கனடாவிலிருந்து தரை மார்கமாக தமது நாட்டிற்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட வெகுவாகக் குறைந்துள்ளதாக அமெரிக்க சுங்கத் தரவுகள் காட்டுகின்றன.
பயணிகள், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் இடங்கள் அண்ணளவாக 26 சதவீதம் குறைந்துள்ளன. அதே நேரத்தில் எல்லையைக் கடக்கும் ட்ரக்குகளின் எண்ணிக்கை மார்ச் 2024 உடன் ஒப்பிடும்போது ஆறு சதவீதம் அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு கொவிட் – 19 பயணக்கட்டுப்பாடுகள் இருந்த காலத்தில் பதிவான தொகையை விட மிகக் குறைந்த தொகையே கடந்த மாதம் பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது அமெரிக்காவிற்குள் நில எல்லையைக் கடப்பவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் குறைந்துள்ளது.
அண்மைய மாதங்களில் அமெரிக்க குடியேற்றக் கட்டுப்பாடுகள் காரணமாக அச்சங்கள் அதிகரித்துள்ளன. இதனால் அமெரிக்காவிற்குச் செல்லும் பயணிகள் குறைந்துள்ளது. இவ்வாறு கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் பதட்டமான சூழ்நிலை காரணமாகவே பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதைவிட கனடாவின் அமெரிக்காவுக்கான பயண ஆலோசனையும் ஏப்ரல் 4 ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டிருந்தது. அதில் பயணிகள் மற்றும் அவர்களது இலத்திரனியல் உபகரணங்கள் என்பன எல்லைகளில் சோதனைக்குட்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் உள்நுழைவுகள் மறுக்கப்படுவதற்கான சந்தர்பங்களும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. ஒரு அமெரிக்க சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளர் கனேடிய வணிகத்தில் ஏற்பட்ட சரிவை “பேரழிவு” என்று விவரித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது