முந்தல் களப்பு பகுதியில் ஒக்சிஜன் பற்றாக்குறையினாலும், அடையாளம் கண்டறியமுடியாத இரசாயனம் கலக்கப்பட்டமையினாலும் மீன்கள் அசாதாரணமான முறையில் உயிரிழந்திருக்கலாம் என தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமைத்துவ நிறுவனம் (NARA) தெரிவித்துள்ளது.
முந்தல் களப்பு பகுதியில் வாழ்ந்த பல்வேறு இனங்களைச் சேர்ந்த மீன்கள் கடந்த 6ஆம் திகதி முதல் இறந்து கரையொதுங்க ஆரம்பித்தன.
இந்த நிலையில், மீன் இனங்கள் தவிர்ந்து அப்பகுதியில் வாழ்ந்த ஏனைய உயிரினங்களும் இருந்துள்ளதாக தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமைத்துவ நிறுவனம் உறுதி செய்துள்ளது.
36 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள முந்தல் களப்பு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன.
ஹமில்டன் கால்வாய் ஊடாக முந்தல் களப்பு நீர் புத்தளம் மற்றும் சிலாபம் களப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹமில்டன் கால்வாய் முந்தல் களப்பு பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மீனவர்களின் குற்றச்சாட்டை தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமைத்துவ நிறுவனம் உறுதிசெய்துள்ளது.
இதன்படி, களப்பு நீரில் ஒக்சிஜன் அளவு வெகுவாக குறைந்துள்ளதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், யாரேனும் மீன்களுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அல்லது வேறு ஏதேனும் பொருளை களப்பில் விடுவித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தளம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் சரத் சந்திரநாயக்க தெரிவித்தார்.