ஏப்ரல் 28 ஆந் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டியே வாக்களிப்பதற்காக சனிக்கிழமை தொடக்கம் திங்கட் கிழமை வரை காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை வாக்குச்சாவடிகள் செயற்படவுள்ளன. இதனடிப்படையில் நாடுமுழுவதும் வெள்ளிக்கிழமை வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்ட போது கனேடியர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டமை Elections Canadaவின் தவறுகளால் அன்றி மாறாக மக்கள் இம்முறை தேர்தலில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாலேயே இவ்வாறு நேர்ந்துள்ளது. வெள்ளி மற்றும் திங்கள் கனேடியர்களின் வேலை நாட்களாக இருந்தாலும் பெரும்பாலானவர்கள் தேர்தலுக்காக விடுமுறை எடுத்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கின்றனர்.
முன்கூட்டியே வாக்களிக்கத் திட்டமிடும் வாக்காளர்களுக்கு நீண்ட வரிசைகளைத் தவிர்க்க வேண்டுமாயின் காலை 10 மணிக்கு முன்பும் மாலை 4 மணிக்குப் பின்னரும் வாக்குச்சாவடிகளுக்கு செல்வது சிறந்தது. அத்துடன் தாமதங்களை தவிர்த்துக்கொள்ள வாக்காளர் தகவல் அட்டையினை கொண்டு செல்வது மிகவும் பொருத்தமானது.
கனடாவை 51 வது மாநிலமாக மாற்றப்போவதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளே மக்கள் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மோசமான காலநிலை, முடியாத உடல்நிலை என்பவற்றையும் பொருட்படுத்தாது பலர் அதிகாலையிலும் வாக்குச்சாவடியில் நிற்பதாக அறியமுடிகிறது.
கடந்த வாரம் 130,000 க்கும் மேற்பட்ட கனேடியர்கள் சிறப்பு வாக்குச்சீட்டு மூலம் ஏற்கனவே வாக்களித்துள்ளதாக Elections Canada தெரிவித்துள்ளது. இது 2021 தேர்தலில் பதிவான எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். தேர்தல் நாள் வரை அல்லது முன்கூட்டியே வாக்களிக்கும் நாள் வரை காத்திருக்க விரும்பாத கனேடியர்களுக்கு Elections Canada சிறப்பு வாக்குச்சீட்டுகளை வழங்குகிறது.
செவ்வாய்க்கிழமை, மருத்துவமனைகள் மற்றும் அவசர சிகிச்சை நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறும். அத்துடன் உள்ளூர் அலுவலகங்களில் வாக்களிப்பதற்கும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிப்பதற்கும் செவ்வாய்க்கிழமை இறுதி நாளாகும்.
மேலும், நீங்கள் எங்கு வாக்களிக்கலாம் என்பது பற்றிய தகவல்களை Elections Canada இனையத்தளத்திற்கு செல்வதன் மூலமோ அல்லது 1-800-463-6868 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ தெரிந்து கொள்ளலாம்