அரசாங்கம் தற்போது வர்த்தமானியில் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சட்டத்தரணிகளும் மனித உரிமை அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இச் சட்டமூலம் தற்போது அமுலிலிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கொடியது என இதனை வர்ணித்துள்ளனர்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறும், பயங்கரவாதத்துக்கு எதிரான எந்தவொரு சட்டத்தையும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் சகல தரப்பினருடனான விரிவான கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்குமாறும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கத்தினால் கடந்த மார்ச் 22 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் பற்றிய பரிந்துரைகளைத் தமக்கு அனுப்பிவைக்குமாறு கடந்த மே மாதம் 2 ஆம் திகதி நீதியமைச்சு அறிவித்தது. இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைபில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரான சட்டமூலம் கடந்த 15 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதுகுறித்த தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெளியிடப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது வெளியிடப்பட்டள்ள சட்டமூலத்தில் சில முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதான சுட்டிக்காட்டியுள்ள அந் நிலையம், மரணதண்டனை வழங்கலை நீக்கல், முதலிரு மாதங்களுக்குத் தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கப்படல் போன்ற திருத்தங்கள் அதில் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும் ‘பயங்கரவாதம்’ எனும் பதத்தின் கீழான குற்றங்களுக்கு விரிவான வரையறை வழங்கப்படல், நீதித்துறை மற்றும் அடிப்படை உரிமைகள்மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவகையில் நிறைவேற்றதிகாரத்துக்கு (ஜனாதிபதிக்கு) மட்டுமீறிய அதிகாரங்கள் வழங்கப்படல் மற்றும் இராணுவமயமாக்கல் என்பன உள்ளடங்கலாக கரிசனைக்குரிய உள்ளடக்கங்கள் இன்னமும் நீக்கப்படவில்லை என்றும் குறிப்பாக ஊரடங்கு உத்தரவுடன் தொடர்பட்ட உள்ளடக்கங்கள் தீவிர கரிசனையை ஏற்படுத்துபவையாகவும், அரசியலமைப்புக்கு முரணானவையாகவும் காணப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கான புதிய முயற்சியாக அமைந்திருக்கின்றது. இது கடந்த ஆண்டு ‘அரகலய’ என அறியப்படும் போராட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட ‘நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும்’ என்ற கோரிக்கைக்கு முற்றிலும் முரணானதாகக் காணப்படுவதாகவும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் அவசர முயற்சிகள் மற்றும் இவ்விடயம் தொடர்பில் அனைவரையும் உள்ளடக்கிய விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான போதிய கால அவகாசம் இன்மை என்பன குறித்த கரிசனைகளை மீண்டும் பதிவு செய்வதாகவும் எனவே இந்த உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறும், பயங்கரவாதத்துக்கு எதிரான எந்தவொரு சட்டத்தையும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் சகல தரப்பினருடனான விரிவான கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்குமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இதே கரிசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இச் சட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் கொடூரமானதாக உள்ளதாக வர்ணித்துள்ள அவர், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கவும் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதையுமே இச் சட்டம் இலக்காகக் கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இவ்வாறான சட்டங்கள் சர்வதேச நாடுகளுடனான உறவிலும் விரிசலை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த சட்டமூலத்தை தாம் எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு தரப்பினரும் இச் சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் இதே சட்டமூலம் முன்வைக்கப்பட்டபோது எழுந்த அதே எதிர்ப்பே தற்போதும் எழுவதை அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில் அரசாங்கம் இந்த எதிர்ப்புகளின் பின்னால் உள்ள நியாயங்களை கவனத்திற் கொண்டு, அரசாங்கத்தை எதிர்ப்பவர்களையன்றி உண்மையாகவே தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் பரப்புபவர்களுக்கு எதிராக பயன்படுத்தும் வகையில் இச் சட்டத்தை மீள வரைய வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். எதிர்வரும் நாட்களில் இக் கொடிய சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் மேலும் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கிறோம்