எம்.எல்.எம்.மன்சூர்
கூரகல தொல்லியல் அமைவிடம் தொடர்பாக 2016 இல் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக மாநாடொன்றில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்தமைக்காக அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றம் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன் அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அந்த ஊடக மாநாட்டையடுத்து இரு முஸ்லிம் அரசியல்வாதிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நீதிமன்றத் தீர்ப்பு இலங்கையில் சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்த ஒரு முக்கியமான வெற்றியாக நோக்கப்படுகிறது. மேலும், தேர்தல்கள் அண்மித்து வரும் நிர்ணயகரமான ஒரு கால கட்டத்தில் இன வெறியையும், மத வெறியையும் தூண்டும் விதத்தில் பேச முற்படும் நபர்களுக்கும் இத்தீர்ப்பின் மூலம் ஒரு ‘கடுமையான செய்தி’ அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஞானசார தேரரையும் உள்ளிட்ட தீவிர சிங்கள – பௌத்த தேசியவாதிகளிடமிருந்து பொது வெளியில் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்திருக்கும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் இத்தீர்ப்பு பெருமளவுக்கு ஆறுதல் தரும் ஒரு விடயம் என்பதில் சந்தேகமில்லை.
ஞானசார தேரர் சுமார் பத்தாண்டு காலம் நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் அரசியல் யாப்பில் அனைத்துப் பிரிவினருக்கும் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் மத வழிபாட்டுச் சுதந்திரம் என்பவற்றை துளியும் பொருட்படுத்தாமல் மேற்கொண்டு வந்த ஒரு நீண்ட, கட்டற்ற பயணம் தர்க்க ரீதியில் எவ்வாறு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமோ அவ்வாறு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
அவர் தனது புகழின் உச்சத்தில் எவரும் தன்மீது கை வைக்க முடியாது என்ற அசையாத நம்பிக்கையில் உத்தியோகப் பற்றற்ற ஓர் அதிகார மையமாக செயல்பட்டு வந்தபோது 2016 இல் மதச் சிறுபான்மை சமூகமொன்றை இலக்கு வைத்து தெரிவித்த வன்மத்துடன் கூடிய ஒரு சில கருத்துக்கள் இப்பொழுது அவரை சிறைக்கு அனுப்பி வைத்திருக்கின்றன. ஆனால், அவருடைய அத்தகைய அடாவடிச் செயல்களுக்கு தொடர்ந்து உற்சாகமூட்டி, அவருக்கு ‘சங்க ரஜு’ (பிக்குகளின் அரசர்) எனப் பட்டமளித்து, அவரை கொண்டாடிய பல இலட்சக்கணக்கான ஆதரவாளர்களின் கரகோஷங்களோ அல்லது விசில் ஒலிகளோ இல்லாமல் அவர் மட்டும் தனியாக சிறைக்குச் செல்ல நேரிட்டிருப்பது பெரும் துயரம்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்த சந்தர்ப்பத்திலும், பின்னர் சிறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்திலும் வழமையாக அவருக்கென திரளும் பெருந்தொகையான ஆதரவாளர்கள் எவரும் அங்கிருக்கவில்லை. அண்மைக் காலமாக சிங்கள – பௌத்த சமூகத்தில் ஏற்பட்டு வந்திருக்கும் ஒரு சில முக்கியமான மாற்றங்களின் பிரதிபலிப்பு அது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக தேரரின் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. எப்படிப் போனாலும், எதிர்கால ஜனாதிபதி ஒருவர் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி, அவரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கான வாய்ப்பு இருந்து வரவில்லை என எவரும் அறுதியிட்டுக் கூற முடியாது. பலவீனமான ஒரு அரச தலைவர் அழுத்தங்களை எதிர்கொள்ளும் பொழுது அவ்வாறு செய்ய முடியும். முன்னர் நீதிமன்ற அவதூறு குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்டிருந்த ஒரு வழக்கில் ஞானசார தேரருக்கு ஆறு வருட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. 2019 மே மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெலிக்கடை சிறைச்சாலைக்குப் போய் அவரை சந்தித்து உரையாடியதும், அச்சந்திப்பின் மூன்று தினங்களின் பின்னர் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதும் பலருக்கு நினைவிருக்கலாம்.
எதிர்பார்த்தவாறே முஸ்லிம்கள் தரப்பில் இந்தத் தீர்ப்பு பெருமளவுக்கு வரவேற்கப்பட்டிருப்பதுடன், தாமதமாகவேனும் அவர் இவ்விதம் நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்பட்டிருப்பது, சட்ட அமுலாக்கல் அமைப்புக்கள் குறித்த ஒரு நம்பிக்கையை எடுத்து வந்திருக்கிறது. முஸ்லிம்களின் தரப்பில் முன்வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான சமூக ஊடக எதிர்வினைகளும் ‘இவருக்கு இது கிடைக்க வேண்டியது தான்’ என்ற தொனியிலேயே அமைந்திருந்தன.
ஆனால், வெறுமனே உணர்ச்சிவசப்படாமல், இன்றைய நாட்டு நிலைமையை துல்லியமாக கவனத்தில் எடுத்து, நிதான புத்தியுடனும், தூர நோக்குடனும் இவ்விடயத்தை அணுக வேண்டியிருக்கிறது. அந்த அடிப்படையிலேயே அது தொடர்பான முஸ்லிம்களின் எதிர்வினையும் அமைய வேண்டும். இங்கு மிக முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம் இக்குற்றம் இழைக்கப்பட்ட போது நாட்டில் நிலவிய சமூக, அரசியல் பின்புலம் (2016) மற்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் (2024) நிலவி வரும் சமூக, அரசியல் பின்புலம்.
இத்தீர்ப்பு வழங்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகி, இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் விதத்திலான தனது வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்பாக இலங்கை முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியிருந்தார் என்பதையும், தான் அவ்விதம் வெளியிட்ட வார்த்தைகள் மூலம் முஸ்லிம்களின் உள்ளங்களை புண்படுத்தியமைக்காக தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்திருந்தார் என்பதையும் இங்கு நினைவு கூர வேண்டும்.
‘என்னை எவரும் கட்டுப்படுத்த முடியாது; நாட்டின் சட்டங்களும் என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என்ற மமதையில் இலங்கை சமூகத்தில் அவர் தனக்கென உருவாக்கிக் கொண்டிருந்த இராட்சத பிம்பம் வெடித்துச் சிதறிய ஒரு தருணமாகவே முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோருவதற்கு அவர் நிர்ப்பந்திக்கப்பட்ட அத்தருணத்தை நோக்க வேண்டியிருக்கிறது.
“செயற்கையாக ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒரு பலூனை (Bubble) பின்தொடர்ந்து சென்ற ஞானசார தேரர் இப்பொழுது இந்த இடத்தில் வந்து நின்றிருக்கின்றார்” என்கிறார் அரசியல் ஆய்வாளர் ஜோர்ஜ் சமுவேல்.
அடுத்ததாக அவருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கும் இன்றைய வரலாற்றுத் தருணத்தையும் நாங்கள் கணக்கில் எடுக்க வேண்டும். பொதுபல சேனா இயக்கத்தையும் உள்ளிட்ட விதத்தில் ராவண பலய, சிங்ஹல ராவய மற்றும் மஹசென் பலகாய போன்ற தீவிர தேசியவாத அமைப்புக்கள் இப்பொழுது சிங்கள சமூகத்துக்குள் ஒரு கடுமையான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. ஞானசார தேரர் போன்ற தீவிரவாத புத்த பிக்குகளின் குரல்கள் கடந்த இரண்டு வருடங்களாக பெருமளவுக்கு வலுவிழந்து போயிருந்ததையும், முன்னரைப் போல அச்சமற்ற விதத்தில் வெறுப்புப் பேச்சுக்களை நிகழ்த்தி சிங்கள பௌத்த மக்களின் உணர்வுகளை தூண்டுவதற்கு உசிதமான ஒரு சூழல் இப்பொழுது நாட்டில் நிலவி வரவில்லை என்பதையும் அவர்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
சரியாக சொல்லப் போனால், அறகலயவின் பின்னர் சிங்கள சமூக ஊடகங்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சாதனை இது. ‘V8 வாகனங்களில் வந்திறங்கி, இன மத உணர்வுகளைத் தூண்டி, உங்களை உசுப்பேற்ற முயலும் துறவிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்’ என்ற வலுவான செய்தியை இச்சமூக ஊடகங்கள் இடையறாது பரப்பி வருகின்றன. ஒரு விதத்தில், அத்தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையிலேயே இலங்கை இஸ்லாமிய வெறுப்பின் முதன்மைக் குரல்களாக இருந்து வந்திருக்கும் ஞானசார தேரர் மற்றும் அத்துரலிய ரத்தன தேரர் போன்றவர்கள் இப்பொழுது ஒதுங்கி, மௌனித்திருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில், ஞானசார தேரர் ஒரு சுதந்திர நபராக வெளி உலகில் உலவினாலும் கூட, நாட்டில் இன மத ஒற்றுமையை சீர்குலைத்து, முஸ்லிம்களுக்கு மத்தியில் பதற்ற உணர்வுகளை தோற்றுவிக்கும் விடயத்தில் இனிமேல் அவரால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்பதே இன்றைய யதார்த்தம். ஒரு விதத்தில், வெளியில் இருக்கும் ஞானசார தேரரை விட, ‘உள்ளே இருக்கும்’ ஞானசார தேரர் ஆபத்தானவராக இருந்து வரக் கூடிய வாய்ப்பும் காணப்படுகிறது.
ஞானசார தேரரின் செயல்பாடுகளால் மிகவும் மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்த ஒரு சமூகம் என்ற முறையிலும், அவர் தலைமை தாங்கிய இயக்கத்தின் ஆசீர்வாதத்துடனும், அனுசரணையுடனும் அளுத்கமையிலும் (ஜூன் 2014), திகனவிலும் (மார்ச் 2018) கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்களால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்ட ஒரு சமூகம் என்ற முறையிலும் இந்த முக்கியமான தருணத்தில் – அதாவது கடந்த பத்தாண்டுகளில் முதல் தடவையாக முஸ்லிம்கள் மீது இழைக்கப்பட்ட ஒரு குற்றச்செயல் தொடர்பாக இலங்கை நீதிமன்றம் ஒன்று அவருக்கு சிறைத் தண்டனை வழங்கியிருக்கும் இத்தருணத்தில் -அத்தீர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இரு தெரிவுகள் இருந்து வருகின்றன.
முதலாவது தெரிவு:
– ‘இந்தத் தண்டனை அவருக்கு வேண்டும் ; நீதிமன்றம் வழங்கியிருக்கும் நான்கு வருட கால சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்கட்டும். இனிமேல் அவரோ அல்லது வேறு எவரேனும் நபர்களோ அவ்வாறான செயல்களில் ஈடுபடுவதை அது நிச்சயமாக தடுக்க முடியும்’ என்ற அணுகுமுறையின் அடிப்படையில் நோக்கி, அதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பது.
இரண்டாவது தெரிவு:
இத்தீர்ப்பு வழங்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகி முஸ்லிம்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரி, முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்த நேரிட்டமைக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்திருந்தமையை கருத்தில் கொண்டும்,
– தயாள குணம், பெருந்தன்மை மற்றும் மன்னிப்பு போன்ற உயரிய மனித விழுமியங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறும் ஒரு புனித மாதத்தில் நாங்கள் இருந்து வருகின்றோம் என்ற விடயத்தை கவனத்தில் எடுத்தும்,
அண்மைக் காலமாக இலங்கை பொதுச் சமூகத்தில் இன மத நல்லுறவுகள் மற்றும் சமூக நல்லிணக்கம் என்பன தொடர்பாக வெளிப்படையாக தென்படும் ஒரு சில வரவேற்கத்தக்க மாற்றங்களை கருத்தில் கொண்டும்,
இலங்கையில் பொதுவாக இத்தகைய சந்தர்ப்பங்களில் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டு வரும் (ஞானசார தேரர் பின்பற்றத் தவறிய) ‘வன்மத்தினால் ஒரு போதும் வன்மத்தை ஒழித்து விட முடியாது’ (வைரயென் வைரய நொசன்சிந்தே) என்ற புத்த போதனைக்கு மதிப்பளிக்கும் விதத்திலும்,
இறுதியாக ஆனால் மிக முக்கியமாக (இலங்கையில் ஞானசார தேரர் வகித்து வந்திருக்கும் வகிபாகத்துக்கு இணையான விதத்தில்) பல ஐரோப்பிய நாடுகளில் முனைப்பாக செயற்பட்டு வந்த தீவிர வலதுசாரி முஸ்லிம் வெறுப்பாளர்கள் (Far Right Muslim Haters) ஒரு சிலர் மத்தியில் நம்ப முடியாத விதத்தில் ஏற்பட்டிருக்கும் மனமாற்றத்தை கருத்தில் கொண்டும்,
(அண்மைய உதாரணங்கள்: நெதர்லாந்தின் தீவிர இஸ்லாமிய எதிர்ப்புக் கட்சியான சுதந்திர கட்சியின் (PVV) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் Van Klaveren மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர் Arnoud Doorm ஆகியோர் இஸ்லாத்தை தழுவியிருப்பது).
பொது நன்மைக்காகவும், ஒட்டுமொத்த இலங்கைப் பிரஜைகளினதும் பாதுகாப்பான, சுபீட்சமான எதிர்காலத்திற்காகவும் ஒரு சில சமரசங்களையும், விட்டுக்கொடுப்புகளையும் மேற்கொள்ள வேண்டிய ஒரு நிலைமாறு கால கட்டத்தில் (Transitionary Period) நாங்கள் இருந்து வருகிறோம்.
அவ்வாறு செய்வதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு குறுங்கால அடிப்படையிலோ அல்லது நீண்ட கால ரீதியிலோ எத்தகைய இழப்புக்களும் ஏற்படப் போவதில்லை. மறுபுறத்தில், தீவிரவாத சக்திகளின் செயற்பாடுகளை தணிப்பதற்கான ஓர் உத்தியாகவும் அது இருந்து வர முடியும்.
2012 இல் திடீரென பொதுபல சேனா இயக்கம் எழுச்சியடைந்து, முஸ்லிம்களுக்கு எதிராக வன்மப் பிரச்சாரங்களை முன்னெடுத்த பொழுது, ஒரு பிக்கு பின்பற்ற வேண்டிய ஒழுக்க சீலங்களை ஞானசார தேரர் மீறிச் செயற்படுவதை குறியீடாக காட்டும் பொருட்டு தனது சஞ்சிகையில் “மச்சான், ஞானசார!” என்ற தலைப்பில் ஓர் அட்டைப் படக் கட்டுரையை வெளியிட்டார் சேபால் அமரசிங்க. அதனையடுத்து அவர் பல தடவைகள் C I D அலுவலகத்தில் ஏறி இறங்கி, அலைக்கழிய வேண்டியும் நேரிட்டது.
இத்தீர்ப்பையடுத்து நன்கு பிரபல்யமான தனது யூடியூப் தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர் இந்த விடயத்தை 2016 இல் நாட்டில் நிலவிய நிலைமைகளின் கண்ணோட்டத்தில் அன்றி, இன்று 2024 இல் நிலவி வரும் மாறுபட்ட நிலைமைகளின் கண்ணோட்டத்தில் நோக்குவது அவசியம் என்றும், ஒரு விதத்தில் ஞானசார தேரர் நமது அனுதாபத்திற்கு உரியவர் என்றும் கூறியிருக்கின்றார். அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென சேபால் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், அவ்விதம் மன்னிப்பு வழங்கக் கூடிய வழிமுறைகள் எவையேனும் இருந்து வருகின்றனவா எனப் பரிசீலித்துப் பார்ப்பது விரும்பத்தக்கது என முடிவாக கூறுகிறார்.
அவ்வாறு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென வேறு எவரேனும் தரப்புக்களால் வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டால் அவற்றுக்கு எதிர்வினையாற்றாமல் இருப்பதே இது தொடர்பாக முஸ்லிம் சமூகத்திற்கு உள்ள இரண்டாவது தெரிவாகும்.