக்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
பிரவுன்ஸ் தோட்ட நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் கோர்ட் லொட்ஜ் தோட்டம், 264 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் 349 பேர் பணிபுரிகின்றனர்.
பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில், உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் தோட்டத் தொழிலாளர்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்களை ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.