ஒரு காலத்தில் வடக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்தை தலைகநகராக கொண்டு வட மாகாணத்தில்தான் தமிழர்களின் கலாச்சாரம் ஓங்கி இருந்தது. இன்றுவரை அது தொடரப்பட்டாலும் அதனை சிதைக்க சிங்கள தேசியம் அல்லது பௌத்த இனவாத குழுக்கள் முயற்சி செய்து வருகிறது. சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற போர்வையில் இசை களியாட்டங்கள் மற்றும் இதர விழாக்கள் என மக்களை மாற்ற பல்வேறு முயற்சிகளை இலங்கையின் சிங்கள மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
அண்மையில் இடம்பெற்ற கச்சேரிகள் அதற்கு உதாரணம், இதனை செய்ய விடாமல் தடுக்க யாழ் முக்கியஸ்தர்கள் எடுத்த முயற்சிகள் என்ன? என்ற கேள்விக்கு விடைகள் இல்லை. நாம் இழந்த உரிமைகள், நமக்காக உயிர்நீத்தவர்களின் இலக்குகள், நமது எதிர்கால சந்ததிகளின் இருப்பு என்பவற்றை மறந்து நாம் செயற்படுகிறோமா என்ற கேள்வி எழுகிறது.
புலம்பெயர் தேசங்களிலும் இப்போது தமிழ் தேசிய உணர்வுகள் மங்கிவருவதை காணக்கூடியதாக உள்ளது. வெறுமனே புலி ஆதரவாளர்கள் என்ற சிந்தனை போக்குகளை தாண்டி நமது இலக்குகளுக்காக நாம் போராட வேண்டிஇருக்கிறது. ஈழம் தான் தீர்வு என்றால் அது கனவிலும் நடக்காது. மாறாக நமக்கு எதிராக நடக்கும் கலாச்சார சீர்கேடுகள், ஊடுருவியுள்ள போதை பொருள் வியாபாரம் என்பவற்றை தடுக்க வேண்டும். அதற்கு எதிராக சாத்வீக யுத்தம் செய்ய வேண்டும்.