(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அந்தவகையிலேயே முஸ்லிம் இளைஞர் ஒருவரின் கைது இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தி முஸ்லிம்களை புறக்கணிக்கவில்லை. நாட்டில் இன மத மொழி பேதமின்றி அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் அரசாங்கமொன்றை நாம் தோற்றுவித்துள்ளோம். ஆனால் தோல்வி அடைந்த அரசியல் கட்சிகள் மீண்டும் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றன என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் ‘வெற்றி நமதே- ஊர் எமதே’ மக்கள் பேரணித்தொடர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த வெள்ளியன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் இலங்கை வரலாற்றில் விசேட தேர்தலாக அமைந்தது. குறிப்பாக இதற்கு முன்னர் நாட்டில் தேர்தல்கள் நடைபெற்ற போது மக்கள் இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிளவுபடுத்தப்பட்டு வாக்களித்துக் கொண்டிருந்தார்கள். கிழக்கு மக்கள் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு மக்கள் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் தெற்கு மக்கள் சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் வாக்களித்தார்கள்.
ஆனால் கடந்த பொதுத் தேர்தலில் என்ன நடந்தது? முழு நாடும் ஒன்று பட்டது. வடக்கு, கிழக்கு, தெற்கு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். அந்த தேர்தல் மூலம் மக்கள் ஒன்றுபட்டனர். ஆனால் தோல்வி அடைந்த அரசியல் கட்சிகள் மீண்டும் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றன. கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முஸ்லிம் மக்களை புறக்கணிப்பதாக போலியான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.
இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை எனக் கூறுகிறது. ஆனால் நாம் நாட்டில் இன, மத, மொழி பேதமின்றி அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் அரசாங்கமொன்றை தோற்றுவித்துள்ளோம்.
இதற்கு முன்னர் இந்த நாட்டில் திகன, அக்குறணை, அளுத்கம போன்ற பிரதேசங்களில் வன்முறைகள் இடம்பெற்றன. மத வழிபாட்டு தலங்கள் அழிக்கப்பட்டன. இந்த நாட்டில் இதுபோன்ற வன்முறைகள் இனி ஒருபோதும் இடம்பெறாது.
அண்மையில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. உண்மையில் என்ன நடந்தது? நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் முஸ்லிம் மக்கள் மிகவும் மோசமான வகையில் நடத்தப்பட்டனர். தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் முஸ்லிம் மக்கள் என்ன கூறினார்கள். இந்த நாட்டில் அடிப்படைவாத குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அது தொடர்பில் அரசாங்கத்துக்கு தெரிவித்தோம்.பொலிஸாருக்கு கூறினோம். ஆனால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதன் பலனையே நாம் அனுபவிக்கின்றோம் எனக் கூறினார்கள்.
எனவே அரசாங்கம் என்ற வகையில் நாம் தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளோம். இவ்வாறான சம்பவங்கள் இந்த நாட்டில் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. அறுகம்பை தாக்குதல் இடம்பெறவுள்ளதாக தகவல் கிடைத்தது. இரவு பகல் பாராது நாம் அதற்காக முழுமூச்சாக செயற்பட்டோம். அறுவரை கைது செய்தோம். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே நாம் அதனைச் செய்தோம்.
அதேபோன்றே முஸ்லிம் இளைஞரையும் கைது செய்தோம். அசம்பாவிதம் இடம்பெறுவதற்கு முன்னர் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவே அரசாங்கம் உள்ளது. அசம்பாவிதம் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பில் செயற்படுவதற்கு அரசாங்கம் ஒன்று தேவையில்லை அல்லவா? அசம்பாவிதம் இடம்பெறுவதற்கு முன்னர் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இது முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கைது அல்ல. நாட்டில் அமைதியை நிலைநாட்டவே அதனை செய்தோம் என்றார்