எப்.அய்னா
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் நடந்து எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் 6 வருடங்கள் பூர்த்தியாகின்றன. எனினும் இதுவரை அத்தாக்குதல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு முதல் ஆட்சிக்கு வந்த அத்தனை பேரும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு நீதியை பெற்றுத்தருவதாகவும், அதன் பின்னணியில் செயற்பட்ட மறை கரத்தை கண்டுபிடிப்பதாகவும் தெரிவித்த போதும், இதுவரை அது நடக்கவே இல்லை.
இவ்வாறான நிலையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் சதித் திட்டத்தில், பிள்ளையான் எனும் சிவனேசதுறை சந்திரகாந்தனின் பங்கு இருப்பதாக அவரின் ஊடக செயலாளராக இருந்த ஹன்சீர் அசாத் மெளலானா செனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றினை மையப்படுத்தி பலரும் கேள்வி எழுப்பலாயினர். உண்மையில் ஹன்சீர் அசாத் மெளலானா, செனல் 4 தொலைக்காட்சிக்கு அந்த விடயங்களை தெரிவிக்க முன்னர் ஜெனீவா மனித உரிமைகள் அமைப்புக்கு எழுத்து மூலம் அதனை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்பிருப்பதாக பேசப்பட்டது.
குறிப்பாக பிள்ளையான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் இருந்தபோதே இந்த தாக்குதல் பதிவாகியது. எனினும் பிள்ளையான் குறித்த தாக்குதல் தொடர்பில் உயிர்த்த ஞாயிறு தினம் நடந்த தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு எழுத்து மூலம் பல கடிதங்களை முன்வைத்து பல்வேறு விடயங்களை தெரிவித்திருந்தார். அத்துடன் அதுகுறித்து புத்தகம் ஒன்றினையும் எழுதியிருந்தார். எனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் ஏதேனும் ஒன்றை அல்லது பல விடயங்களை அறிந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. அதுகுறித்து விசாரிக்கப்படல் வேண்டும்.
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக இருந்த பேராசிரியர் ரவீந்ரநாத்தின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கல் தொடர்பில் பிள்ளையான் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் தொடர்பு குறித்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்திலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதனை ஒத்த கருத்துக்களை தேர்தல் மேடைகளிலும் குறிப்பிட்டிருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட சிலர் குறித்து சி.ஐ.டி. புதிய விசாரணைகளில் கவனம் செலுத்தியுள்ள நிலையில், இதுவரை பிள்ளையான் அத்தாக்குதல் குறித்த விடயங்களை வெளிப்படுத்தவில்லை என சி.ஐ.டி.யின் உள்ளக தகவல்கள் தெரிவித்தன. எனினும் பிள்ளையானின் தொடர்புகள் குறித்து விஷேட விசாரணைகள் வேறு சாட்சியங்கள் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இவ்வாறான நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தொலைபேசி ஊடாக, பாதுகாப்பு உத்தியோகத்தரை பேசச் செய்து பிள்ளையானிடம் பேச அனுமதி கோரிய சம்பவமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிள்ளையானின் சட்டத்தரணியாக செயற்பட்ட விடயமும் மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பில் பல்வேறு வதந்திகளும் பரவிவரும் பின்னணியில், மருதானை சமூக, சமய மையத்தின் ஆய்வுக்குழு ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டது. 5 பிரதான விடயங்களை மையப்படுத்தி அந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், முன்னெடுக்க வேண்டிய விசாரணைகள் தொடர்பில் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் அவ்வப்போது தனித்தனியாக விடிவெள்ளி பிரசுரித்திருந்த போதும், இதுவரையிலான சி.ஐ.டி.யின் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்படாத விடயங்கள் தொடர்பிலும் அதில் தீர்க்கப்படவேண்டிய விடயங்கள் குறித்தும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் விசாரணைகளில் தீர்க்கப்பட வேண்டிய மிக முக்கிய விடயம், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் போது, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்ய முயற்சித்து பின்னர் தெஹிவளை ட்ரொபிகல் இன் தங்குவிடுதியில் குண்டு வெடித்து மரணமடைந்த அப்துல் லதீப் மொஹம்மட் ஜமீல் குறித்த விவகாரமாகும். மருதானை சமூக சமய மையத்தின் அறிக்கையில் இது குறித்து விரிவாக கூறப்பட்டுள்ள நிலையில், இக்கட்டுரையில் அந்த விடயங்கள் அவ்வாறே உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு முதல் ஜமீல் தொடர்பில் உளவுப் பிரிவுகள் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் தெரியவந்தது. இந்த தாக்குதலுக்கு முன்னர் ஜமீல் தொடர்பில் ஆராய்தல்/ விசாரணை செய்தல்/ கண்காணித்தல் ஆகியன, தற்போது பதிவாகியுள்ள தகவல்கள் பிரகாரம் அரச உளவுச் சேவை, இராணுவ உளவு பணிப்பாளர் சபை, பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த விசாரணை பிரிவு (ரி.ஐ.டி.) ஆகிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரையான தகவல்களின் படி, மேலே குறிப்பிடப்பட்ட மூன்று நிறுவனங்கள்/துறைகளால் ஜமீல் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டாலும், அவர் மூலம் இந்தத் தாக்குதல் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகளைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது தாக்குதலைத் தடுக்கவோ முடியாமல் போயுள்ளது. அத்துடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான ஜனாதிபதி குழு, நாடாளுமன்றத் தெரிவுக் குழு மற்றும் வேறு மூலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில், ஜமீல் தொடர்பாக பின்வரும் விடயங்கள் குறித்து மேலதிக விசாரணை தேவைப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் 8 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், முந்தைய நாள் நள்ளிரவு 12 மணி வரையில் ஹோட்டலுக்கு வந்தவர்களின் பெயர்ப் பட்டியலை அரச உளவுச் சேவை மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு அனுப்புவது ஒரு பொதுவான நடைமுறை என தாஜ்சமுத்ரா ஹோட்டலின் பாதுகாப்பு முகாமையாளர், ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியமளித்தார். 2019 ஏப்ரல் 20 அன்று மாலை, ஜமீல் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்தார். 2019 ஏப்ரல் 20 அன்று நள்ளிரவு 12 மணிக்குள் முன்பதிவு செய்யப்பட்ட அறைகளின் பட்டியலை குறித்த ஹோட்டலின் பாதுகாப்பு முகாமையாளர் 21 ஆம் திகதி காலை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பியிருந்தார். அதன்படி, அரச உளவுச் சேவை அன்று காலை, இந்தப் பட்டியலில் தாம் தகவல் சேகரித்துவரும் ஜமீல் என்ற நபரை அடையாளம் கண்டதா, அப்படி அடையாளம் கண்டிருப்பின் அது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விசாரணைகள் அவசியமாகும்.
ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்யும் அனைத்து விருந்தினர்களின் தேசிய அடையாள அட்டை எண்களையும் ஹோட்டலின் தரவுத்தளத்தில் உள்ளிடுவது பொதுவாக கட்டாயமாகும் என்று ஹோட்டலின் பாதுகாப்பு முகாமையாளர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்தார். இருப்பினும், ஜமீலின் தேசிய அடையாள அட்டை எண் தரவு கட்டமைப்பில் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது. ஜமீலின் தேசிய அடையாள அட்டை எண் உள்ளிடப்படவில்லையா? அல்லது அது உள்ளிடப்பட்ட பிறகு யாராவது அதை நீக்கிவிட்டார்களா?, தேசிய அடையாள அட்டை எண் முதலில் உள்ளிடப்படவில்லை என்றால், அது ஒரு கவனக்குறைவால் நடந்ததா? அல்லது வேறு ஒருவரின் தூண்டுதலின் பேரில் அல்லது செல்வாக்கின் அடிப்படையில் செய்யப்பட்டதா?, தேசிய அடையாள அட்டை எண் தரவுத்தளத்தில் உள்ளிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டிருந்தால், அதை யார் செய்தார்கள்?, என்ன காரணத்திற்காக அவ்வாறு செய்தனர்? என்பது குறித்து விசாரணை செய்யப்படல் வேண்டும்.
2019 ஏப்ரல் 20 அன்று ஜமீல் ஹோட்டலுக்கு வருவதற்கு முன்பு, 2019 ஏப்ரல் 17 அன்று சந்தேகத்திற்கிடமான ஒருவர் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்குச் வந்து சென்றதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன. பகல் 1.45 மணியளவில் வந்த அவர் இன்பாஸ் என பின்னர் அடையாளம் காணப்பட்டார். அதன்படி, ஏப்ரல் 17 அன்று இன்பாசுக்கு மேலதிகமாக, தாக்குதலுக்கு முன்னும் பின்னும் சந்தேகத்திற்கிடமான வேறு நபர்கள் ஹோட்டலுக்கு வந்தார்களா என்பது குறித்து முறையான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை. எனவே இது குறித்து முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
ஜமீல் 2019 ஏப்ரல் 20 அன்று மாலை 4.17 மணியளவில் ஒரு அறையை முன்பதிவு செய்து, ஹோட்டல் அறைக்குச் சென்று பின்னர் ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் 2019 ஏப்ரல் 21 அன்று காலையிலேயே ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார். அவ்வாறு அவர் காலையில் வந்து, அறைக்கு அருகே சென்று திரும்பி வந்து, அறையைத் திறக்க புதிய அட்டையைக் கேட்டதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் தெரியவந்தது. அப்படியானால் அவருக்கு முதலில் வழங்கப்பட்ட அட்டைக்கு என்ன ஆனது என்பது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அதன்படி, இந்த விடயம் குறித்தும் விசாரணை அவசியமாகும்.
2019 ஏப்ரல் 21 அன்று காலை, ஜமீல் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்குத் திரும்பி (குண்டு வெடிக்காததாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ) ஹோட்டலை விட்டு வெளியேறுவதற்கு சற்று முன்பு, காலை 8.51 மணிக்கும் 8.54 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், அவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததை சிசிடிவி கெமரா பதிவுகளில் உள்ளது. அவ்வாறு ஜமீலுக்கு அழைப்பினை எடுத்த அந்த நபர் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அது குறித்தும் விசாரிக்கப்படல் வேண்டும்.
ஜமீல் தனது மனைவி பாத்திமா ஷிபானா உமர்கத்தாபுக்கு 2019 ஏப்ரல் 20 அன்று காலை 8.30 மணிக்கு ஹிஜ்ரா செல்வதாகக் கூறி ஒரு குரல் பதிவை அனுப்பியிருந்ததாக விசாரணையின் போது ஷிபானா உமர்கத்தாப் கூறியிருந்தார். அவ்வாறு அனுப்பப்பட்டதாக ஷிபானா உமர்கத்தாப் கூறிய குரல் பதிவுகளில் பின்னணியில் சிறு குழந்தைகளின் குரல்கள் கேட்கின்றன என்பது ஜனாதிபதி ஆணைக் குழுவில் தெரியவந்தது. அந்தக் குரல் பதிவின் பின்னணியில் கேட்கும் குரல்களுக்கு உரிய குழந்தைகள் யார்?, அந்தக் குரல் பதிவுகள் எங்கு, எந்தத் திகதியில் பதிவு செய்யப்பட்டன என்பதை விசாரணை செய்ய வேண்டியது அவசியமாகும்.
குறித்த குரல் பதிவை அனுப்பியதாக கூறப்படும் தொலைபேசி எண்ணை தான் அழித்துவிட்டதாக விசாரணையின் போது ஜமீலின் மனைவி ஷிபானா உமர்கத்தாப் கூறியுள்ளார். அத்துடன் ஜமீலின் வழக்கமான தொலைபேசி எண்ணிலிருந்து அந்த குரல் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அப்படியானால், இந்தக் குரல் பதிவு ஜமீல்தான் அனுப்பினாரா?, அல்லது முன்னர் பதிவு செய்யப்பட்ட குரல் பதிவு வேறொரு நபரால் அனுப்பப்பட்டதா?, எந்த எண்ணிலிருந்து அது அனுப்பப்பட்டது? என்பது குறித்து விசாரணைகளில் வெளிப்படுத்தப்படாததால், அது குறித்தும் விசாரணை அவசியமாகும்.
2019 ஏப்ரல் 19 அன்று ஜமீல் தனது வீட்டை விட்டு வெளியேறுகின்ற சிசிடிவி காட்சிகளை, 2019 ஏப்ரல் 21 அன்று மாலை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அத்துடன் அந்தக் காட்சிகள் அடங்கிய டி.வி.ஆர் இயந்திரத்தை பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். அவ்வாறு எடுத்துச் செல்லும் போது 2019 மார்ச் 31 முதல் ஏப்ரல் 21 மாலை இயந்திரம் அகற்றப்படும் வரையிலான காட்சிகள் பதிவாகியிருந்துள்ளது. எடுத்துச் செல்லப்பட்ட DVR-இல் இருந்து 2019 ஏப்ரல் 19, அன்று காலை 8:00 மணி முதல் 2019 ஏப்ரல் 21, அன்று பிற்பகல் 2:30 மணி வரையிலான காணொளிப் பதிவுகள் மட்டும் இல்லை என்பது ஜனாதிபதி ஆணைக் குழுவில் தெரியவந்தது. DVR எடுத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டபோது குறித்த வீடியோ காட்சிகள் அழிந்திருக்கலாம் என்று அதிகாரிகள் ஆணைக் குழு முன் கூறியிருந்தனர். ஆரம்பத்தில் குறித்த காட்சிகள் இருந்துள்ள நிலையில், பின்னர் ஜமீல் வீட்டை விட்டு வெளியேறிய நாளிலிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இயந்திரத்தை அகற்றும் வரையிலான பகுதி மட்டும் முழு சிசிடிவி காட்சிகளிலிருந்தும் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை விசாரிக்க வேண்டும். அழிக்கப்பட்ட காட்சிகளை மீட்டெடுக்க வேண்டும். மேலும் அந்த காட்சிகளின் அடிப்படையில், ஜமீல், ஜமீலின் வீட்டில் இருந்தவர்கள் மற்றும் இந்தக் காலகட்டத்தில் அந்த வீட்டிற்கு வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
2019 ஏப்ரல் 20 அன்று மாலை தாஜ் ஹோட்டலுக்குச் சென்று அங்கிருந்து வெளியேறியுள்ள ஜமீல், பின்னர் பாணந்துறையில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று, அங்கிருந்து சுமார் 7 மணியளவில் புறப்பட்டு, மாலை 7.33 மணியளவில் கல்கிஸ்ஸை, டெம்ப்லஸ் வீதியில் உள்ள ஸ்பேம் கோபுரத்திற்கு மேலும் இருவருடன் சென்றுள்ளார். எனினும் அவ்வாறு உடன் சென்ற இரண்டு பேர் யார் என்பது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. எனவே, அது தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
2019 ஏப்ரல் 21 அன்று, ஜமீல், எபனைசர் வீதி பள்ளிவாசலுக்குள் இருந்தபோது, அவர் கையில் ஒரு கையடக்கத் தொலைபேசி இருப்பதை பள்ளிவாசலின் மௌலவி கவனித்துள்ளார். இருப்பினும், அவர் பள்ளிவாசலை விட்டு வெளியேறும்போது அவரைச் சோதித்த பிறகு, அமீர் என்ற தனியார் பாதுகாப்பு அதிகாரி, அவரிடம் கையடக்கத் தொலைபேசி இருக்கவில்லை என்று கூறியுள்ளார். எனவே, அவர் பள்ளிவாசலை விட்டு வெளியேறும்போது பள்ளிவாசலுக்குள் இருக்கும்போது வைத்திருந்த கையடக்கத் தொலைபேசி ஏன் இருக்கவில்லை?, அவரிடம் இருந்த கையடக்கத் தொலைபேசியை யாராவது கையகப்படுத்தினரா?, அப்படி கையக்கப்படுத்தி இருப்பின் அது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஜமீல் வைத்திருந்த கையடக்கத் தொலைபேசியும், எபனைசர் வீதி பள்ளிவாசலில் ஜமீல் வைத்திருந்த கையடக்கத் தொலைபேசியும் ஒன்றா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
ஒருவர் வரும்வரை பள்ளிவாசலில் காத்திருப்பதாக ஜமீல் கூறியதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்தும், அவர் யாருக்காகக் காத்திருந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
2019 ஏப்ரல் 21, அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களின் சிறிது நேரத்துக்கு பிறகு, இராணுவ உளவுத் துறை பணிப்பாளர், இராணுவ உளவுத் துறை அதிகாரிகள் குழுவை ஜமீலின் வீட்டிற்கு அனுப்பியதாக ஜனாதிபதி ஆணைக் குழுவில் தெரியவந்தது. அத்துடன் எபனைசர் பள்ளிவாசலுக்கு அருகில் ஜமீலைச் சோதனையிட்ட தனியார் பாதுகாப்பு அதிகாரியை, புலனாய்வு அதிகாரிகள் தொலைபேசியில் அழைத்து, ஹேவ்லாக் புத்தர் சிலைக்கு அருகில் வருமாறு அறிவுறுத்தியதாகவும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் தெரியவந்தது. அந்த தனியார் பாதுகாப்பு அதிகாரி அங்கு சென்றபோதும், சம்பந்தப்பட்ட குழுவினர் வராமையால், அவர்கள் ஆபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்ததாகவும், அந்த பாதுகாப்பு அதிகாரி உடனடியாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படாததால், இந்த விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஜமீல், சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் 2019 ஏப்ரல் 20 ஆம் திகதி பகல் நேரம், துப்பாக்கி மற்றும் வேறு ஆயுதங்களை ஏந்திய வண்ணம் பதிவு செய்ததாக கூறப்படும் காட்சிகளில் உள்ள ரீ 56 துப்பாக்கிக்கு என்ன நடந்தது, அதனை எங்காவது ஒரு இடத்துக்கு எடுத்துச் சென்று கைவிட்டிருப்பின் அது யாரால் என்பது தொடர்பில் விசாரணை நடாத்தப்படல் வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்னர் கல்முனை பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் அதிகாரிகளினால் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் காட்சிகளை குறித்த பகுதிக்கு யார் எடுத்துச் சென்றார்கள் என்று கேட்டபோது, மட்டக்களப்பு குண்டுதாரி இவ்வாறு அதை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்தனர். இருப்பினும், மட்டக்களப்பு குண்டுதாரி தொடர்பான விசாரணையில் அது குறித்து வெளிப்படுத்தப்படவில்லை. எனவே, இந்த காட்சிகள் அடங்கிய உபகரணங்களை குறித்த பகுதிக்கு யார் எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், இந்த காணொளி பதிவுகளின் பின்னணியில் காட்டப்பட்டுள்ள பதாகை 2019 ஏப்ரல் 26 அன்று கல்முனை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பதாகையை குறித்த பகுதிக்கு யார் கொண்டு சென்றார்கள் என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
ஜமீல் உறுப்பினராக இருந்த (மேலும் மூன்று குண்டுதாரிகள் உறுப்புரிமை வகித்த) ஜே.எம்.ஐ. அமைப்புக்கு சுரேஷ் சலே உளவுத்துறை பணிப்பாளராக இருந்த போது, இராணுவ உளவுத்துறை முகவர் ஒருவரை அனுப்பியுள்ளதுடன், அந்த முகவருக்கு ஜே.எம்.ஐ. உறுப்பினராக இருந்துகொண்டு அந்த அமைப்பில் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக வெளிநாட்டு உளவுத்துறை ஒன்றின் ஒத்துழைப்புடன் இராணுவ உளவுத்துறை பணிப்பாளர் சபையினால் வீடொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சில கலந்துரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஜே.எம்.ஐ. உறுப்பினராக முகவர் ஒருவரை அனுப்பியிருந்த நிலையிலும், அவர்களின் திட்டம் தொடர்பில் வெளிப்படுத்திக்கொண்டு அவற்றை தடுக்க முடியாமல் போனமை தொடர்பில் முறையான விசாரணைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. எனவே அதுகுறித்தும் விசாரணை செய்யப்படல் வேண்டும்.
2018 டிசம்பரில் சஹரான் இந்தியாவிற்கு பயணம் செய்ததாக இராணுவ உளவுத்துறை பணிப்பாளர் சபை இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு கவுன்சிலுக்குத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஆணைக் குழுவில் தெரியவந்தது. சஹரான் உண்மையில் இந்தியாவிற்குச் சென்றாரா, அல்லது சம்பந்தப்பட்ட மாதத்தில் இலங்கையில் சஹரான் மேற்கொண்ட நடவடிக்கைகள் (பேச்சுவார்த்தைகள் உட்பட) பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இந்தக் கதை ஜோடிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். அவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தால், எங்கு சென்றார், யாரைச் சந்தித்தார் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
ஜமீல் உறுப்பினராக இருந்த ஜே.எம்.ஐ அமைப்பின் உறுப்பினரான மொஹம்மட் இல்ஹாமின் மனைவி பாத்திமா ஜிப்ரியா, மகவில வீதி வீட்டில் நடத்தியதாக கூறப்படும் குண்டு வெடிப்பில், அவரது மூன்று குழந்தைகள் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்னர் குறித்த வீட்டில் இருந்து ஒருவர் தப்பிச் சென்றதாக பேச்சு அடிபட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணையின் போது கூறப்பட்டது. அப்படி ஒருவர் தப்பி ஓடினாரா?, அப்படியானால், அது யார்?, அந்த வீட்டில் அவர் என்ன செய்தார்? உள்ளிட்டவை குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மேற்கூறிய பாத்திமா ஜிப்ரியாவின் கையடக்கத் தொலைபேசி எரிந்த நிலையில் வேறொரு வீட்டில் கைவிடப்பட்டிருந்த நிலையில் விசாரணையாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தொலைபேசி ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
ஜமீலும் இல்ஹாமும் 2014 ஆம் ஆண்டு முதல் பழகத் தொடங்கியதாகவும், ஜமீலின் அறிமுகத்துக்கு பிறகு இல்ஹாம் மாறிவிட்டதாகவும், அதனால் இல்ஹாமின் தந்தையான இப்ராஹிம் என்ற தொழிலதிபரால் ஜமீல், இல்ஹாமின் வீட்டிற்கு வருவதைத் தடை செய்திருந்ததாகவும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் தெரியவந்தது. இந்தக் காலகட்டத்தில் ஜமீல் மற்றும் இல்ஹாம் மற்றும் அவர்களது குழுவினர் மருதானையில் உள்ள இலங்கை தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாசலுக்கு சென்றுள்ளமையும் தெரியவந்தது. கட்டுவாபிட்டிய குண்டுதாரி ஹஸ்தூன் மற்றும் அவரது மனைவி புலஸ்தினி மகேந்ரன் ஆகியோரின் ஆரம்பமும் தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாசலாகும். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் தலைவர் அப்துல் ராசிக்கை, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவின் அலுவலகத்திற்கு வரவழைத்து இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், பாதுகாப்பு அமைச்சுக்கும் அவர் அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்தது. பொது வெளியில் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தனவும் இதை உறுதிப்படுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயல்பாடுகளுக்கும் இடையிலான தொடர்பு 2013 ஆம் ஆண்டிலிருந்து முழுமையாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அத்தகைய விசாரணை எதுவும் நடைபெறவில்லை. எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மர்மமாக உள்ள அபூ ஹிந்
அத்துடன் அபூ ஹிந் இந்த தாக்குதலைத் தூண்டியிருக்கலாம் என்று தேசிய உளவுத்துறை பணிப்பாளராக இருந்த நிலந்த ஜயவர்தன ஜனாதிபதி ஆணைக் குழு முன் தெரிவித்திருந்தார். சஹ்ரானுக்கு மேலதிகமாக அபூ ஹிந், ரில்வான் மற்றும் நௌபர் மௌலவி ஆகியோருடன் பேசியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின் போது, அப்போதைய ஆளும் கட்சி, அபூ ஹிந் என்பது வெளிநாட்டு உளவுத்துறையால் தகவல்களைப் பெறப் பயன்படுத்தப்படும் ஒரு புனைப் பெயர் மட்டுமே என்று கூறியது. இருப்பினும், ஜனாதிபதி ஆணைக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டதன்படி, அபூ ஹிந் இந்த தாக்குதலில் ஒரு முக்கிய பங்கேற்பாளராகவோ அல்லது சாட்சியாகவோ இருக்கலாம் என நம்பப்படுகிறது. இருப்பினும், அபூ ஹிந்தின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே, அபூ ஹிந் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு, அவர் யார், யாரின் கீழ் பணியாற்றினார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும்.
சாரா ஜெஸ்மின், சாய்ந்தமருது தாக்குதல்:
கல்முனை, சாய்ந்தமருது, பொலிவேரியன் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 2019 ஏப்ரல் 26 வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தை சுற்றியுள்ள முழு செயல்முறையும் மிகவும் சந்தேகத்திற்குரியதும் விசாரணைக்கு உட்படுத்தப்படாத விடயங்களையும் கொண்டுள்ளது.
முதல் விடயம் என்னவென்றால், இந்த வீட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அளித்த வாக்குமூலங்கள், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அளித்த வாக்குமூலங்கள், உயர் அதிகாரிகளின் பயணக் குறிப்பேடுகளில் உள்ள பதிவுகள், தகவல் புத்தகங்களில் உள்ள பதிவுகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அளித்த வாக்குமூலங்களில் முரண்பாடுகள் உள்ளன. அதன்படி, அந்த அறிக்கைகள் அனைத்தையும் ஆய்வு செய்து, அந்த முரண்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
குண்டுவெடிப்பு நடந்த மறுநாளே, அதாவது 2019 ஏப்ரல் 27 அன்று, அந்த பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் நிலையமான கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரால் , கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வெடிப்புச் சம்பவத்தில் 16 பேர் இறந்ததாக ஒரு பி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், இரண்டு நாட்களுக்குப் பிறகு, மற்றொரு பொலிஸ் நிலைய அதிகாரியான அதாவது அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர், சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் 17 பேர் இறந்ததாக அதே நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். இறந்தவர்கள் குறித்து புதிய தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கைகளில் 16 பேர் இறந்தது தொடர்பான விவரங்கள் மட்டுமே உள்ள நிலையில், 17 பேர் இறந்ததாக அம்பாறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் எந்த அடிப்படையில் அறிக்கை அளித்தார் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
இந்த வெடிப்பு சம்பவத்தில் முதலில் உயிர் பிழைத்ததாக அறிவிக்கப்பட்டவர்கள் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவும் சஹ்ரான் மற்றும் ஹாதியாவின் மகளும் ஆவர். வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த ஹாதியாவின் வாக்குமூலத்தை பொலிஸார் முதன்முதலில் 2019 மே 3 அன்று முற்பகல் 11.30 மணிக்கு பதிவு செய்தனர். மூன்று நாட்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதில், 2019 மே 5 அன்று மாலை 5.19 மணிக்கு குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் சாரா ஜெஸ்மின் சாய்ந்தமருது வீட்டில் இருந்ததாக தெரியவந்தது. அம்பாறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர், சாரா ஜஸ்மின் இறந்துவிட்டார் என்று நம்ப வைப்பதற்காக 17 பேரின் இறப்புகள் தொடர்பில் அறிக்கை அளித்தாரா?, ஹாதியா, சாரா பற்றிய விடயங்களை வெளிப்படுத்துவதற்கு முன்பே சாராவின் இருப்பு குறித்து வெளிப்படுத்தப்பட்டிருந்தால் அது எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று சாரா உயிரிழந்துவிட்டதாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், டி.என்.ஏ சான்றுகள் ஊடாக உறுதி செய்யப்பட்டிருக்காத போது சாரா இறந்துவிட்டதாக அம்பாறை பொலிஸ் நிலையம் எவ்வாறு நீதிமன்றத்துக்கு அறிக்கை இட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
சாய்ந்தமருது தாக்குதலுக்குப் பிறகு, சாரா ஜஸ்மின் போன்ற தோற்றமும் குரலும் கொண்ட ஒரு பெண் சம்பவ இடத்தில் தன்னிடம் பேசியதாக சஹ்ரானின் மனைவி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் அளித்த சாட்சியத்தில் கூறியுள்ளார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக சஹ்ரானின் மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன் ஒரு வாக்குமூலமும் அளித்துள்ளார். எனவே, இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் போது ஒரு மோட்டார் சைக்கிள் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர். அவ்வாறு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது யார் என்பது குறித்து இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. எனவே அதுவும் விசாரிக்கப்பட வேண்டும்.
அதே நேரம் குறித்த குண்டுவெடிப்புக்குப் பிறகு ஒருவர் தப்பி ஓடியதாகவும், இராணுவம் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும் அவரைப் பிடிக்க முடியவில்லை என்றும், ஒருவர் தப்பிச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது என்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும்.
குண்டுவெடிப்புக்குப் பிறகு சஹ்ரானின் சகோதரர்களில் ஒருவர் உயிருடன் இருந்ததாகவும், அதன் பிறகு துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாகவும் சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா ஜனாதிபதி ஆணைக் குழுவில் கூறியுள்ளார். வீட்டில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி சஹ்ரானின் சகோதரர் ஒருவர் உயிரிழக்காமல் இருந்த போது, பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஒருவரால் அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அதே போன்று, குறித்த தினம் பொலிவேரியன் கிராமத்திற்குள் செல்லும் பாலத்தில் வைத்து இராணுவ துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டியில் சென்ற ஒரு பெண் கொல்லப்பட்டார். பொலிவேரியன் கிராமத்தில் வெடிப்புக்குள்ளான குறித்த வீட்டை சஹ்ரான் குழு பெற்றுக்கொள்ள உதவுவதில் அப்பெண் தொடர்புபட்டிருந்ததாக அன்று அந்தப் பகுதியில் ஒரு தோற்றப்பாடு நிலவியது. அது குறித்து முறையான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. உத்தரவுகளை மீறியதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணின் மரணம் குறித்த விசாரணைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. அதன்படி, அப் பெண்ணின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சாய்ந்தமருது வீட்டுப் பகுதியில் இருந்து அன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் இடையே ட்ரேசர் புலட் பிரயோகிக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் வெளிப்பட்டது. இராணுவ நடவடிக்கைகளின் இடையே, இருக்கும் இடத்தை அடையாளம் காண்பதற்காக அதிகமாக பயன்படுத்தப்படும் ட்ரேஷர் புலட் இந்த கும்பலின் கைகளுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து எந்த வெளிப்படுத்தல்களும் இல்லை. எனவே அதுகுறித்தும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு சாய்ந்தமருது வீட்டின் முன் இறந்து கிடந்த நபரின் கையில் இருந்த துப்பாக்கி, இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியாகும். குறித்த நபரின் கைகளுக்கு அந்த துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சாய்ந்தமருது வெடிப்பு நடந்தபோது கல்முனை சியாமும் குறித்த வீட்டிலிருந்து தப்பிச் சென்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தகவல் முன் வைக்கப்பட்டிருந்தாலும், அதை உறுதிப்படுத்தும் எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளில், சாரா ஜஸ்மினின் தேசிய அடையாள அட்டைக்கு 2020 ஆம் ஆண்டு சிம் அட்டை ஒன்று பெறப்பட்டுள்ளது தெரியவந்தது. அந்த விசாரணைகள் 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறுத்தப்பட்டன.
அதன்படி, குறித்த சிம் அட்டை வாங்கப்பட்டது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
அதேபோல், சாய்ந்தமருது தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, சாரா ஜஸ்மினின் தேசிய அடையாள அட்டையை அம்பாறை வலயத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார். குற்றம் நடந்த இடத்தில் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலில் அத்தகைய தேசிய அடையாள அட்டை காணப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை. எனவே சாரா சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்று மக்களை நம்ப வைக்கும் சதித்திட்டத்தின் விளைவாக இந்த தேசிய அடையாள அட்டை பின்னர் கையளிக்கப்பட்டதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.
ஹன்சீர் அசாத் மெளலானா வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பாக:
ஹன்சீர் அசாத் மௌலானாவின் கருத்து தொடர்பாக சமூக மற்றும் சமய மையம் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அவரது கருத்து தொடர்பில் ஆராய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்த குழுவின் அறிக்கையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிரசித்தம் செய்தார். அந்த அறிக்கையில், அசாத் மௌலானாவிற்கும் சஹ்ரான் குழுவிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாக குறித்த குழு கூறியுள்ளது. கடந்த 2018 ஆகஸ்டில் சஹ்ரானின் சகோதரர் ரில்வானுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரும், அசாத் மௌலானாவும் ஒரே கிராமத்தில் வசித்து வந்ததாகவும், அசாத் மௌலானா, மருத்துவர் வெளிநாடு செல்ல உதவியதாகவும், தெஹிவளை எபனைசர் பகுதியில் இருவருக்கும் வீடுகள் இருப்பதாகவும் குறித்த அறிக்கை கூறுகிறது. செனல் 4 தொலைக்காட்சியின் முழு வெளிப்படுத்தல் குறித்தும் விசாரிக்கும் அதே வேளையில், பின்வரும் விடயங்களையும் விசாரிக்க வேண்டும்.
முன்னாள் இராணுவ உளவுத்துறை பணிப்பாளர் சுரேஷ் சலே கடந்த 2019 ஏப்ரல் 21 அன்று தன்னை தொலைபேசியில் அழைத்து ஜமீலை அழைத்துச் செல்லுமாறு கூறியதாக அசாத் மௌலானா குற்றம் சாட்டுகிறார். இந்த ஆவணத்தில் முன்னர் குறிப்பிட்டது போல, கடந்த 2019 ஏப்ரல் 21 அன்று தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டு வெடிக்கவில்லை என்பதுடன் அன்று காலை 8.51 முதல் 8.54 வரையான காலப்பகுதிக்குள் ஜமீலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பிற்குப் பிறகு, ஜமீல் ஹோட்டலை விட்டு வெளியேறி தெஹிவளையில் உள்ள ட்ரொபிகல் இன் தங்குவிடுதிக்கு சென்றார். அங்கு அவர் தனது பையை வைத்துவிட்டு தெஹிவளையில், எபனைசர் பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கு சென்றார். ஜனாதிபதி ஆணைக்குழுவில், பள்ளிவாசலின் மௌலவி அளித்த சாட்சியத்தில், ஜமீல், நபர் ஒருவருக்காக நீண்ட நேரம் காத்திருந்ததாகவும், நண்பர் வரும் வரை காத்திருப்பதாக தன்னிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
செனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரித்த ஜனாதிபதி குழுவின் கூற்றுப்படி, தெஹிவளை, எபனைசர் பிளேஸில் அசாத் மௌலானாவுக்குச் சொந்தமான ஒரு வீடு உள்ளது. அப்படியானால், ஜமீல் தாஜ் ஹோட்டலில் இருந்து தெஹிவளையில் உள்ள எபனைசர் பள்ளிவாசலுக்குச் சென்று அசாத் மௌலானாவைச் சந்திக்க காத்திருந்தாரா அல்லது அவரது பிரதிநிதிகளில் ஒருவரைச் சந்திக்க காத்திருந்தாரா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் செயற்பட தவறியமை :
மேலே குறிப்பிடப்பட்ட நான்கு முக்கிய விடயங்களுக்கு மேலதிகமாக, 2019 ஏப்ரல் 21 அன்று கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் செயல்படத் தவறியமை குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். 2019 ஏப்ரல் 21 அன்று கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்று 2019 ஏப்ரல் 20 அன்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த லலித் பத்திநாயக்க அன்று இரவு 7.19 மணிக்கு கொழும்பு தெற்கு பொலிஸ் அத்தியட்சர் நிஷாந்த சொய்சாவை அழைத்து, உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், தேவாலயங்களுக்கு பாதுகாப்பை வழங்கவும், நடமாடும் ரோந்துகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தியதாக ஜனாதிபதி ஆணைக் குழுவில் தெரியவந்தது. கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லமும் கொழும்பு தெற்குப் பொலிஸ் வலயத்தில் அமைந்துள்ளது. இவ்வாறான நிலையில், இந்தத் தாக்குதல் குறித்த தகவல்களை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வழங்கத் தவறியது குறித்தும் சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த விடயங்கள் தீர்க்கப்படுமானால் பெரும்பாலும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னணி, சதிகாரர்கள் தொடர்பில் தெளிவான பக்கங்களை வெளிப்படுத்தலாம். அதனை தவிர்த்து, அமெரிக்காவின் எப்.பி.ஐ. அதிகாரி சில வருடங்களுக்கு முன்னர் முன் வைத்த அறிக்கையுடன் இணைந்த சத்தியக் கடதாசியை புதிய விடயமாக முன் வைத்து, பிரதான சூத்திரதாரிகளை காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் 9 சர்வதேச சிறப்பு விசாரணை நிறுவனங்கள் உதவின. அவர்களது குழுவினர் இங்கிருந்தவாறு இந்த உதவி ஒத்தாசைகளை முன்னெடுத்தன.
எப்.பி.ஐ., ஸ்கொட்லன்ட் யார்ட், அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் நியூஸிலாந்து ஆகிய சிறப்பு விசாரணையாளர்கள் இந்த 9 வெளிநாட்டு விசாரணைப் பிரிவில் உள்ளடங்கியிருந்தனர். இதில் அமெரிக்காவின் எப்.பி.ஐ. விசாரணைகள் முக்கியமானவை.
21/4 தாக்குதலின் பின்னர் இலங்கை வந்த அமெரிக்காவின் எப்.பி.ஐ. விசாரணைக் குழு, தொலைதொடர்பு விவகாரம், வெடிபொருட்கள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் தேர்ச்சிபெற்ற அதிகாரிகளை உள்ளடக்கியிருந்தது.
அவர்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் பகுப்பாய்வுக்கு தேவையான பல்வேறு தடயங்களை கண்டறிந்து மேலதிக பகுப்பாய்வுக்காக சில சான்றுகளை அவர்களுடன் எடுத்துச் சென்றிருந்தனர். இதற்காக நீதிமன்ற அனுமதியும் உரிய வழி முறைகளும் பின்பற்றப்பட்டிருந்தன.
இந்நிலையில் அதனை பகுப்பாய்வு செய்த பின்னர் எப்.பி.ஐ. 5 சிறப்பு அறிக்கைகளை சி.ஐ.டி.க்கு அனுப்பியுள்ளதுடன் இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில், 21/4 தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் சமஷ்டி நீதிமன்றத்தில் 3 இலங்கையர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித் திணைக்களம் அறிவித்துள்ளது.
21/4 தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்த, இன்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி, மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான், ஹயாது மொஹம்மட் அஹமட் மில்ஹான் எனும் அஹமட் மில்ஹான் ஆகிய மூவர் மீதே இவ்வாறு லொஸ் ஏஞ்சலிஸ் சமஷ்டி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் இணைக்கப்பட்ட சத்தியக் கடதாசியே இந்த நாட்களில் புதிய விடயங்களாக பேசப்பட்டு வருகின்றது.
எனவே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய, சதி செய்த, அதன் பின்னணியில் உள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும். எனவே தான் அது குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்படல் வேண்டும்