2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்பு சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. போலியான தகவல்கள் பகிரப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட புதிய பல சட்டங்களை உள்ளடக்கி நிகழ்நிலை காப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ், பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கான அதிகாரம் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட புதிய ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவினால் இனங் காணப்பட்டு வழக்குத் தொடரப்பட்டால் உயர்ந்தபட்சமாக ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்க இச்சட்டம் இடமளிக்கிறது.
எனினும் இச் சட்டம் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் காணப்பபட்ட இரகசியத் தன்மையையும் அதனை அவசர அவசரமாக நிறைவேற்றியதையும் கண்டித்துள்ள அந் நிலையம் இச் சட்டத்தை கொண்டு வருவதன் பின்னால் உள்ள அரசாங்கத்தின் நோக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த சட்டம் கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களை அரசாங்கம் முழுமையாக கருத்தில் எடுக்க தவறியுள்ளதாகவும் கவலை வெளியிடடுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை தெரிவுசெய்து நடைமுறைப்படுத்தியதன் காரணமாக நிகழ்நிலை காப்பு சட்டம் அரசியலமைப்பிற்கு உகந்ததா என்ற கரிசனைகள் எழுந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டத்தின் செயல்முறை மற்றும் சாரத்தினை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டும் என்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் குறித்த கரிசனைகளுக்கேற்றவாறு உண்மையான சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்திய பின்னரே நிகழ்நிலை காப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் நடவடிக்கை சட்டமாஅதிபர் திணைக்களம் சட்டவரைவாளர் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதால் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு மாறாக அல்லது அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எது எப்படியிருப்பினும் இச் சட்டம் எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனை பெரும்பான்மை எம்.பி.க்கள் ஆதரித்துள்ள போதிலும் உண்மையிலேயே இச் சட்டத்தின் உள்ளடக்கத்தையும் பாரதூரத்தையும் விளங்கித்தான் அவர்கள் ஆதரித்தார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
அனைத்தையும் மீறி தற்போது சட்டம் அமுலுக்கு வந்துள்ளதால் சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியுள்ளது.
கடந்த காலங்களிலும் தற்போதும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் போன்றவற்றை தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் மீதும் அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் பெரும்பான்மை இன செயற்பாட்டாளர்கள் மீது பயன்படுத்தியது போன்று சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீதும் இச் சட்டம் பாயலாம். எனவேதான் இது விடயத்தில் அனைவரும் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அதேபோன்றுதான் இன மத முரண்பாடுகளைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரைப் பொறுத்த வகையில் இச் சட்டம் அவர்களுக்கு நல்லதொரு ஆப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எனினும் அதனை யார் மீது பயன்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இச் சட்டத்தின் வெற்றி தோல்வி தங்கியுள்ளது எனலாம்