எப்.அய்னா
கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் 8 தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின. இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த பூரண புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய தாக்குதலொன்று நடாத்த திட்டமிடப்படுவதாக இந்தியாவில் இருந்து அப்போதைய தேசிய உளவுத் துறை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் தகவல், அதற்கு முன்னரே அவருக்கு அவரின் கீழ் செயற்பட்ட அதிகாரிகள் ஊடாக சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறு இலங்கையின் எஸ்.ஐ.எஸ். எனப்படும் தேசிய உளவுத் துறை ஊடாக சேகரிக்கப்பட்ட தகவல், எந்த நடவடிக்கையும் எடுக்காது அந்த உளவுத்துறையின் உயர் மட்டத்தால் மூடி மறைக்கப்பட்டதா என்ற கேள்வி புதிய விசாரணைகளில் எழுந்துள்ளது.
சஹ்ரான் ஹாஷீம் கும்பலோடு உள்நாட்டில் உளவுத்துறையினர் ஏற்படுத்திக்கொண்டிருந்த நெருக்கம் மற்றும் உறவு உள்ளிட்டவை தொடர்பில் பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்து சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக, 2018 நவம்பர் மாதம் மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இரு பொலிஸாரை கொலை செய்து அவர்களின் ஆயுதங்களை சஹ்ரான் கும்பல் கொள்ளையிட்டமை 2019 ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் விசாரணையில் வெளிப்பட்டது. எனினும் அதுவரை அக்கொலைகள் விடுதலைப் புலி ஆதரவாளர்களால் செய்யப்பட்டதாகவே காண்பிக்கப்பட்டது. அவ்வாறு காண்பிப்பதற்காக போலியான சான்றுகளை உருவாக்க அரச உளவுச் சேவை மற்றும் இராணுவ உளவுப் பிரிவு ஆகியவை முன்னின்று செயற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. இராணுவ உளவுப் பிரிவு அப்போது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி. அதிகாரிகளை திசை திருப்ப வழங்கிய உளவு அறிக்கைகள் இது தொடர்பிலான சந்தேகத்தை உருவாக்கியிருந்தது.
அதன்படி இடம்பெறும் புதிய விசாரணைகளில் தற்போது, குறித்த பொலிஸாரின் கொலையை திசை திருப்ப ஜக்கட் ஒன்று அடங்கிய பாடசாலை பையை சம்பவ இடத்துக்கு அருகே மறைத்து வைத்து நாடகமாடியமை தொடர்பிலான விடயத்துக்காக அரச உளவுச் சேவையின் மட்டக்களப்பு பிராந்தியத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்டோர், குறித்த ஜக்கட் மீட்கப்பட முன்னைய நாள், அப்போதும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு தேடுதல் எனும் பெயரில் சென்று அதனை எடுத்திருப்பதாக நம்பப்படுகின்றது. பின்னர் அது வவுணதீவு பொலிஸார் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டு, அது தொடர்பில் சி.ஐ.டி.அதிகாரிகளுக்கும் அரச உளவுச் சேவையினாலேயே தகவலும் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் அம்பலமாகி வருகின்றது.
இது ஒரு புறம் இருக்க, அண்மையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட ஒரு புனைப் பெயரைக் கொண்ட உளவுத் துறை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த விசாரணைகளின் பின்னர், இந்தியா தகவல் வழங்க முன்னரே சஹ்ரான் கும்பல் தாக்குதல் நடாத்தப் போகும் தகவல்கள் இலங்கை உளவுத் துறையிடம் இருந்தது என நம்பும் வண்ணமான சில தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. அது தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகள் நடக்கின்றன.
குறிப்பாக சஹ்ரான் கும்பல் தாக்குதல் ஒன்றுக்கு தயாராவது குறித்த உளவுத் தகவல் சேகரிக்கப்பட்டு தேசிய உளவுத் துறையின் உயர் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட பின்னர் அதற்கு அப்பால் அந்த தகவல் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது முடக்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களுக்கு தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
இவ்வாறான பின்னணியில் தான் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் இலங்கையின் தேசிய உளவுத் துறைக்கும், இராணுவ உளவுப் பிரிவுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகின்றது.
இலங்கையின் உளவுத் துறை, இந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களோடு தொடர்புபட்டது என்பதை நம்புவதற்கான மற்றொரு முக்கிய ஆதாரமே குண்டுதாரி ஜமீல். 2015 ஆம் ஆண்டு முதல் ஜமீல் தொடர்பில் உளவுப் பிரிவுகள் கவனம் செலுத்தி வந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் தெரியவந்தது. இந்த தாக்குதலுக்கு முன்னர் ஜமீல் தொடர்பில் ஆராய்தல்/ விசாரணை செய்தல்/ கண்காணித்தல் ஆகியன, அரச உளவுச் சேவை, இராணுவ உளவு பணிப்பாளர் சபை, பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த விசாரணை பிரிவு ( டி.ஐ.டி.) ஆகிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு ஜமீல் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டாலும், அவர் மூலம் இந்தத் தாக்குதல் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகளைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது தாக்குதலைத் தடுக்கவோ முடியாமல் போயுள்ளமையானது உளவுத் துறைகளின் செயற்பாடு தொடர்பில் பாரிய சந்தேகங்களுக்கு வழி வகுக்கின்றது.
கடந்த 2019 ஏப்ரல் 20 அன்று மாலை, ஜமீல் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்திருந்தார். 2019 ஏப்ரல் 20 அன்று நள்ளிரவு 12 மணிக்குள் முன்பதிவு செய்யப்பட்ட அறைகளின் பட்டியலை குறித்த ஹோட்டலின் பாதுகாப்பு முகாமையாளர் 21 ஆம் திகதி காலை அரச உளவுச் சேவை மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கும் அனுப்பியிருந்தார். அதன்படி, அரச உளவுச் சேவை அன்று காலை, இந்தப் பட்டியலில் தாம் தகவல் சேகரித்துவரும் ஜமீல் இருந்ததை அடையாளம் காணாமை அல்லது கண்டும் காணாமல் இருந்தமை மிகப் பெரும் கேள்வியாக உள்ளது.
கடந்த 2019 ஏப்ரல் 21 அன்று காலை, ஜமீல் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்குத் திரும்பி (குண்டு வெடிக்காததாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ) ஹோட்டலை விட்டு வெளியேறுவதற்கு சற்று முன்பு, காலை 8.51 மணிக்கும் 8.54 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், அவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தமை சிசிடிவி கெமரா பதிவுகளில் உள்ளது. அவ்வாறு ஜமீலுக்கு அழைப்பினை எடுத்த அந்த நபர் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், பிள்ளையான் எனும் சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மெளலான செனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டில் கூறிய விடயங்களோடு இந்த தொலைபேசி அழைப்பை ஒப்பீடு செய்யும் போது அது இராணுவ உளவுத்துறையின் ஒருவரது அழைப்பாகவோ அல்லது அசாத் மெளலானாவின் அழைப்பாகவோ கூட இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.
அத்துடன் 2019 ஏப்ரல் 19 அன்று ஜமீல் தனது வீட்டை விட்டு வெளியேறுகின்ற சிசிடிவி காட்சிகளை, 2019 ஏப்ரல் 21 அன்று மாலை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அத்துடன் அந்தக் காட்சிகள் அடங்கிய டி.வி.ஆர் இயந்திரத்தை பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். அவ்வாறு எடுத்துச் செல்லும் போது 2019 மார்ச் 31 முதல் ஏப்ரல் 21 மாலை இயந்திரம் அகற்றப்படும் வரையிலான காட்சிகள் பதிவாகியிருந்துள்ளது. எடுத்துச் செல்லப்பட்ட DVR-இல் இருந்து 2019 ஏப்ரல் 19, அன்று காலை 8:00 மணி முதல் 2019 ஏப்ரல் 21, அன்று பிற்பகல் 2:30 மணி வரையிலான காணொளிப் பதிவுகள் மட்டும் இல்லை என்பது ஜனாதிபதி ஆணைக் குழுவில் தெரியவந்தது. DVR எடுத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டபோது குறித்த வீடியோ காட்சிகள் அழிந்திருக்கலாம் என்று அதிகாரிகள் ஆணைக் குழு முன் கூறியிருந்தனர். ஆரம்பத்தில் குறித்த காட்சிகள் இருந்துள்ள நிலையில், பின்னர் ஜமீல் வீட்டை விட்டு வெளியேறிய நாளிலிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இயந்திரத்தை அகற்றும் வரையிலான பகுதி மட்டும் அழிக்கப்பட்டுள்ளது. ஜமீலை வேவுபார்த்த அல்லது பின் தொடர்ந்த பயங்கரவாதம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவல்ல பிரதான நிறுவனமே பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு. எனவே அவர்களது இந்த நடவடிக்கை மிக்க சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
2019 ஏப்ரல் 21, அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களின் சிறிது நேரத்துக்கு பிறகு, இராணுவ உளவுத் துறை பணிப்பாளர், இராணுவ உளவுத் துறை அதிகாரிகள் குழுவை ஜமீலின் வீட்டிற்கு அனுப்பியதாக ஜனாதிபதி ஆணைக் குழுவில் தெரியவந்தது. அத்துடன் எபனிசர் பள்ளிவாசலுக்கு அருகில் ஜமீலைச் சோதனையிட்ட தனியார் பாதுகாப்பு அதிகாரியை, புலனாய்வு அதிகாரிகள் தொலைபேசியில் அழைத்து, ஹேவ்லாக் புத்தர் சிலைக்கு அருகில் வருமாறு அறிவுறுத்தியதாகவும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் தெரியவந்தது. அந்த தனியார் பாதுகாப்பு அதிகாரி அங்கு சென்றபோதும், சம்பந்தப்பட்ட குழுவினர் வராமையால், அவர்கள் ஆபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்ததாகவும், அந்த பாதுகாப்பு அதிகாரி உடனடியாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது.
ஜமீல் உறுப்பினராக இருந்த (மேலும் மூன்று குண்டுதாரிகள் உறுப்புரிமை வகித்த) ஜே.எம்.ஐ. அமைப்புக்கு சுரேஷ் சலே உளவுத்துறை பணிப்பாளராக இருந்த போது, இராணுவ உளவுத் துறை முகவர் ஒருவரை அனுப்பியுள்ளதுடன், அந்த முகவருக்கு ஜே.எம்.ஐ. உறுப்பினராக இருந்துகொண்டு அந்த அமைப்பில் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக வெளிநாட்டு உளவுத்துறை ஒன்றின் ஒத்துழைப்புடன் இராணுவ உளவுத்துறை பணிப்பாளர் சபையினால் வீடொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் சில கலந்துரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
2018 டிசம்பரில் சஹ்ரான் இந்தியாவிற்கு பயணம் செய்ததாக இராணுவ உளவுத்துறை பணிப்பாளர் சபை இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு கவுன்சிலுக்குத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஆணைக் குழுவில் தெரியவந்தது.
இந்த அனைத்து விடயங்களையும் ஒன்று சேர்த்து பார்க்கும்போது, இலங்கையின் தேசிய உளவுத்துறை மற்றும் இராணுவ உளவுத்துறை ஆகியன சஹ்ரான் ஹாஷிமின் கும்பல் தொடர்பில் பூரண அறிவுடன் செயற்பட்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம். அது மட்டுமல்லாமல், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த தகவல்களை முன் கூட்டியே நேரடியாக அவர்கள் பெற்றிருப்பதற்கான வாய்ப்புக்களும் மிக அதிகமாகும்.
அப்படியானால், இந்த உளவுத் துறைகள், தம் வசம் தகவல்களை வைத்துக்கொண்டும் குறித்த தாக்குதல்களை தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்காதது ஏன், யாரின் தேவைக்காக என்ற கேள்விக்கான பதிலே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் காட்டப் போகும் மிகப் பெரும் சான்றாக அமையப் போகிறது.