எம்.எல்.எம்.மன்சூர்
“…………. அறகலயவின் போது என்னை எதிர்ப்பதற்கென முஸ்லிம்களும், தமிழர்களும் ஒன்று திரண்டார்கள். நான் தொடர்ந்து அதிகாரத்திலிருந்து வந்தால் சிறுபான்மை சமூகங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் விதத்தில் சிங்கள பௌத்தர்களை நான் மேலும் வலுவூட்டியிருப்பேன் என்ற அச்சமே அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டியது”. (பக்கம். 91)
“என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி” (The Conspiracy to Oust Me from the Presidency) என்பது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதியிருக்கும் புத்தகத்தின் பெயர். (உப தலைப்பு: சர்வதேச அனுசரணையுடன் இலங்கையில் அரங்கேற்றப்பட்ட ஆட்சி மாற்றம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியது எப்படி?)
இந்நூல் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் வெளிவந்திருக்கிறது. மூலப்பிரதி ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பின்னர் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை எளிதில் ஊகிக்க முடிகிறது.
உண்மையான நூலாசிரியர் கோட்டாபய ராஜபக்ச அல்ல என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இவ்வகை எழுத்துக்களை ‘Ghost Writing’ என்று சொல்வார்கள். பெரும் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்திருக்கும் பெரும் புள்ளிகள் போன்றவர்களின் தன் வரலாறுகள் அவ்வாறு தான் எழுதப்படுகின்றன. அப்படி மற்றவர்களுக்கு புத்தகங்களை எழுதிக் கொடுப்பதற்கென்றே தொழில்முறை எழுத்தாளர்கள் இருந்து வருகிறார்கள். அவர்களை ‘Ghost Writers’ என்று அழைப்பார்கள். உலகெங்கிலும் பொதுவாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறை இது.
முன்னர் 2012 இல் வெளிவந்த ‘Gota’s War’ என்ற நூலை எழுதியவர் ‘தி ஐலண்ட்’ பத்திரிகையின் அரசியல் கட்டுரையாளர் சி. ஏ சந்திரப்பிரேம. விடுதலைப் புலிகளை முறியடித்து, சுமார் 30 வருட காலம் நீடித்து வந்த இலங்கையின் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த சாதனைக்கு முழுவதும் கோட்டாபய ராஜபக்சவே சொந்தக்காரர் என்ற தொனியில் எழுதப்பட்ட நூல் அது. போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் சரத் பொன்சேகாவின் வகிபாகம் முழுவதும் அதில் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்தது.
தன்னை சாதனை நாயகனாக சித்தரித்து புத்தகம் எழுதிய சந்திரப்பிரேமவுக்கு கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பரிசு ஜெனீவா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பதவி (2020 –2022). தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் வழங்கப்பட்ட நியமனம் அது.
நூலின் சரளமான மொழிநடை, நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் விதம், தர்க்க ஒழுங்கு மற்றும் சர்வதேச ராஜதந்திர வட்டாரங்களின் நகர்வுகள் குறித்த விளக்கங்கள் போன்றவற்றை பார்க்கும் போது, இலங்கை அரசியல் மற்றும் பிராந்திய புவி அரசியல் போக்குகள் குறித்த பரவலான அறிவைக் கொண்டிருக்கும் தொழில்முறை இதழியலாளர் (Professional Journalist) ஒருவரால் மட்டுமே இப்படியான ஒரு நூலை எழுத முடியும் என்ற முடிவுக்கு வரலாம்.
அந்த வகையில், கோட்டாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்து வரும் சந்திரப்பிரேமவே இந்நூலை எழுதியிருக்க முடியும் என்பது இலங்கையின் ஊடக வட்டாரங்களில் பரவலாக நிலவி வரும் அனுமானம்.
அரசியலில் எவ்வித முன்னனுபவமுமில்லாமல் 2019 இல் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச தனது இரண்டரை வருட கால ஆட்சியின் போது விட்ட முக்கியமான தவறுகள் எவை என்பதை விவரித்துக் கூற வேண்டியதில்லை. எதிர்கால வரலாற்றாசிரியர்கள் அவருடைய வரலாற்றுப் பாத்திரம் (Legacy) குறித்து எழுதும் போது அவற்றை விரிவாக எடுத்து விளக்குவார்கள்.
எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டுடன் கூடிய தீவிர பொருளாதார நெருக்கடி. இரசாயன உர வகைகளின் இறக்குமதித் தடை போன்ற முழு நாட்டையும் முடக்கிய பிரச்சினைகளாகட்டும் அல்லது கொவிட் சடலங்களை எரியூட்டுதல் போன்ற சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீது பேரதிர்ச்சியை எடுத்து வந்த சம்பவங்களாகட்டும் அவை எவற்றுக்கும் ‘எந்த விதத்திலும் தன்னால் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க முடியாது’ என்பது அவருடைய வாதம். அதற்கான தனது தரப்பு நியாயங்களையும் நூலில் அடுக்கிச் செல்கிறார்.
அவரைப் பதவி விலகச் செய்த அறகலய மக்கள் எழுச்சி, ஒரு சில தேசிய சக்திகளுடன் சர்வதேச சக்திகள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட ஒரு சதி என்பதே இந்த நூலின் சாராம்சம். இந்தச் சதியில் சம்பந்தப்பட்டிருந்த உள்நாட்டுச் சக்திகளில் முஸ்லிம் சமூகம் ஒரு முக்கிய தரப்பாக இருந்து வந்தது என்றும், கொவிட் ஜனாஸா எரிப்பு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான தொல்லியல் செயலணி என்பன காரணமாக முஸ்லிம்கள் தன் மீது கொண்டிருந்த வெறுப்புணர்வை அதே விதத்தில் அறகலய பூமிக்குள் எடுத்து வந்தார்கள் என்றும் சொல்கிறார் கோட்டாபய.
“ஒரு முஸ்லிம் நபரின் தலைமையில் 2022 ஜூலை 13 ஆந் திகதி ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்துமீறிப் பிரவேசித்தார்கள். அது ஒரு போயா தினம்….. வழமையான ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டு, அறகலய ஆர்ப்பாட்டங்களைக் காட்டும் காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்பட வேண்டும் என அந்நபர் உரத்துக் கூறுகிறார்……… அன்று போயா தின நிகழ்ச்சிகளே ஒளிபரப்பப்படவிருக்கின்றன என ரூபவாஹினி ஊழியர் அவரிடம் கூறிய போது, அந்த முஸ்லிம் அறகலய தலைவர் இப்படிச் செனான்னார்”:
“பண (புத்தரின் போதனைகள்) மற்றும் பிரித் ஓதுதல் என்பவற்றைப் பார்க்கிலும் மிக முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன …….. இந்தச் சம்பவம் அறகலய எதிர்ப்புச் செயற்பாடுகளில் பௌத்தர்களுக்கு கிடைத்த இடத்தை தெளிவாக காட்டுகிறது”. (பக். 171)
மேற்படி சம்பவம் ஒரு தனி நபரின் நடத்தை சம்பந்தப்பட்டது. அவர் அப்படிச் சொல்லியிருந்தால் அது வன்மையாக கண்டிக்கதக்கது என்பதிலும் சந்தேகமில்லை.
ஆனால், அந்த வார்த்தைகளை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் சிங்கள பௌத்தர்களை விளித்துச் சொன்ன வார்த்தைகளாக சித்தரித்துக் காட்ட முயல்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இஸ்லாமியர் மீதான வெறுப்புணர்வைத் தூண்டும் நோக்கில் இச்சம்பவம் வேண்டுமென்றே இந்நூலில் திணிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது.
அறகலய சிங்கள பௌத்தர்களுக்கு எதிரான ஒரு சூழ்ச்சி’ எனக் கூறுவது ஒரு புதிய கண்டுபிடிப்பல்ல. நளின் டி சில்வா, சேன தோரதெனிய போன்ற சிங்கள தேசியவாதிகள் இது குறித்து ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறார்கள்.
“மே 9: மறைந்திருக்கும் கதை” என்ற விமல் வீரவன்சவின் (சிங்கள) நூலிலும் இந்த விஷயமே சொல்லப்பட்டிருக்கிறது. ஒரேயொரு வித்தியாசம் – வீரவன்ச இந்தச் சதி தொடர்பாக அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங்க் மீது நேரடியாக விரலை நீட்டுகிறார். கோட்டாபய சர்வதேச ரீதியில் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கருதப்படுபவர்கள் எவருடைய பெயரையும் குறிப்பிடாமல் அடக்கி வாசிக்கிறார்.
“அறகலய சிங்கள – பௌத்தர்களுக்கு எதிரானது; சிங்கள பௌத்த தலைமைத்துவத்தை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் தேச விரோத சக்திகளினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதி” என்ற கருத்தை நளின் டி சில்வா போன்றவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அந்தக் கருத்தின் ஒரு நீட்சியாகவே இந்நூலைப் பார்க்க முடிகின்றது.
2012 இல் பொதுபல சேனா இயக்கத்தின் திடீர் எழுச்சியையடுத்து சுமார் ஒரு தசாப்த காலம் இலங்கையின் இனத்துவ – அரசியல் களம் பதற்ற உணர்வுகள் சூழ்ந்ததாக இருந்து வந்தது. சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மத்தியில் அப்படி ஒரு விரிசலை உருவாக்கி, போஷித்து வளர்த்ததில் கோட்டாபய ராஜபக்ச வகித்து வந்த நிர்ணயகரமான வகி பாகம் குறித்து புதிதாக சொல்ல வேண்டியதில்லை.
அத்துடன் அவருடைய பிரச்சார மேடைகளில் ‘நாங்கள் எந்தக் காரணம் கொண்டும் வாக்குகளுக்காக முஸ்லிம்களிடம் மண்டியிடமாட்டோம்’ என்ற விதத்தில் விமல் வீரவன்ச போன்றவர்கள் பிரகடனம் செய்த ஆவேசமான சூளுரைகளையும் எவரும் எளிதில் மறந்து விட முடியாது.
ஆனால், 2019 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் மீது செல்வாக்குச் செலுத்திய அந்த முக்கியமான பின்னணித் தகவல்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு, நூல் அறிமுகத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது:
“……… திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை தொகுதியில் எனக்கு 64% வாக்குகள் கிடைத்தன. அதே வேளையில், முஸ்லிம்கள் செறிந்து வாழும் சம்மாந்துறை, கல்முனை மற்றும் பொத்துவில் ஆகிய தொகுதிகளில் எனக்குக் கிடைத்த வாக்குகள் முறையே 10%, 12% மற்றும் 16 % ஆகும்………. திருகோணமலையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் சேருவில தேர்தல் தொகுதியில் 50% க்கு மேல் வாக்குகள் கிடைத்தன. ஆனால், முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட மூதூர் தொகுதியில் 6% க்கும் குறைவான வாக்குகளே எனக்குக் கிடைத்தன.” (பக்கம் 1)
“கொவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கு சுகாதாரத் துறையைச் சேர்ந்த அனைவரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள்……. ஒரு கட்டத்தில், சடலங்களை ஒரு கொங்கிரீட் பெட்டியில் வைத்து மூடி அடக்கம் செய்யலாம் நான் யோசனை தெரிவித்தேன். அந்த யோசனையையும் அவர்கள் எதிர்த்தார்கள். குறிப்பாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியல் நிபுணர் (Micro Biologist) மெத்திக்கா விதானகே கொங்கிரீட் தட்டுக்களிலும் கூட கசிவுகள் ஏற்பட முடியும் எனக் கூறி அந்த யோசனையை நிராகரித்தார்” (பக். 122) எனக் கூறும் கோட்டாபய, அச்சந்தர்ப்பத்தில் அது தொடர்பாக அவருக்கிருந்த மாற்றுத் தெரிவுகள் குறித்துப் பேசுவதை தவிர்த்துக் கொள்கிறார்.
அதாவது, இப்படியான பாரதூரமான ஒரு நெருக்கடி தொடர்பாக முடிவுகளை எடுக்கும் பொழுது அரச தலைவர்கள் பொதுவாக சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட நிபுணர்களிடம் அபிப்பிராயம் கேட்பது (Second Opinion) வழமை. ஆனால், கொவிட் சடலங்களை எரியூட்டுவது தொடர்பாக அப்படி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இலங்கையில் இருக்கும் ஒரேயொரு ‘Micro Biologist’ மெத்திக்கா விதானகே மட்டுமே என்ற நிலைப்பாட்டில் அவர் இருந்து வந்திருப்பது போல் தெரிகிறது.
“இப்பிரச்சினை தொடர்பாக ஒட்டுமொத்த சுகாதாரத் துறையும் ஒரே விதமான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தது” என்கிறது இந்நூல். ஆனால், அது தவறு. பல துறைசார் நிபுணர்கள் இது தொடர்பாக மாற்றுக் கருத்துக்களை அச்சந்தர்ப்பத்தில் முன்வைத்திருந்தார்கள். ஆனால், நூலில் எந்தவொரு இடத்திலும் அத்தகைய மாற்றுக் கருத்துக்கள் எவையும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
“இலங்கையில் முஸ்லிம்களின் சடலங்கள் எரியூட்டப்படுவது ‘அரசியல் காரணங்களுக்காக’ அந்நாட்டு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கூட்டுத் தண்டனை என பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது” எனவும், “ஐ நா மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் ஒரு குழு 2021 ஜனவரி மாதம் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் பாரபட்சம், தீவிர தேசியவாதம் மற்றும் இனவாதம் என்பவற்றின் அடிப்படையில் இலங்கை அரசு பொதுச் சுகாதாரம் தொடர்பான தீர்மானமொன்றை அமுல் செய்வது நாட்டில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களை துன்புறுத்துவதற்கு இணையானது எனக் குறிப்பிட்டிருந்தது” (பக். 124) எனவும் இப்பிரச்சினை தொடர்பாக இலங்கை மீது சர்வதேச ரீதியில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களை இந்நூல் குறிப்பிடுகின்றது.
ஆனால், இலங்கை மீது இவ்விதம் கண்டன அறிக்கைகள் விடப்பட்ட பின்னணி நூலில் எந்த ஓர் இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதாவது, கொவிட் சடலங்களை எரிப்பதற்கும், அதேபோல அடக்கம் செய்வதற்கும் உலக சுகாதார தாபனம் வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்த பின்னணியில், இலங்கை அந்தத் தெரிவை மேற்கொள்வதற்கு பிடிவாதமாக மறுப்புத் தெரிவித்திருந்த காரணத்தினாலேயே இக்கண்டனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
“இலங்கைக்கான ஐ நா வதிவிடப் பிரதிநிதி பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் கொவிட் சடலங்கள் எரியூட்டப்படுவதையிட்டு தனது கவலையை தெரிவித்திருந்தார். இவர்கள் அனைவரும் இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தையும், தனிப்பட்ட முறையில் என்னையும் குறை கூறினார்களே ஒழிய, இதற்கு வழிகாட்டுதல்களை வழங்கிய சுகாதாரத் துறை அதிகாரிகளை ஒன்றும் சொல்லவில்லை” என்று கோட்டாபய குறிப்பிடுவது வேடிக்கையானது.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ராஜதந்திர மரபொழுங்குகளின் (Diplomatic Protocols) பிரகாரம், ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது வேறு வெளிநாட்டு தூதுவராலயங்களோ மெத்திக்கா விதானகேயிடமோ அல்லது வேறு எவரேனும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளிடமோ இத்தகைய பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக கேள்விகளை கேட்க முடியாது. அத்தரப்புக்கள் ஒரு பிரச்சினையை சம்பந்தப்பட்ட நாட்டின் அரச தலைவரின் கவனத்துக்கு மட்டுமே எடுத்து வர முடியும். ஒரு நாடு என்ற முறையில் இலங்கை மேற்கொள்ளும் அனைத்துத் தீர்மானங்களுக்கும் இறுதியில் ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும்.
இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கும் கால கட்டம் (Timing) மிக முக்கியமானது.
அறகலயவின் பின்னர் (வடக்கு கிழக்கு தவிர்ந்த) தென்னிலங்கை நெடுகிலும் குறிப்பாக சிங்களப் பெருநிலத்தில் (Sinhala Heartland) இதுவரையில் இருந்திராத விதத்திலான ஓர் அரசியல் விழிப்புணர்வு தோன்றி வருவதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் நாடும், மக்களும் எதிர்கொண்ட 75 வருட கால சாபக்கேட்டிலிருந்து மீண்டு, ஒரு புதிய இலங்கையை உருவாக்குவதற்கு (இன, மத, மொழி பேதமில்லாமல்) எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற வலுவான குரல்கள் ஒலித்து வரும் வரலாற்றுத் தருணம் இது. சிங்கள புத்திஜீவிகளும், முற்போக்கு கலைஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தொடர்ச்சியாக அக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். புதிய வாக்காளர்களாக சேர்ந்து கொண்டிருக்கும் கிட்டத்தட்ட 20 இலட்சம் இளைஞர் யுவதிகளும் ‘புதியதோர் தேசம்’ என்ற கோஷத்துக்கு தமது முழுமையான ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், இந்த வரலாற்று ரீதியான எழுச்சித் தருணத்தை (Historic Momentum) முற்றிலும் உதாசீனம் செய்யும் இந்நூல், இலங்கையின் இன்றைய பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட நெருக்கடியை சிங்கள பௌத்தர்களின் இருப்பு எதிர்கொண்டு வரும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக மட்டுமே ஒரு குறுகிய பார்வையில் நோக்குகிறது:
“……. சிங்களவர்கள் – குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் மீண்டும் ஒரு முறை பின்னோக்கிச் சென்றிருக்கிறார்கள். பௌத்த கலாச்சாரம், வரலாறு மற்றும் பாரம்பரியங்கள் என்பன மீண்டும் ஒரு முறை சிறுமைப்படுத்தப்படும் ஒரு நிலை தோன்றியிருக்கிறது….. மகா சங்கத்தினர் பொதுவாக இழிவுபடுத்தப்பட்டு வருகின்றனர். தொல்லியல் மதிப்பைக் கொண்டிருக்கும் இடங்கள் பல்வேறு சுயநல அக்கறைக் குழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அரசியல்வாதிகள் சிங்களவர்களதும், சிங்கள பௌத்தர்களதும் உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்குப் பதிலாக, சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளை குறிவைத்து, அவர்களை சந்தோஷப்படுத்தும் காரியங்களிலேயே அதிக அளவுக்கு அக்கறை காட்டி வருகின்றார்கள்”. (பக். 177)
“…… உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாதவர்கள் மீது (அதாவது ராஜபக்சகள் மீது) அதற்கான பழியைச் சுமத்துவதன் விளைவாக, 2015 -– 2019 கால கட்டத்தில் இருந்து வந்ததை போல முழுவதும் முஸ்லிம் வாக்குகளில் தங்கியிருக்கும் ஒரு அரசாங்கம் எதிர்காலத்தில் அமைய முடியும். அவ்வாறு அமையும் அரசாங்கம் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதம் பரவுவதனை தடுப்பதற்கு எதனையும் செய்யப் போவதில்லை” என்று முடிவாகக் கூறுகிறது இந்நூல்.
இலங்கை மக்கள் ஏற்கனவே இத்தகைய ‘சதிகள்’ குறித்த ராஜபக்சகளின் பேச்சுக்களைக் கேட்டு சலித்துப் போயிருக்கிறார்கள். ‘மேலைத் தேச சதி’ , ‘NGO களின் சதி’ , ‘ டயஸ்போராக்களின் சதி’, ‘இந்தியாவின் சதி’, ‘இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் சதி’ என இப்பட்டியல் நீண்டு செல்கிறது. அரசியல்வாதிகள் தமது முறைகேடுகளையும், பலவீனங்களையும் மறைத்துக் கொள்வதற்கு இலகுவில் கையில் எடுக்கக் கூடிய ஆயுதம் இத்தகைய ‘சதிக் கோட்பாடுகள்’.
அந்தப் பின்னணியில், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் வெளிவந்திருக்கும் கோட்டாபய ராஜபக்சவின் இந்த நூல் சிங்கள சமூகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எத்தகைய அதிர்வலைகளையும் ஏற்படுத்தவில்லை. எவரும் அதை பெரிதாக பொருட்படுத்தவுமில்லை.
போதாக்குறைக்கு, 2022 மார்ச் 31 ஆந் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டாபய ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்ட போது, அவரைக் கொலை செய்வதற்காக பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திட்டமிட்டே அங்கு வந்து குழுமினார்கள் என்கிறார் அப்போது ஜனாதிபதியின் அந்தரங்கச் செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டார. தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய ஒரு பேட்டியில் அவர் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவித்துள்ளார். ஆனால், இத்தகைய அதிரடிப் பேட்டிகள் மூலம் நாட்டில் மீண்டும் ஒரு முறை இஸ்லாமோபோபியா அலையை தோற்றுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சியும் வெற்றியீட்டப் போவதில்லை.
மாறாக 21 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இடம்பெற்ற மிக முக்கியமான ஒரு வரலாற்றுத் திருப்பம் தொடர்பாக சிங்கள வலதுசாரிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஒரு பார்வை என்ற விதத்தில் மட்டுமே இந்நூலுக்கு ஒரு நூலக மதிப்புக் கிடைக்க முடியும்