வேலூர் : குடும்ப அரசியல், ஊழல் போன்றவற்றால் தமிழகத்தை தி.மு.க. பின்னோக்கி அழைத்துச் செல்கிறது என்று வேலூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று முன்தினம் சென்னையில் நடந்த வாகனப் பேரணியில் பங்கேற்றார். தொடர்ந்து நேற்று வேலூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இதற்காக சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூர் சென்ற பிரதமர் மோடி, வேஷ்டி, சட்டை அணிந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்கள் ஏ.சி.சண்முகம், சௌமியா அன்புமணி, கே.பாலு ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பேசுகையில்,
உங்களிடத்தில் தமிழில் உரையாற்ற முடியாதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எனது அனைத்து திறமைகளையும் நான் பயன்படுத்துவேன். ஆங்கிலேயருக்கு எதிராக மிகப்பெரிய புரட்சியை செய்த மண் வேலூர். இந்த வேலூர் மண் மீண்டும் ஒரு வரலாறு படைக்கப் போகிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.
இந்த 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் ஆளுகின்ற தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து வைத்துள்ளது.
ஆனால், 2014-ம் ஆண்டுக்கு முன்பாக இந்தியா எப்படி இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். பொருளாதாரத்தில் பலவீன நாடாக இருந்தது. மிகப்பெரிய முடிவுகள் எதுவும் அப்போது எடுக்கப்படவில்லை. இந்தியாவை பற்றி எங்கு பார்த்தாலும் மோசடி, ஊழல் செய்திகள் மட்டுமே வெளிவந்தன. இந்தியா தற்போது உலகின் வல்லரசாக மாறி வருகிறது.
இதில் தமிழகத்தின் பங்கு மிகப்பெரியது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளி துறையில், உற்பத்தி துறையில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதில் தமிழகம் மிகக் கடுமையாக உழைக்கிறது. தமிழகத்தில் அமைந்துள்ள ராணுவ பாதுகாப்பு உற்பத்தி மையங்கள் மூலமாக நடைபெறும் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தமிழகத்தை மிகப்பெரிய அளவில் முன்னோக்கி கொண்டு செல்லும்.
வேலூர் மக்களின் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்து என்.டி.ஏ. கூட்டணி செயல்படுகிறது. வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். சென்னை, பெங்களூரு தொழில் வழித்தடம் வேலூர் வழியாகச் செல்கிறது. இதன் காரணமாக வேலூர் நவீன மயமாக மாறும். வளர்ந்த இந்தியாவை தமிழகம் வழிநடத்த கூடிய நேரம் இது.