உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் எனத் திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் டி.சி.எஸ்.ஏலகந்த தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாளாந்தம் 80 முதல் 100 மில்லியன் ரூபா பெறுமதியான நீர் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2011 ஆம் ஆண்டு ஈரானிய அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 514 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதாகும்.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பதுளைக்கு 65 உயர் அழுத்த மின் கம்பிகள் ஊடாக 23 கிலோமீற்றர் தூரம் கொண்டு செல்லப்பட்டு தேசிய மின்வட்டத்துடன் இணைக்கப்படவுள்ளது.
அத்துடன், உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் குடிநீருக்கான நீரைப் பெற்றுக் கொள்வது இதன் நோக்கமாகும்.
இந்த நிலையில் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், நீர்மின் உற்பத்திக்கான சோதனை நிலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் திட்ட இயக்குநர் பொறியாளர் டி.சி.எஸ்.ஏலகந்த தெரிவித்துள்ளார்