மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அண்மையில் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. மட்டக்களப்பில் அமைந்துள்ள தனது தாயின் கல்லறை, வீதி அபிவிருத்தி பணிகளின் போது உடைக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், இதற்குப் பதிலாக தெற்கிலுள்ள தமிழர்களை துண்டு துண்டா வெட்டிக் கொல்வேன் என ஊடகங்கள் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இன, மத பதற்றங்களைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ள இக் கருத்து தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் பலரும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் இத் தேரருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அம்பிட்டியே சுமணரத்தின தேரருக்கு எதிராக ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதேபோன்று அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளியிட்ட கருத்து குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட அனைவரும் கவனத்திற்கு எடுத்து, தேரருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
மேலும் இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு – அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பொலிஸ் மாஅதிபரிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கப்பால் மேலும் பல சிவில் அமைப்புகளும் தனி நபர்களும் இத் தேரரின் கருத்துக்கு எதிராக முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.
குறித்த தேரர் கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடரிச்சியாக வெறுப்புணர்வை வெளிப்படுத்தி வருபவர். அதுமாத்திரமன்றி அரச அலுவல்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மதத்தலைவர்களுக்கு எதிராகவும் வன்முறைகளைப் பிரயோகித்து தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து கடந்த காலங்களி;ல் பலத்த அட்;டகாசங்களில் ஈடுபட்டவர். இவ்வாறு பௌத்த காவி உடை அணிந்த தேரர் ஒருவர் சட்டத்திற்கும் அப்பாற்பட்டு செயற்படுவதற்கு அனுமதி வழங்கியது யார்? இவரைக் கைது செய்து சட்டநடவடிக்கை எடுப்பதை தடுப்பது யார்? என்ற கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டும். குறித்த தேரரை உடனடியாக கைது செய்து ஜசிசிபிஆர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் அப்பாவிகள் பலரை பொய்க் குற்றச்சாட்டுகளின் கீழ் இச் சட்டத்தின் கீழ் கைது செய்த அரசாங்கம் இன்று இத் தேரருக்கு எதிராக இதனைப் பயன்படுத்த தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் சமூகங்களிடையே பதற்றத்தைத் தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. இரு வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்னால் இருந்த நூற்றுக் கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்ட மரத்தை பலாத்காரமான தறிப்பதற்கு சில சக்திகள் நடவடிக்கை எடுத்தன. அதுமாத்திரமன்றி தற்போது அப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான நிலப்பரப்பை அபகரிக்கும் முயற்சியிலும் சிலர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இது அங்கு நெருக்கமாக வாழ்ந்து வரும் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே விரிசலைத் தோற்றுவிக்கும் விவகாரமாக மாறியுள்ளது.
அதேபோன்று மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்திலும் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகள் தொடர்கின்றன. இ;வ்வாறான செயற்பாடுகளின் பின்னால் சில திட்டமிட்ட சக்திகள் இருப்பதை உணர முடிகிறது.
அடுத்த வருடம் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் அரசியல்கட்சிகளுக்கும் சில அரசியல்வாதிகளுக்கும் இனவாதம் தேவைப்படுகின்றது. கடந்த கால கசப்பான அனுபவங்கள் இதனையே உணர்த்துகின்றன. அவ்வாறான தீய அரசியல் சக்திகளுக்கு துணை போகின்றவராகவே அம்பிட்டிய சுமணரத்தின தேரரும் விளங்குகிறார். இந் நிலையில் இவரது வாய்க்குப் பூட்டுப் போட வேண்டியது அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களின் கடப்பாடாகும் என வலியுறுத்த விரும்புகிறோம்.