நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருதில் கடலரிப்பின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளதால் இப்பிரதேச மக்கள் பொழுதுபோக்கிற்காக ஒன்றுகூடும் மருதூர் சதுக்கம் என அழைக்கப்படும் கடற்கரை திடல் அதிக பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.
அது மட்டுமல்லாது, இந்த சதுக்கத்தோடு இணைந்ததாக காணப்படும் கொங்றீட் வீதியின் ஒரு பகுதி கடலுக்குள் உள்வாங்கப்படுள்ளதுடன், இவ்விடத்தில் அமைந்துள்ள மீனவர் பல்தேவை கட்டிடமும் இடிந்துவிழும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
கடந்த காலங்களில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் கடலரிப்பு ஏற்பட்டபோது கல் அணைகள் அமைக்கப்பட்டபோதும் இந்த பிரதேசத்தை அண்டியதாக கடலரிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படாமையினால் மருதூர் சதுக்கம் கடலரிப்புக்குள்ளாகியுள்ளது.
எனவே, தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு மருதூர் சதுக்கம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை பாதுகாக்க கரையோரம் பேணல் திணைக்களம், பிரதேச செயலகம் என்பன இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இது குறித்து பிரதேச அரசியல்வாதிகள் கவனத்திலெடுத்து கல் அணை அமைப்பதற்கான நிதியை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசங்களில் கல் அணை அமைத்து எஞ்சியிருக்கும் கற்களைப் போட்டு முதற்கட்ட ஏற்பாடுகளையேனும் செய்ய முயற்சிக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்