உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சரியாக ஆறு வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. உண்மையான சூத்திரதாரிகள் கண்டறியப்படவுமில்லை. இத்தாக்குதலின் சூத்திரதாரிகளை நீதியின் முன் நிறுத்துமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அழுத்தங்கள் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை சாதகமான பலன் எதுவும் கிட்டவில்லை.
கடந்த வருடம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இத் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என வாக்குறுதியளித்தது. 2024 ஒக்டோபரில் கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்குச் சென்று தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த ஜனாதிபதி சூத்திரதாரிகளை கண்டுபிடிப்போம் என உறுதியளித்திருந்தார். அது மாத்திரமன்றி 2025 ஏப்ரல் 21க்கு முன்னர் சூத்திரதாரியை கைது செய்வோம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
இந் நிலையில்தான் முக்கிய திருப்பமாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பிருப்பதாக பல்வேறு தரப்புகளும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன. இந்நிலையில்தான் அவரது கைது இடம்பெற்றுள்ளது. எனினும் அவர் நேரடியாக இத்தாக்குதலுடன் தொடர்பான வழக்குக்காக அன்றி வேறொரு படுகொலைச் சம்பவம் தொடர்பிலேயே கைதாகியுள்ளார். இந்நிலையில் இவரிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் புதிய தகவல்கள் ஏதும் வெளிப்படுமா என பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இத் தாக்குதலில் கிறிஸ்தவ சமூகமே நேரடியாகப் பாதிக்கப்பட்டது. 270க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தேவாலயங்கள் பாதிக்கப்பட்டன. இனங்களுக்கிடையிலான நல்லுறவு சீர்குலைக்கப்பட்டது. சுற்றுலாத்துறை முற்றாக பின்தள்ளப்பட்டது. மொத்தத்தில் இத் தாக்குதல் நாட்டை மிகப் பாரிய பின்னடைவுக்குள் தள்ளியது. எனினும் இதுவரை இத் தாக்குதலைத் திட்டமிட்டு வழிநடாத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியையும் பாதுகாப்புத்துறையுடன் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் சிலரையும் இத்தாக்குதல் தொடர்பில் குற்றவாளிகளாகக் கண்டறிந்த நீதிமன்றம், அவர்களை நஷ்டயீடு செலுத்துமாறு மட்டுமே பணித்தது. எனினும் இத் தாக்குதல் நடக்கும் வரை வாளாவிருந்த இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படவில்லை. அதேபோன்றுதான் சஹ்ரான் குழுவினரை வழிநடாத்திய சக்திகள் யார் என்பதும் வெளிப்படவில்லை. இத் தாக்குதலின் பின்னணியில் மூன்றாம் தரப்பொன்று இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் கூறியிருந்தார். அதேபோன்று இதன் சூத்திரதாரிகளை தெளிவாகக் கண்டறியும் வகையில் பலரும் பகிரங்கமாகவே சாட்சியங்களை வழங்கியிருக்கிறார்கள். எனினும் இதுவிடயத்தில் சாதகமான முன்னேற்றங்கள் எதனையும் காண முடியவில்லை.
துரதிஷ்டவசமாக இத் தாக்குதலை நடாத்தியவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறு தீவிரவாதக் குழுவினர் என்பதால் இதற்காக முஸ்லிம் சமூகம் பாரிய விலை கொடுக்க வேண்டி ஏற்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இவர்களில் கணிசமானோர் விடுவிக்கப்பட்டு விட்ட போதிலும் இன்னும் சிலர் 5 வருடங்களுக்கும் மேலாக சிறைகளில் உள்ளனர். விடுவிக்கப்பட்டவர்கள் கூட சமூகத்தில் மீண்டும் முன்னரைப் போன்று சகஜமாக இயங்க முடியாதளவுக்கு சந்தேகக் கண்கொண்டே நோக்கப்படுகின்றனர். புலனாய்வுப் பிரிவினர் இன்றும் அவர்களைக் கண்காணித்தே வருகின்றனர். இறுக்கமான பிணை நிபந்தனைகள் காரணமாக அவர்களால் சுதந்திரமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையும் உள்ளது. அந்த வகையில் உண்மையான சூத்திரதாரிகளை கண்டறிய வேண்டும் என்பதில் கர்தினாலையும் கத்தோலிக்க மக்களையும் போன்றே முஸ்லிம் சமூகமும் உறுதியாகவுள்ளது. எனவேதான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தது போன்று இத்தாக்குதலின் மர்மம் விரைவில் துலக்கப்பட வேண்டும். உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். இத்தாக்குதலை வைத்து அரசியல் செய்கின்ற நிலை மாற்றப்பட்டு உண்மைக்கு உண்மையாக ஆட்சியாளர்கள் நடக்க வேண்டும். குறிப்பாக இந்த விடயத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீதியாகவும் நேர்மையாகவும் கையாளுவார் என்ற மக்களின் நம்பிக்கை வீண்போகக் கூடாது என வலியுறுத்த விரும்புகிறோம்.