மன்னார் புதிய குரலட நிருபர்
தமிழர்கள் விடுதலையை பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் விடுதலைக்கு சமமாக எதிர் பார்க்கின்ற தீர்வை தரக்கூடிய எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் இல்லை என்பதை உணர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் நாங்கள் பொது வேட்பாளரை நிறுத்துவதன் ஊடாக தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினரும்,கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.
மன்னாரில் வைத்து இன்று (13) ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
இவ்வருட இறுதிக்குள் வர இருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும்,தமிழ் மக்களாகிய நாங்கள் யாரை ஆதரிப்பது மற்றும் என்ன செய்வது என்ற தீர்மானத்திற்கு நாங்கள் வர வேண்டியவர்களாக இருக்கிறோம்.
அதனடிப்படையில் ஒரு அரசியல் கட்சி என் கின்ற ரீதியில் நாங்களும் கட்சி ரீதியாக சில தீர்மானங்களை எட்ட வேண்டிய நிலை உள்ளது.அதன் அடிப்படையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய எமது கட்சியின் உயர்பீடம் கூடி வர உள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் யாரை ஆதரிப்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி எமது எதிர்ப்பை இலங்கை அரசிற்கும்,ஏனைய இராஜ தந்திரிகளுக்கும் தெரிவிக்க வேண்டிய ஒரு நிலைப்பாட்டின் அடிப்படையில்,நாங்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்பதும் எமது கட்சியின் தீர்மானமாக அமைந்திருந்தது.
தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அங்கம் வகித்துள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் குறித்த கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு,5 கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற நிலைக்கு வந்துள்ளோம்.
இவ் வருடம் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு சிங்கள வேட்பாளரையும் ஆதரிக்காமல்,தமிழர் ஒருவரை களத்தில் இறக்கி ஒட்டுமொத்த தமிழர்களின் வாக்குகளையும் அவருக்கு வழங்கி ஆதரவு வழங்க வேண்டும்.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் போது எமது உறவுகளின் உயிர்கள் ,உடமைகள் இழக்கப்பட்டுள்ளது.எனினும் விடுதலை யை பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில்,விடுதலைக்கு சமமாக நாங்கள் எதிர் பார்க்கின்ற தீர்வை தரக்கூடிய எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் இல்லை என்பதை உணர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் நாங்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது சரி என்பதன் அடிப்படையில் பொது வேட்பாளரை நிறுத்துவதன் ஊடாக தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
சிங்கள வேட்பாளர்கள் தமிழர்களுக்கான தீர்வு குறித்து வெளிப்படையாக கூற முடியாத நிலையில் உள்ளனர்.காரணம் தாங்கள் சிங்க மக்களினால் ஒதுக்க படுவோம் என்பதே காரணமாக உள்ளது.
கடந்த காலங்களிலும் அவர்கள் பல்வேறு பட்ட வாக்குறுதிகளை வழங்கிய நிலையில் சிங்கள தலைவர்களை நம்பி ஏமாற்றமடைந்த காலமாக எமது வரலாறு உள்ளது.எனவே நாங்கள் அனைவரும் ஒன்றாக நின்று தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற எல்லா அரசியல் கட்சிகளும் இவ்விடயத்தில் ஒற்றுமையாக நின்று பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கான ஒரு முடிவை எட்டியதன் பின் யார் பொது வேட்பாளர் என்ற முடிவுக்கு நாங்கள் வரலாம்.
ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பொது வேட்பாளரை நிறுத்துவதன் ஊடாக எமது முழு எதிர்ப்பையும் இலங்கைக்கும்,உலகிற்கும் நாம் காட்ட வேண்டும்.
எனவே அனைவரும் ஒன்றாக இணைந்து எமது எதிர்ப்பை வெளிப்படுத்தவது சாலச் சிறந்ததாக இருக்கும் என்பதன் அடிப்படையில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்பதே எமது கட்சி மற்றும் எமது கூட்டின் முடிவாக உள்ளது.
அதற்கான முழுமையான ஏற்பாடுகளையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது.பல்வேறு கட்சிகளுடன் பேசி எல்லோரையும் பொது வேட்பாளரை ஆதரிப்பது குறித்து பல்வேறு கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்விடயத்தில் ஈழத்திலும்,புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் ஒன்றாக இணைந்துள்ளார்கள்.எனவே இவ்விடயம் வெற்றி பெற அனைவரும் ஒன்றாக இணைந்து கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றாக ஒன்று சேர்ந்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்