அமெரிக்கா இல்லா விட்டால் கனடா என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதாவது அமெரிக்கா கனடாவிலிருந்து பொருட்களை வாங்காவிட்டால் கனடா இல்லாமல் போய்விடும் என்றார். உண்மையாக சொன்னால் ஓர் மாநிலமாக கனடா சிறப்பாக செயற்படுகின்றது என்று கூறும் ட்ரம்ப் பொருளாதார வற்புறுத்தலின் மூலம் நாட்டை 51வது மாநிலமாக மாற்றுவதாக கனடாவை அச்சுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடா எங்களுக்காக கார்களை உருவாக்குவதை நாங்கள் உண்மையில் விரும்பவில்லை. நாங்கள் எங்கள் சொந்த கார்களை உருவாக்க விரும்புகிறோம் என்று கூறிய ட்ரம்ப், கனடாவிலிருந்து வாகன மற்றும் எரிபொருள் உட்பட அமெரிக்காவிற்கு எதுவும் தேவையில்லை என்று மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன் கனடாவிலிருந்து வரும் கார்கள் மீதான இறக்குமதி வரிகளை அதிகரிக்கலாம் என்றும் புதன்கிழமை பரிந்துரைத்தார். இவ்வாறு வரி விதிப்பதன் நோக்கம் உங்களுடைய கார்கள் எங்களுக்கு வேண்டாம் என மரியாதையாக சொல்வதுதான் என்றார்.
கனடாவின் உற்பத்தி அல்லது முதலீட்டில் குறைப்பு ஏற்பட்டால், ஒரு நிறுவனம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வரி இல்லாத வாகனங்களின் எண்ணிக்கையும் குறைவடையும் வாய்ப்புள்ளது. இதனிடையே கனடாவிற்குள் வர்த்தகத் தடைகளை நீக்குவதால் அமெரிக்காவின் கட்டணங்களில் இருந்து விடுபடுவதை விட அதிக நன்மைகளை கனடா பெற்றுக்கொள்ளலாம் என பிரதமர் மார்க் கார்னி கடந்தவாரம் கூறியிருந்தார். இதனடிப்படையில் ஜூலை 01 ஆம் திகதியிலிருந்து நாட்டின் 10 மாகாணங்கள் மற்றும் மூன்று பிரதேசங்களுக்குள் சுதந்திர வர்த்தகத்தை கார்னி இலக்காகக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் வரிகள் காரணமாக கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவுடன் கனடா கொண்டிருந்த உறவும் மாறிவிட்டது என்று கார்னி கூறினார்.
ட்ரம்பின் வர்த்தகப் போரும் கனடாவை 51வது மாநிலமாக மாற்றுவதற்கான அச்சுறுத்தல்களும் கனடியர்களை கோபப்படுத்தியுள்ளன, மேலும் கனேடிய தேசியவாதத்தில் ஒரு எழுச்சிக்கும் வழிவகுத்தன, இது லிபரல் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது.
வரவிருக்கும் கனேடிய தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்குமாறு புதன்கிழமை ட்ரம்பிடம் கேட்டபோது கருத்து தெரிவிக்க மறுத்த அவர் கார்னியை மிகவும் நல்லவர் என்று கூறியதுடன் அவர்களின் தேர்தலில் நான் ஈடுபடுவது பொருத்தமானது என்று நான் நினைக்கவில்லை எனவும் பதிலளித்தார்