உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: பிள்ளையானின் கைதும் விசாரிக்கப்படாத பக்கங்களும்!

எப்.அய்னா

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்து எதிர்­வரும் 21 ஆம் திக­தி­யுடன் 6 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. எனினும் இது­வரை அத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை. 2019 ஆம் ஆண்டு முதல் ஆட்­சிக்கு வந்த அத்­தனை பேரும் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு நீதியை பெற்­றுத்­த­ரு­வ­தா­கவும், அதன் பின்­ன­ணியில் செயற்­பட்ட மறை கரத்தை கண்­டு­பி­டிப்­ப­தா­கவும் தெரி­வித்த போதும், இது­வரை அது நடக்­கவே இல்லை.

இவ்­வா­றான நிலையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் சதித் திட்­டத்தில், பிள்­ளையான் எனும் சிவ­னே­ச­துறை சந்­திரகாந்­தனின் பங்கு இருப்­ப­தாக அவரின் ஊடக செய­லா­ள­ராக இருந்த ஹன்சீர் அசாத் மெள­லானா செனல் 4 தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்­டி­யொன்­றினை மையப்­ப­டுத்தி பலரும் கேள்வி எழுப்­ப­லா­யினர். உண்­மையில் ஹன்சீர் அசாத் மெள­லானா, செனல் 4 தொலைக்­காட்­சிக்கு அந்த விட­யங்­களை தெரி­விக்க முன்னர் ஜெனீவா மனித உரி­மைகள் அமைப்­புக்கு எழுத்து மூலம் அதனை தெரி­வித்­தி­ருந்தார்.

இந்த நிலை­யி­லேயே பிள்­ளை­யா­னுக்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பி­ருப்­ப­தாக பேசப்­பட்­டது.

குறிப்­பாக பிள்­ளையான், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலை தொடர்பில் விளக்­க­மறி­யலில் இருந்தபோதே இந்த தாக்­குதல் பதி­வா­கி­யது. எனினும் பிள்­ளையான் குறித்த தாக்­குதல் தொடர்பில் உயிர்த்த ஞாயிறு தினம் நடந்த தற்­கொலை தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ரணை செய்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு­வுக்கு எழுத்து மூலம் பல கடி­தங்­களை முன்வைத்து பல்­வேறு விட­யங்­களை தெரி­வித்­தி­ருந்தார். அத்­துடன் அதுகுறித்து புத்­தகம் ஒன்­றி­னையும் எழு­தி­யி­ருந்தார். எனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் பிள்­ளையான் ஏதேனும் ஒன்றை அல்­லது பல விட­யங்­களை அறிந்தி­ருப்­ப­தா­கவே எண்ணத் தோன்­று­கின்­றது. அதுகுறித்து விசா­ரிக்­கப்­படல் வேண்டும்.

கிழக்கு பல்­கலைக்கழக உபவேந்­த­ராக இருந்த பேராசி­ரியர் ரவீந்­ர­நாத்தின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கல் தொடர்பில் பிள்­ளையான் பயங்­க­ர­வாத தடை ச‌ட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்றார். உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் பிள்­ளை­யான் தொடர்­பு­ குறித்து தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தாக பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜே­பால பாரா­ளு­மன்­றத்­திலும், ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க அதனை ஒத்த கருத்­துக்­களை தேர்தல் மேடை­க­ளிலும் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் பிள்­ளையான் உள்­ளிட்ட சிலர் குறித்து சி.ஐ.டி. புதிய விசா­ர­ணை­களில் கவனம் செலுத்­தி­யுள்ள நிலையில், இது­வரை பிள்­ளையான் அத்­தாக்­குதல் குறித்த விட­யங்­களை வெளி­ப்­படுத்­த­வில்லை என சி.ஐ.டி.யின் உள்­ளக தக­வல்கள் தெரி­வித்­தன. எனினும் பிள்­ளை­யானின் தொடர்­புகள் குறித்து விஷேட விசா­ர­ணைகள் வேறு சாட்­சி­யங்கள் ஊடாக விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இவ்­வா­றான நிலை­யி­லேயே, முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தனது தொலை­பேசி ஊடாக, பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தரை பேசச் செய்து பிள்­ளை­யா­னிடம் பேச அனு­மதி கோரிய சம்­ப­வமும், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில பிள்­ளை­யானின் சட்­டத்­த­ர­ணி­யாக செயற்­பட்ட விட­யமும் மக்­களின் கவ­னத்தை ஈர்த்­தி­ருந்­தது.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணைகள் தொடர்பில் பல்­வேறு வதந்­தி­களும் பரவிவரும் பின்­ன­ணியில், மரு­தானை சமூக, சமய மையத்தின் ஆய்வுக்குழு ஒரு அறிக்­கையை நேற்று வெளி­யிட்­டது. 5 பிர­தான விட­யங்­களை மைய­ப்ப­டுத்தி அந்த ஆய்­வ­றிக்கை வெளி­யி­டப்­பட்ட நிலையில், முன்­னெ­டுக்க வேண்­டிய விசா­ர­ணைகள் தொடர்பில் அதில் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த விட­யங்கள் தொடர்பில் அவ்­வப்­போது த‌னித்­த­னி­யாக விடி­வெள்ளி பிர­சு­ரித்­தி­ருந்த போதும், இது­வ­ரை­யி­லான சி.ஐ.டி.யின் விசா­ர­ணை­களில் கண்­டு­பி­டிக்­கப்­ப­டாத விட­யங்கள் தொடர்­பிலும் அதில் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய விட­யங்கள் குறித்தும் அவ்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

 

இதில் விசா­ர­ணை­களில் தீர்க்­கப்­பட வேண்­டிய மிக முக்­கிய விடயம், உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் போது, தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் குண்டை வெடிக்கச் செய்ய முயற்­சித்து பின்னர் தெஹி­வளை ட்ரொபிகல் இன் தங்­கு­வி­டு­தியில் குண்டு வெடித்து மர­ண­ம­டைந்த அப்துல் லதீப் மொஹம்மட் ஜமீல் குறித்த விவ­கா­ர­மாகும். மரு­தானை சமூக சமய மையத்தின் அறிக்­கையில் இது குறித்து விரி­வாக கூறப்­பட்­டுள்ள நிலையில், இக்­கட்­டு­ரையில் அந்த விட­யங்கள் அவ்­வாறே உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளன.

2015 ஆம் ஆண்டு முதல் ஜமீல் தொடர்பில் உளவுப் பிரி­வுகள் கவனம் செலுத்தி வரு­வ­தாக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் தெரி­ய­வந்­தது. இந்த தாக்­கு­த­லுக்கு முன்னர் ஜமீல் தொடர்பில் ஆராய்தல்/ விசா­ரணை செய்தல்/ கண்­கா­ணித்தல் ஆகி­யன, தற்­போது பதி­வா­கி­யுள்ள தக­வல்கள் பிர­காரம் அரச உளவுச் சேவை, இரா­ணுவ உளவு பணிப்­பாளர் சபை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் குறித்த விசா­ரணை பிரிவு (ரி.ஐ.டி.) ஆகிய நிறு­வ­னங்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இது­வ­ரை­யான தக­வல்­களின் படி, மேலே குறிப்­பி­டப்­பட்ட மூன்று நிறு­வ­னங்கள்/துறை­களால் ஜமீல் தொடர்­பாக விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டாலும், அவர் மூலம் இந்தத் தாக்­குதல் குறித்த முன்­கூட்­டிய எச்­ச­ரிக்­கை­களைப் பெற்­றுக்­கொள்­ளவோ அல்­லது தாக்­கு­தலைத் தடுக்­கவோ முடி­யாமல் போயுள்­ளது. அத்­துடன் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு, நீதி­ய­ரசர் விஜித் மலல்­கொட தலை­மை­யி­லான ஜனா­தி­பதி குழு, நாடா­ளு­மன்றத் தெரிவுக் குழு மற்றும் வேறு மூலங்­களில் இருந்து பெறப்­பட்ட தக­வல்கள் ஊடாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள விட­யங்­களின் அடிப்­ப­டையில், ஜமீல் தொடர்­பாக‌ பின்­வரும் விட‌­யங்கள் குறித்து மேல­திக விசா­ரணை தேவைப்­ப­டு­கி­றது.

ஒவ்­வொரு நாளும் காலை 7 மணி முதல் 8 மணிக்கு இடைப்­பட்ட நேரத்தில், முந்­தைய நாள் நள்­ளி­ரவு 12 மணி வரையில் ஹோட்­ட­லுக்கு வந்­த­வர்­களின் பெயர்ப் பட்­டி­யலை அரச உளவுச் சேவை மற்றும் ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரி­வுக்கு அனுப்­பு­வது ஒரு பொது­வான நடை­முறை என தாஜ்சமுத்ரா ஹோட்­டலின் பாது­காப்பு முகா­மை­யாளர், ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் சாட்­சி­ய­ம­ளித்தார். 2019 ஏப்ரல் 20 அன்று மாலை, ஜமீல் தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் ஒரு அறையை முன்­ப­திவு செய்தார். 2019 ஏப்ரல் 20 அன்று நள்­ளி­ரவு 12 மணிக்குள் முன்­ப­திவு செய்­யப்­பட்ட அறை­களின் பட்­டி­யலை குறித்த ஹோட்­டலின் பாது­காப்பு முகா­மை­யாளர் 21 ஆம் திகதி காலை சம்­பந்­தப்­பட்ட துறை­க­ளுக்கு அனுப்­பி­யி­ருந்தார். அதன்­படி, அரச உளவுச் சேவை அன்று காலை, இந்தப் பட்­டி­யலில் தாம் தகவல் சேக­ரித்­து­வரும் ஜமீல் என்ற நபரை அடை­யாளம் கண்­டதா, அப்­படி அடை­யாளம் கண்­டி­ருப்பின் அது தொடர்­பாக என்ன நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன என்­பது குறித்து விசா­ர­ணைகள் அவ­சி­ய­மாகும்.

ஹோட்­டலில் அறை­களை முன்­ப­திவு செய்யும் அனைத்து விருந்­தி­னர்­களின் தேசிய அடை­யாள அட்டை எண்­க­ளையும் ஹோட்­டலின் தர­வுத்­த­ளத்தில் உள்­ளி­டு­வது பொது­வாக கட்­டா­ய­மாகும் என்று ஹோட்­டலின் பாது­காப்பு முகா­மை­யாளர் ஜனா­தி­பதி ஆணைக்குழுவில் தெரி­வித்தார். இருப்­பினும், ஜமீலின் தேசிய அடை­யாள அட்டை எண் தரவு கட்­ட­மைப்பில் இல்லை என்­பது பின்னர் தெரி­ய­வந்­தது. ஜமீலின் தேசிய அடை­யாள அட்டை எண் உள்­ளி­டப்­ப­ட­வில்­லையா? அல்­லது அது உள்­ளி­டப்­பட்ட பிறகு யாரா­வது அதை நீக்­கி­விட்­டார்­களா?, தேசிய அடை­யாள அட்டை எண் முதலில் உள்­ளி­டப்­ப­ட­வில்லை என்றால், அது ஒரு கவ­னக்­கு­றைவால் நடந்­ததா? அல்­லது வேறு ஒரு­வரின் தூண்­டு­தலின் பேரில் அல்­லது செல்­வாக்கின் அடிப்­ப­டையில் செய்­யப்­பட்­டதா?, தேசிய அடை­யாள அட்டை எண் தர­வுத்­த­ளத்தில் உள்­ளி­டப்­பட்டு பின்னர் நீக்­கப்­பட்­டி­ருந்தால், அதை யார் செய்­தார்கள்?, என்ன‌ கார­ணத்­திற்­காக அவ்­வாறு செய்­தனர்? என்­பது குறித்து விசா­ரணை செய்­யப்­படல் வேண்டும்.

2019 ஏப்ரல் 20 அன்று ஜமீல் ஹோட்­ட­லுக்கு வரு­வ­தற்கு முன்பு, 2019 ஏப்ரல் 17 அன்று சந்­தே­கத்­திற்­கி­ட­மான ஒருவர் தாஜ் சமுத்ரா ஹோட்­ட­லுக்குச் வந்து சென்­ற­தாக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் விட­யங்கள் முன் வைக்­கப்­பட்­டன. பகல் 1.45 மணி­ய­ளவில் வந்த அவர் இன்பாஸ் என பின்னர் அடை­யாளம் காணப்­பட்டார். அதன்­படி, ஏப்ரல் 17 அன்று இன்­பா­சுக்கு மேல­தி­க­மாக‌, தாக்­கு­த­லுக்கு முன்னும் பின்னும் சந்­தே­கத்­திற்­கி­ட­மான வேறு நபர்கள் ஹோட்­ட­லுக்கு வந்­தார்­களா என்­பது குறித்து முறை­யான விசா­ர­ணைகள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. எனவே இது குறித்து முழு­மை­யான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படல் வேண்டும்.

ஜமீல் 2019 ஏப்ரல் 20 அன்று மாலை 4.17 மணி­ய­ளவில் ஒரு அறையை முன்­ப­திவு செய்து, ஹோட்டல் அறைக்குச் சென்று பின்னர் ஹோட்­டலை விட்டு வெளி­யே­றி­யுள்ளார். அதன் பின்னர் 2019 ஏப்ரல் 21 அன்று காலை­யி­லேயே ஹோட்­ட­லுக்கு திரும்­பி­யுள்ளார். அவ்­வாறு அவர் காலையில் வந்து, அறைக்கு அருகே சென்று திரும்பி வந்து, அறையைத் திறக்க புதிய அட்­டையைக் கேட்­ட­தாக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் தெரி­ய­வந்­தது. அப்­ப­டி­யானால் அவ­ருக்கு முதலில் வழங்­கப்­பட்ட அட்­டைக்கு என்ன ஆனது என்­பது குறித்து எந்த விசா­ர­ணையும் நடத்­தப்­ப­ட­வில்லை. அதன்­படி, இந்த விடயம் குறித்தும் விசா­ரணை அவ­சி­ய­மாகும்.

2019 ஏப்ரல் 21 அன்று காலை, ஜமீல் தாஜ் சமுத்ரா ஹோட்­ட­லுக்குத் திரும்பி (குண்டு வெடிக்­கா­த­தாலோ அல்­லது வேறு ஏதேனும் கார­ணத்­தாலோ) ஹோட்­டலை விட்டு வெளி­யே­று­வ­தற்கு சற்று முன்பு, காலை 8.51 மணிக்கும் 8.54 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில், அவ­ருக்கு தொலை­பேசி அழைப்­பொன்று வந்­ததை சிசி­டிவி கெமரா பதி­வு­களில் உள்­ளது. அவ்­வாறு ஜமீ­லுக்கு அழைப்­பினை எடுத்த அந்த நபர் யார் என்­பது இன்னும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. எனவே அது குறித்தும் விசா­ரிக்­கப்­படல் வேண்டும்.

​​ஜமீல் தனது மனைவி பாத்­திமா ஷிபானா உமர்­கத்­தா­புக்கு 2019 ஏப்ரல் 20 அன்று காலை 8.30 மணிக்கு ஹிஜ்ரா செல்­வ­தாகக் கூறி ஒரு குரல் பதிவை அனுப்­பி­யி­ருந்­த­தாக‌ விசா­ர­ணையின் போது ஷிபானா உமர்­கத்தாப் கூறி­யி­ருந்தார். அவ்­வாறு அனுப்­பப்­பட்­ட­தாக ஷிபானா உமர்­கத்தாப் கூறிய குரல் பதி­வு­களில் பின்­ன­ணியில் சிறு குழந்­தை­களின் குரல்கள் கேட்­கின்­றன என்­பது ஜனா­தி­பதி ஆணைக் குழுவில் தெரி­ய­வந்­தது. அந்தக் குரல் பதிவின் பின்­ன­ணியில் கேட்கும் குரல்­க­ளுக்கு உரிய குழந்­தைகள் யார்?, அந்தக் குரல் பதி­வுகள் எங்கு, எந்தத் திக­தியில் பதிவு செய்­யப்­பட்­டன என்­பதை விசா­ரணை செய்ய‌ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

குறித்த‌ குரல் பதிவை அனுப்­பி­ய­தாக கூறப்­படும் தொலை­பேசி எண்ணை தான் அழித்­து­விட்­ட­தாக விசா­ர­ணையின் போது ஜமீலின் மனைவி ஷிபானா உமர்­கத்தாப் கூறி­யுள்ளார். அத்­துடன் ஜமீலின் வழக்­க­மான தொலை­பேசி எண்­ணி­லி­ருந்து அந்த குரல் வர­வில்லை என்றும் அவர் கூறி­யுள்ளார். அப்­ப­டி­யானால், இந்தக் குரல் பதிவு ஜமீல்தான் அனுப்­பி­னாரா?, அல்­லது முன்னர் பதிவு செய்­யப்­பட்ட குரல் பதிவு வேறொரு நபரால் அனுப்­பப்­பட்­டதா?, எந்த எண்­ணி­லி­ருந்து அது அனுப்­பப்­பட்­டது? என்­பது குறித்து விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­ப­டா­ததால், அது குறித்தும் விசா­ரணை அவ­சி­ய­மாகும்.

2019 ஏப்ரல் 19 அன்று ஜமீல் தனது வீட்டை விட்டு வெளி­யே­று­கின்ற சிசி­டிவி காட்­சி­களை, 2019 ஏப்ரல் 21 அன்று மாலை பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரிகள் ஆய்வு செய்­துள்­ளனர். அத்­துடன் அந்தக் காட்­சிகள் அடங்­கிய டி.வி.ஆர் இயந்­தி­ரத்தை பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவின் அதி­கா­ரிகள் எடுத்துச் சென்­றுள்­ளனர். அவ்­வாறு எடுத்துச் செல்லும் போது 2019 மார்ச் 31 முதல் ஏப்ரல் 21 மாலை இயந்­திரம் அகற்­றப்­படும் வரை­யி­லான காட்­சிகள் பதி­வா­கி­யி­ருந்­துள்­ளது. எடுத்துச் செல்­லப்­பட்ட DVR-இல் இருந்து 2019 ஏப்ரல் 19, அன்று காலை 8:00 மணி முதல் 2019 ஏப்ரல் 21, அன்று பிற்­பகல் 2:30 மணி வரை­யி­லான காணொளிப் பதி­வுகள் மட்டும் இல்லை என்­பது ஜனா­தி­பதி ஆணைக் குழுவில் தெரி­ய­வந்­தது. DVR எடுத்துச் செல்­லப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­ட­போது குறித்த வீடியோ காட்­சிகள் அழிந்­தி­ருக்­கலாம் என்று அதி­கா­ரிகள் ஆணைக் குழு முன் கூறி­யி­ருந்­தனர். ஆரம்­பத்தில் குறித்த காட்­சிகள் இருந்­துள்ள நிலையில், பின்னர் ஜமீல் வீட்டை விட்டு வெளி­யே­றிய நாளி­லி­ருந்து பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவு அதி­கா­ரிகள் இயந்­தி­ரத்தை அகற்றும் வரை­யி­லான பகுதி மட்டும் முழு சிசி­டிவி காட்­சி­க­ளி­லி­ருந்தும் எவ்­வாறு அழிக்­கப்­பட்­டது என்­பதை விசா­ரிக்க வேண்டும். அழிக்­கப்­பட்ட காட்­சி­களை மீட்­டெ­டுக்க வேண்டும். மேலும் அந்த காட்­சி­களின் அடிப்­ப­டையில், ஜமீல், ஜமீலின் வீட்டில் இருந்­த­வர்கள் மற்றும் இந்தக் கால­கட்­டத்தில் அந்த வீட்­டிற்கு வந்­த­வர்கள் குறித்து விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்.

2019 ஏப்ரல் 20 அன்று மாலை தாஜ் ஹோட்­ட­லுக்குச் சென்று அங்­கி­ருந்து வெளி­யே­றி­யுள்ள ஜமீல், பின்னர் பாணந்­து­றையில் உள்ள ஒரு வீட்­டிற்குச் சென்று, அங்­கி­ருந்து சுமார் 7 மணி­ய­ளவில் புறப்­பட்டு, மாலை 7.33 மணி­ய­ளவில் கல்­கிஸ்ஸை, டெம்ப்லஸ் வீதியில் உள்ள ஸ்பேம் கோபு­ரத்­திற்கு மேலும் இரு­வ­ருடன் சென்­றுள்ளார். எனினும் அவ்­வாறு உடன் சென்ற இரண்டு பேர் யார் என்­பது குறித்து எந்த விசா­ர­ணையும் நடத்­தப்­ப­ட­வில்லை. எனவே, அது தொடர்­பா­கவும் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும்.

2019 ஏப்ரல் 21 அன்று, ஜமீல், எபனைசர் வீதி பள்­ளி­வா­ச­லுக்குள் இருந்­த­போது, ​​அவர் கையில் ஒரு கைய­டக்கத் தொலை­பேசி இருப்­பதை பள்­ளி­வா­சலின் மௌலவி கவ­னித்­துள்ளார். இருப்­பினும், அவர் பள்­ளி­வா­சலை விட்டு வெளி­யே­றும்­போது அவரைச் சோதித்த பிறகு, அமீர் என்ற தனியார் பாது­காப்பு அதி­காரி, அவ­ரிடம் கைய­டக்கத் தொலை­பேசி இருக்­க­வில்லை என்று கூறி­யுள்ளார். எனவே, அவர் பள்­ளி­வா­சலை விட்டு வெளி­யே­றும்­போது பள்­ளி­வா­ச­லுக்குள் இருக்கும்போது வைத்­தி­ருந்த கைய­டக்கத் தொலை­பேசி ஏன் இருக்­க­வில்லை?, அவ­ரிடம் இருந்த கைய­டக்கத் தொலை­பே­சியை யாரா­வது கைய­கப்­ப­டுத்­தி­னரா?, அப்­படி கையக்­கப்­ப­டுத்தி இருப்பின் அது யார்? என்­பது குறித்து விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்.

தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் ஜமீல் வைத்­தி­ருந்த கைய­டக்கத் தொலை­பே­சியும், எபனைசர் வீதி பள்­ளி­வா­சலில் ஜமீல் வைத்­தி­ருந்த கைய­டக்கத் தொலை­பே­சியும் ஒன்றா என்­பது குறித்து விசா­ரிக்­கப்­பட வேண்டும்.

ஒருவர் வரும்வரை பள்­ளி­வா­சலில் காத்­தி­ருப்­ப­தாக ஜமீல் கூறி­ய­தாக ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் தெரி­ய­வந்­தது. இந்த விவ­காரம் குறித்தும், அவர் யாருக்­காகக் காத்­தி­ருந்தார் என்­பது குறித்தும் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்.

2019 ஏப்ரல் 21, அன்று நடந்த தொடர் குண்­டு­வெ­டிப்புத் தாக்­கு­தல்­களின் சிறிது நேரத்­துக்கு பிறகு, இரா­ணுவ உளவுத் துறை பணிப்­பாளர், இரா­ணுவ உளவுத் துறை அதி­கா­ரிகள் குழுவை ஜமீலின் வீட்­டிற்கு அனுப்­பி­ய­தாக ஜனா­தி­பதி ஆணைக் குழுவில் தெரி­ய­வந்­தது. அத்­துடன் எபனைசர் பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் ஜமீலைச் சோத­னை­யிட்ட தனியார் பாது­காப்பு அதி­கா­ரியை, புல­னாய்வு அதி­கா­ரிகள் தொலை­பே­சியில் அழைத்து, ஹேவ்லாக் புத்தர் சிலைக்கு அருகில் வரு­மாறு அறி­வு­றுத்­தி­ய­தா­கவும் ஜனா­தி­பதி ஆணைக் குழுவில் தெரி­ய­வந்­தது. அந்த தனியார் பாது­காப்பு அதி­காரி அங்கு சென்­ற­போதும், ​​சம்­பந்­தப்­பட்ட குழு­வினர் வரா­மையால், அவர்கள் ஆபத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கி­றார்­களா என்ற சந்­தேகம் எழுந்­த­தா­கவும், அந்த‌ பாது­காப்பு அதி­காரி உட­ன­டி­யாக வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்குச் சென்­ற­தா­கவும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதுகுறித்து இது­வரை எந்த விசா­ர­ணையும் நடத்­தப்­ப­டா­ததால், இந்த விவ­காரம் குறித்தும் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்.

ஜமீல், சஹ்ரான் உள்­ளிட்ட குழு­வினர் 2019 ஏப்ரல் 20 ஆம் திகதி பகல் நேரம், துப்­பாக்கி மற்றும் வேறு ஆயு­தங்­களை ஏந்­திய வண்ணம் பதிவு செய்­த­தாக கூறப்­படும் காட்­சி­களில் உள்ள ரீ 56 துப்­பாக்­கிக்கு என்ன நடந்­தது, அதனை எங்­கா­வது ஒரு இடத்­துக்கு எடுத்துச் சென்று கைவிட்­டி­ருப்பின் அது யாரால் என்­பது தொடர்பில் விசா­ரணை நடாத்­தப்­படல் வேண்டும்.

இவ்­வாறு பதிவு செய்­யப்­பட்ட காட்­சிகள் பின்னர் கல்­முனை பிர­தே­சத்தில் இருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்டு அக்­க­ரைப்­பற்று பொலிஸ் அதி­கா­ரி­க­ளினால் பயங்­க­ர­வாத புல­னாய்வு பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. இந்தக் காட்­சி­களை குறித்த பகு­திக்கு யார் எடுத்துச் சென்­றார்கள் என்று கேட்­ட­போது, மட்­டக்­க­ளப்பு குண்­டு­தாரி இவ்­வாறு அதை எடுத்துச் சென்­றி­ருக்­கலாம் என்று சந்­தே­கிப்­ப­தாக ​​பயங்­க­ர­வாதப் புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரிகள் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­விடம் தெரி­வித்­தனர். இருப்­பினும், மட்­டக்­க­ளப்பு குண்­டு­தாரி தொடர்­பான விசா­ர­ணையில் அது குறித்து வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எனவே, இந்த காட்­சிகள் அடங்­கிய உப­க­ர­ணங்­களை குறித்த பகு­திக்கு யார் எடுத்துச் சென்­றார்கள் என்­பது குறித்து விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும். மேலும், இந்த காணொளி பதி­வு­களின் பின்­ன­ணியில் காட்­டப்­பட்­டுள்ள பதாகை 2019 ஏப்ரல் 26 அன்று கல்­முனை பகு­தியில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அந்த பதா­கையை குறித்த பகு­திக்கு யார் கொண்டு சென்­றார்கள் என்­பது குறித்தும் விசா­ரிக்­கப்­பட வேண்டும்.

ஜமீல் உறுப்­பி­ன­ராக இருந்த (மேலும் மூன்று குண்­டு­தா­ரிகள் உறுப்­பு­ரிமை வகித்த) ஜே.எம்.ஐ. அமைப்­புக்கு சுரேஷ் சலே உள­வுத்­துறை பணிப்­பா­ள­ராக இருந்த போது, இரா­ணுவ உளவுத்துறை முகவர் ஒரு­வரை அனுப்­பி­யுள்­ள­துடன், அந்த முக­வ­ருக்கு ஜே.எம்.ஐ. உறுப்­பி­ன­ராக இருந்­து­கொண்டு அந்த அமைப்பில் கலந்­து­ரை­யா­டல்­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக வெளி­நாட்டு உள­வுத்­துறை ஒன்றின் ஒத்­து­ழைப்­புடன் இரா­ணுவ உள­வுத்­துறை பணிப்­பாளர் சபை­யினால் வீடொன்று பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டி­ருந்­த­தாக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் வெளிப்­ப‌­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதில் சில கலந்­து­ரை­யா­டல்கள் ஒலிப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஜே.எம்.ஐ. உறுப்­பி­ன­ராக முகவர் ஒரு­வரை அனுப்­பி­யி­ருந்த நிலை­யிலும், அவர்­களின் திட்டம் தொடர்பில் வெளிப்­ப‌­டுத்­திக்­கொண்டு அவற்றை தடுக்க முடி­யாமல் போனமை தொடர்பில் முறை­யான விசா­ர­ணைகள் இது­வரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. எனவே அதுகுறித்தும் விசா­ரணை செய்­யப்­படல் வேண்டும்.

2018 டிசம்­பரில் சஹரான் இந்­தி­யா­விற்கு பயணம் செய்­த­தாக இரா­ணுவ உள­வுத்­துறை பணிப்­பாளர் சபை இரா­ணுவத் தள­பதி மற்றும் பாது­காப்பு கவுன்­சி­லுக்குத் தெரி­வித்­த­தாக ஜனா­தி­பதி ஆணைக் குழுவில் தெரி­ய­வந்­தது. சஹரான் உண்­மையில் இந்­தி­யா­விற்குச் சென்­றாரா, அல்­லது சம்­பந்­தப்­பட்ட மாதத்தில் இலங்­கையில் சஹரான் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் (பேச்­சு­வார்த்­தைகள் உட்­பட) பற்­றிய உண்­மை­களை வெளிப்­ப­டுத்­து­வதைத் தவிர்ப்­ப­தற்­காக இந்தக் கதை ஜோடிக்­கப்­பட்­டதா என்­பது குறித்து விசா­ரிக்­கப்­பட வேண்டும். அவர் இந்­தி­யா­வுக்குச் சென்­றி­ருந்தால், எங்கு சென்றார், யாரைச் சந்­தித்தார் என்­பது குறித்து விசா­ரிக்­கப்­பட வேண்டும்.

ஜமீல் உறுப்­பி­ன­ராக இருந்த ஜே.எம்.ஐ அமைப்பின் உறுப்­பி­ன­ரான மொஹம்மட் இல்­ஹாமின் மனைவி பாத்­திமா ஜிப்­ரியா, மக­வில வீதி வீட்டில் நடத்­தி­ய­தாக‌ கூறப்­படும் குண்டு வெடிப்பில், அவ­ரது மூன்று குழந்­தைகள் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதி­கா­ரிகள் கொல்­லப்­பட்டனர். அந்த குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வத்­திற்கு முன்னர் குறித்த வீட்டில் இருந்து ஒருவர் தப்பிச் சென்­ற­தாக பேச்சு அடி­பட்­ட­தாக ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் சாட்சி விசா­ர­ணையின் போது கூறப்­பட்­டது. அப்­படி ஒருவர் தப்பி ஓடி­னாரா?, அப்­ப­டி­யானால், அது யார்?, அந்த வீட்டில் அவர் என்ன செய்தார்? உள்­ளிட்­டவை குறித்து முறை­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்.

மேற்­கூ­றிய பாத்­திமா ஜிப்­ரி­யாவின் கைய­டக்கத் தொலை­பேசி எரிந்த நிலையில் வேறொரு வீட்டில் கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில் விசா­ர­ணை­யா­ளர்­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அந்த தொலை­பேசி ஊடாக மேல­திக விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும்.

ஜமீலும் இல்­ஹாமும் 2014 ஆம் ஆண்டு முதல் பழகத் தொடங்­கி­ய­தா­கவும், ஜமீலின் அறி­மு­கத்­துக்கு பிறகு இல்ஹாம் மாறி­விட்­ட­தா­கவும், அதனால் இல்­ஹாமின் தந்­தை­யான இப்­ராஹிம் என்ற தொழி­ல­தி­பரால் ஜமீல், இல்­ஹாமின் வீட்­டிற்கு வரு­வதைத் தடை செய்­தி­ருந்­த­தா­கவும் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் தெரி­ய­வந்­தது. இந்தக் கால­கட்­டத்தில் ஜமீல் மற்றும் இல்ஹாம் மற்றும் அவர்­க­ளது குழு­வினர் மரு­தா­னையில் உள்ள இலங்கை தௌஹீத் ஜமாஅத் பள்­ளி­வா­ச­லுக்கு சென்­றுள்­ள­மையும் தெரி­ய­வந்­தது. கட்­டு­வா­பிட்­டிய குண்­டு­தாரி ஹஸ்தூன் மற்றும் அவ­ரது மனைவி புலஸ்­தினி மகேந்ரன் ஆகி­யோரின் ஆரம்­பமும் தௌஹீத் ஜமாஅத் பள்­ளி­வா­ச­லாகும். 2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு, ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் தலைவர் அப்துல் ராசிக்கை, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்­கவின் அலு­வ­ல­கத்­திற்கு வர­வ­ழைத்து இரா­ணுவ புல­னாய்வு அதி­கா­ரிகள் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­ய­தா­கவும், பாது­காப்பு அமைச்­சுக்கும் அவர் அழைக்­கப்­பட்டு கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தா­கவும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் தெரி­ய­வந்­தது. பொது வெளியில் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறி­வர்­த­னவும் இதை உறு­திப்­ப­டுத்­தினார். உயிர்த்த‌ ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்கும் இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயல்­பா­டு­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்பு 2013 ஆம் ஆண்­டி­லி­ருந்து முழு­மை­யாக விசா­ரிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் இன்­று­வரை அத்­த­கைய விசா­ரணை எதுவும் நடை­பெ­ற­வில்லை. எனவே, இந்த விவ­காரம் குறித்து விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்.

மர்­ம­மாக உள்ள அபூ ஹிந்

அத்­துடன் அபூ ஹிந் இந்த தாக்­கு­தலைத் தூண்­டி­யி­ருக்­கலாம் என்று தேசிய உளவுத்துறை பணிப்­பா­ள­ராக இருந்த‌ நிலந்த ஜய­வர்­தன ஜனா­தி­பதி ஆணைக் குழு முன் தெரி­வித்­தி­ருந்தார். சஹ்ரா­னுக்கு மேல­தி­க­மாக அபூ ஹிந், ரில்வான் மற்றும் நௌபர் மௌலவி ஆகி­யோ­ருடன் பேசி­யுள்­ள­தாக‌ ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் தெரி­ய­வந்­துள்­ளது. ரணில் விக்­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது நாடா­ளு­மன்­றத்தில் நடை­பெற்ற விவா­தங்­களின் போது, ​​அப்­போ­தைய ஆளும் கட்சி, அபூ ஹிந் என்­பது வெளி­நாட்டு உள­வுத்­து­றையால் தக­வல்­களைப் பெறப் பயன்­ப­டுத்­தப்­படும் ஒரு புனைப் பெயர் மட்­டுமே என்று கூறி­யது. இருப்­பினும், ஜனா­தி­பதி ஆணைக் குழுவில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டதன்படி, அபூ ஹிந் இந்த தாக்­கு­தலில் ஒரு முக்­கிய பங்­கேற்­பா­ள­ரா­கவோ அல்­லது சாட்­சி­யா­கவோ இருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கி­றது. இருப்­பினும், அபூ ஹிந்தின் அடை­யாளம் இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. எனவே, அபூ ஹிந் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட்டு, அவர் யார், யாரின் கீழ் பணி­யாற்­றினார் என்­பது குறித்த தக­வல்கள் வெளி­யி­டப்­பட வேண்டும்.

சாரா ஜெஸ்மின், சாய்ந்­த­ம­ருது தாக்­குதல்:

கல்­முனை, சாய்ந்­த­ம­ருது, பொலி­வே­ரியன் கிரா­மத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 2019 ஏப்ரல் 26 வெடிப்பு சம்­பவம் நிகழ்ந்­தது. இந்தச் சம்­ப­வத்தை சுற்­றி­யுள்ள முழு செயல்­மு­றையும் மிகவும் சந்­தே­கத்­திற்­கு­ரி­யதும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டாத விட­யங்­க­ளையும் கொண்­டுள்­ளது.

முதல் விடயம் என்­ன­வென்றால், இந்த வீட்டில் நடந்த சம்­பவம் தொடர்­பாக பொலிஸ் அதி­கா­ரிகள் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­துக்கு அளித்த வாக்­கு­மூ­லங்கள், ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு அளித்த வாக்­கு­மூ­லங்கள், உயர் அதி­கா­ரி­களின் பயணக் குறிப்­பே­டு­களில் உள்ள பதி­வுகள், தகவல் புத்­த­கங்­களில் உள்ள பதி­வுகள் மற்றும் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு அளித்த வாக்­கு­மூ­லங்­களில் முரண்­பா­டுகள் உள்­ளன. அதன்­படி, அந்த அறிக்­கைகள் அனைத்­தையும் ஆய்வு செய்து, அந்த முரண்­பா­டுகள் குறித்து விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்.

குண்­டு­வெ­டிப்பு நடந்த மறு­நாளே, அதா­வது 2019 ஏப்ரல் 27 அன்று, அந்த பகு­திக்கு பொறுப்­பான பொலிஸ் நிலை­ய­மான கல்­முனை தலை­மை­யக பொலிஸ் நிலை­யத்தின் பிர­தான பொலிஸ் பரி­சோ­த­கரால் , கல்­முனை நீதிவான் நீதி­மன்­றத்தில் இந்த வெடிப்புச் சம்­ப­வத்தில் 16 பேர் இறந்­த­தாக ஒரு பி அறிக்­கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இருப்­பினும், இரண்டு நாட்­க­ளுக்குப் பிறகு, மற்­றொரு பொலிஸ் நிலைய அதி­கா­ரி­யான அதா­வது அம்­பாறை தலை­மை­யக பொலிஸ் நிலைய பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர், சாய்ந்­த­ம­ருது குண்­டு­வெ­டிப்பில் 17 பேர் இறந்­த­தாக அதே நீதி­மன்­றத்தில் அறிக்கை அளித்­துள்ளார். இறந்­த­வர்கள் குறித்து புதிய தக­வல்கள் எதுவும் கிடைக்­காத நிலையில், பிரேத பரி­சோ­தனை அறிக்­கை­களில் 16 பேர் இறந்­தது தொடர்­பான விவ­ரங்கள் மட்­டுமே உள்ள நிலையில், 17 பேர் இறந்­த­தாக அம்­பாறை பொலிஸ் நிலைய பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் எந்த அடிப்­ப­டையில் அறிக்கை அளித்தார் என்­பது குறித்து விசா­ரிக்­கப்­பட வேண்டும்.

இந்த வெடிப்பு சம்­ப­வத்தில் முதலில் உயிர் பிழைத்­த­தாக அறி­விக்­கப்­பட்­ட­வர்கள் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்­திமா ஹாதி­யாவும் சஹ்ரான் மற்றும் ‍ஹாதி­யாவின் மகளும் ஆவர். வெடிப்பு சம்­ப­வத்தில் ஏற்­பட்ட காயங்­க­ளுக்கு சிகிச்சை பெற்று வந்த ஹாதி­யாவின் வாக்­கு­மூ­லத்தை பொலிஸார் முதன்­மு­தலில் 2019 மே 3 அன்று முற்­பகல் 11.30 மணிக்கு பதிவு செய்­தனர். மூன்று நாட்கள் வாக்­கு­மூலம் பதிவு செய்­யப்­பட்­டதில், 2019 மே 5 அன்று மாலை 5.19 மணிக்கு குண்­டு­வெ­டிப்பு நடந்த நேரத்தில் சாரா ஜெஸ்மின் சாய்ந்­த­ம­ருது வீட்டில் இருந்­த­தாக தெரி­ய­வந்­தது. அம்­பாறை பொலிஸ் நிலைய பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர், சாரா ஜஸ்மின் இறந்­து­விட்டார் என்று நம்ப வைப்­ப­தற்­காக 17 பேரின் இறப்­புகள் தொடர்பில் அறிக்கை அளித்­தாரா?, ஹாதியா, சாரா பற்­றிய விட­யங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு முன்பே சாராவின் இருப்பு குறித்து வெளிப்­ப­டுத்தப்பட்­டி­ருந்தால் அது எவ்­வாறு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது என்­பது குறித்தும் விசா­ரிக்­கப்­பட வேண்டும்.

அதே­போன்று சாரா உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக‌ எந்த ஆதா­ரமும் இல்­லாத நிலையில், டி.என்.ஏ சான்­றுகள் ஊடாக உறுதி செய்­யப்­பட்­டி­ருக்­காத போது சாரா இறந்­து­விட்­ட­தாக அம்­பாறை பொலிஸ் நிலையம் எவ்­வாறு நீதி­மன்­றத்­துக்கு அறிக்கை இட்­டது என்­பது குறித்து விசா­ரிக்க வேண்டும்.

சாய்ந்­த­ம­ருது தாக்­கு­த­லுக்குப் பிறகு, சாரா ஜஸ்மின் போன்ற தோற்­றமும் குரலும் கொண்ட ஒரு பெண் சம்­பவ இடத்தில் தன்­னிடம் பேசி­ய­தாக சஹ்­ரானின் மனைவி உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழு முன் அளித்த சாட்­சி­யத்தில் கூறி­யுள்ளார். அத்­துடன் இந்த விவ­காரம் தொடர்­பாக சஹ்­ரானின் மனைவி குற்றப் புல­னாய்வுத் திணைக்­கள அதி­கா­ரிகள் முன் ஒரு வாக்­கு­மூ­லமும் அளித்­துள்ளார். எனவே, இந்த விவ­காரம் குறித்து முறை­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்.

சாய்ந்­த­ம­ருது குண்­டு­வெ­டிப்பின் போது ஒரு மோட்டார் சைக்கிள் அப்­ப­கு­தியை விட்டு தப்பிச் சென்­ற­தாக‌ சம்­பவ இடத்தில் இருந்த அதி­கா­ரி­களும் பொது­மக்­களும் தெரி­வித்­துள்­ளனர். அவ்­வாறு மோட்டார் சைக்­கிளில் தப்பிச் சென்­றது யார் என்­பது குறித்து இது­வரை எந்த விசா­ர­ணையும் நடத்­தப்­ப­ட­வில்லை. எனவே அதுவும் விசா­ரிக்­கப்­பட வேண்டும்.

அதே நேரம் குறித்த குண்­டு­வெ­டிப்­புக்குப் பிறகு ஒருவர் தப்பி ஓடி­ய­தா­கவும், இரா­ணுவம் அவர் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­திய போதிலும் அவரைப் பிடிக்க முடி­ய­வில்லை என்றும், ஒருவர் தப்பிச் செல்லும் காட்சி சிசி­டி­வியில் பதி­வா­கி­யுள்­ளது என்றும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் தெரி­ய­வந்­தது. இந்த விவ­காரம் குறித்து முறை­யான விசா­ரணை நடத்­தப்­பட்டு உண்மை வெளிக்­கொ­ண­ரப்­பட வேண்டும்.

குண்­டு­வெ­டிப்­புக்குப் பிறகு ச­ஹ்ரானின் சகோ­த­ரர்­களில் ஒருவர் உயி­ருடன் இருந்­த­தா­கவும், அதன் பிறகு துப்­பாக்கிச் சூட்டு சத்தம் கேட்­ட­தா­கவும் ச­ஹ்ரானின் மனைவி பாத்­திமா ஹாதியா ஜனா­தி­பதி ஆணைக் குழுவில் கூறி­யுள்ளார். வீட்டில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி சஹ்­ரானின் சகோ­தரர் ஒருவர் உயி­ரி­ழக்­காமல் இருந்த போது, பின்னர் சம்­பவ இடத்­திற்கு வந்த ஒரு­வரால் அவர் கொலை செய்­யப்­பட்டு எரிக்­கப்­பட்­டாரா என்­பது குறித்து முழு­மை­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்.

அதே போன்று, குறித்த தினம் பொலி­வே­ரியன் கிரா­மத்­திற்குள் செல்லும் பாலத்தில் வைத்து இரா­ணுவ துப்­பாக்கிச் சூட்டில் முச்­சக்­கர வண்­டியில் சென்ற ஒரு பெண் கொல்­லப்­பட்டார். பொலி­வே­ரியன் கிரா­மத்தில் வெடிப்­புக்­குள்­ளான குறித்த வீட்டை சஹ்ரான் குழு பெற்­றுக்­கொள்ள‌ உத­வு­வதில் அப்பெண் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தாக அன்று அந்தப் பகு­தியில் ஒரு தோற்­றப்­பாடு நில­வி­யது. அது குறித்து முறை­யான விசா­ரணை எதுவும் நடத்­தப்­ப­ட­வில்லை. உத்­த­ர­வு­களை மீறி­யதால் துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­ட­தாக நீதி­மன்றில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்ட நிலையில், அப்­பெண்ணின் மரணம் குறித்த விசா­ர­ணைகள் பாதி­யி­லேயே நிறுத்­தப்­பட்­டன. அதன்­படி, அப் பெண்ணின் மரணம் குறித்து முறை­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்.

சாய்ந்­த­ம­ருது வீட்டுப் பகு­தியில் இருந்து அன்­றைய தினம் முன்­னெ­டுக்­கப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டின் இடையே ட்ரேசர் புலட் பிர­யோ­கிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் வெளிப்­பட்­டது. இரா­ணுவ நட­வ­டிக்­கை­களின் இடையே, இருக்கும் இடத்தை அடை­யாளம் காண்­ப­தற்­காக அதி­க­மாக பயன்­ப­டுத்­தப்­ப‌டும் ட்ரேஷர் புலட் இந்த கும்­பலின் கைக­ளுக்கு எப்­படி கிடைத்­தது என்­பது குறித்து எந்த வெளிப்­ப‌­டுத்­தல்­களும் இல்லை. எனவே அதுகுறித்தும் முறை­யான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படல் வேண்டும்.

இந்த சம்­ப­வத்­திற்குப் பிறகு சாய்ந்­த­ம­ருது வீட்டின் முன் இறந்து கிடந்த நபரின் கையில் இருந்த துப்­பாக்கி, இலங்கை பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்ட துப்­பாக்­கி­யாகும். குறித்த நபரின் கைக­ளுக்கு அந்த‌ துப்­பாக்கி எப்­படி கிடைத்­தது என்­பது குறித்து முறை­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்.

சாய்ந்­த­ம­ருது வெடிப்பு நடந்­த­போது கல்­முனை சியாமும் குறித்த வீட்­டி­லி­ருந்து தப்பிச் சென்­ற­தாக ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­விடம் தகவல் முன் வைக்­கப்­பட்­டி­ருந்­தாலும், அதை உறு­திப்­ப­டுத்தும் எந்த சான்­று­களும் கிடைக்­க­வில்லை என்று கூறப்­பட்­டது. எனவே, இந்த விவ­காரம் தொடர்­பா­கவும் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும்.

குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் நடத்­திய விசா­ர­ணை­களில், சாரா ஜஸ்­மினின் தேசிய அடை­யாள அட்­டைக்கு 2020 ஆம் ஆண்டு சிம் அட்டை ஒன்று பெறப்­பட்­டுள்ளது‌ தெரி­ய­வந்­தது. அந்த விசா­ர­ணைகள் 2020 ஆம் ஆண்­டுக்குப் பிறகு நிறுத்­தப்­பட்­டன.

அதன்­படி, குறித்த‌ சிம் அட்டை வாங்­கப்­பட்­டது குறித்து விசா­ரிக்­கப்­பட வேண்டும்.

அதேபோல், சாய்ந்­த­ம­ருது தாக்­கு­த­லுக்கு சில நாட்­க­ளுக்குப் பிறகு, சாரா ஜஸ்­மினின் தேசிய அடை­யாள அட்­டையை அம்­பாறை வல­யத்­துக்கு பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்சர் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைத்­துள்ளார். குற்றம் நடந்த இடத்தில் ஆரம்­பத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பொருட்­களின் பட்­டி­யலில் அத்­த­கைய தேசிய அடை­யாள அட்டை காணப்­பட்­ட­தாக எந்தக் குறிப்பும் இல்லை. எனவே சாரா சம்­பவ இடத்­தி­லேயே இறந்­து­விட்டார் என்று மக்­களை நம்ப வைக்கும் சதித்­திட்­டத்தின் விளை­வாக இந்த தேசிய அடை­யாள அட்டை பின்னர் கைய­ளிக்­கப்­பட்­டதா என்­ப­தையும் விசா­ரிக்க வேண்டும்.

ஹன்சீர் அசாத் மெள­லானா வெளிப்­ப­டுத்­திய விட­யங்கள் தொடர்­பாக:

ஹன்சீர் அசாத் மௌலா­னாவின் கருத்து தொடர்­பாக சமூக மற்றும் சமய‌ மையம் அளித்த முறைப்­பாட்­டுக்கு அமைய குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் தற்­போது விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. அவ­ரது கருத்து தொடர்பில் ஆராய முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­­ர­ம­சிங்க நிய­மித்த குழுவின் அறிக்­கையை முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில பிர­சித்தம் செய்தார். அந்த அறிக்­கையில், அசாத் மௌலானா­விற்கும் சஹ்ரான் குழு­விற்கும் இடையே தொடர்பு இருப்­ப­தாக சந்­தே­கிப்­ப­தாக குறித்த குழு கூறி­யுள்­ளது. கடந்த 2018 ஆகஸ்டில் சஹ்­ரானின் சகோ­தரர் ரில்­வா­னுக்கு சிகிச்சை அளித்த மருத்­து­வரும், அசாத் மௌலா­னாவும் ஒரே கிரா­மத்தில் வசித்து வந்­த­தா­கவும், அசாத் மௌலானா, மருத்­துவர் வெளி­நாடு செல்ல உத­வி­ய­தா­கவும், தெஹி­வளை எபனைசர் பகு­தியில் இரு­வ­ருக்கும் வீடுகள் இருப்­ப­தா­கவும் குறித்த அறிக்கை கூறு­கி­றது. செனல் 4 தொலைக்­காட்­சியின் முழு வெளிப்­ப­டுத்தல் குறித்தும் விசா­ரிக்கும் அதே வேளையில், பின்­வரும் விட‌­யங்­க­ளையும் விசா­ரிக்க வேண்டும்.

முன்னாள் இரா­ணுவ உளவுத்துறை பணிப்­பாளர் சுரேஷ் சலே கடந்த‌ 2019 ஏப்ரல் 21 அன்று தன்னை தொலை­பே­சியில் அழைத்து ஜமீலை அழைத்துச் செல்­லு­மாறு கூறி­ய­தாக அசாத் மௌலானா குற்றம் சாட்­டு­கிறார். இந்த ஆவ­ணத்தில் முன்னர் குறிப்­பிட்­டது போல, கடந்த‌ 2019 ஏப்ரல் 21 அன்று தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் குண்டு வெடிக்­க­வில்லை என்­ப­துடன் அன்று காலை 8.51 முதல் 8.54 வரை­யான காலப்ப­கு­திக்குள் ஜமீ­லுக்கு ஒரு தொலை­பேசி அழைப்பு வந்­தது. அந்த அழைப்­பிற்குப் பிறகு, ஜமீல் ஹோட்­டலை விட்டு வெளி­யேறி தெஹி­வ­ளையில் உள்­ள ட்­ரொ­பிகல் இன் தங்­கு­வி­டு­திக்கு சென்றார். அங்கு அவர் தனது பையை வைத்­து­விட்டு தெஹி­வ­ளையில், எபனைசர் பகு­தியில் உள்ள முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு சென்றார். ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில், பள்­ளி­வா­சலின் மௌலவி அளித்த சாட்­சி­யத்தில், ஜமீல், நபர் ஒரு­வ­ருக்­காக‌ நீண்ட நேரம் காத்­தி­ருந்­த­தா­கவும், நண்பர் வரும் வரை காத்­தி­ருப்­ப­தாக தன்­னிடம் கூறி­ய­தாகத் தெரி­வித்­துள்ளார்.

செனல் 4 குற்­றச்­சாட்­டு­களை விசா­ரித்த ஜனா­தி­பதி குழுவின் கூற்­றுப்­படி, தெஹி­வளை, எபனைசர் பிளேஸில் அசாத் மௌலா­னா­வுக்குச் சொந்­த­மான ஒரு வீடு உள்­ளது. அப்­ப­டி­யானால், ஜமீல் தாஜ் ஹோட்­டலில் இருந்து தெஹி­வ­ளையில் உள்ள எபனைசர் பள்­ளி­வா­ச­லுக்குச் சென்று அசாத் மௌலா­னாவைச் சந்­திக்க காத்­தி­ருந்­தாரா அல்­லது அவ­ரது பிர­தி­நி­தி­களில் ஒரு­வரைச் சந்­திக்க காத்­தி­ருந்­தாரா என்­பது குறித்து விசா­ரிக்­கப்­பட வேண்டும்.

கிடைத்த தக­வலின் அடிப்­ப­டையில் செயற்­பட தவ­றி­யமை :

மேலே குறிப்­பி­டப்­பட்ட நான்கு முக்­கிய விட­யங்­க­ளுக்கு மேல­தி­க­மாக, 2019 ஏப்ரல் 21 அன்று கிடைத்த புல­னாய்வுத் தக­வல்­களின் அடிப்­ப­டையில் செயல்­படத் தவ­றி­யமை குறித்தும் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும். 2019 ஏப்ரல் 21 அன்று கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களை குறி­வைத்து தாக்­குதல் நடத்­தப்­ப­டலாம் என்று 2019 ஏப்ரல் 20 அன்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த‌ லலித் பத்திநாயக்க அன்று இரவு 7.19 மணிக்கு கொழும்பு தெற்கு பொலிஸ் அத்தியட்சர் நிஷாந்த சொய்சாவை அழைத்து, உயிர்த்த‌ ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், தேவாலயங்களுக்கு பாதுகாப்பை வழங்கவும், நடமாடும் ரோந்துகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தியதாக ஜனாதிபதி ஆணைக் குழுவில் தெரியவந்தது. கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லமும் கொழும்பு தெற்குப் பொலிஸ் வலயத்தில் அமைந்துள்ளது. இவ்வாறான நிலையில், இந்தத் தாக்குதல் குறித்த தகவல்களை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வழங்கத் தவறியது குறித்தும் சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த விடயங்கள் தீர்க்கப்படுமானால் பெரும்பாலும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னணி, சதிகாரர்கள் தொடர்பில் தெளிவான பக்கங்களை வெளிப்ப‌டுத்தலாம். அதனை தவிர்த்து, அமெரிக்காவின் எப்.பி.ஐ. அதிகாரி சில வருடங்களுக்கு முன்னர் முன் வைத்த அறிக்கையுடன் இணைந்த சத்தியக் கடதாசியை புதிய விடயமாக முன் வைத்து, பிரதான சூத்திரதாரிகளை காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் 9 சர்வதேச சிறப்பு விசாரணை நிறுவனங்கள் உதவின. அவர்களது குழுவினர் இங்கிருந்தவாறு இந்த உதவி ஒத்தாசைகளை முன்னெடுத்தன.

எப்.பி.ஐ., ஸ்கொட்லன்ட் யார்ட், அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் நியூஸிலாந்து ஆகிய சிறப்பு விசாரணையாளர்கள் இந்த 9 வெளிநாட்டு விசாரணைப் பிரிவில் உள்ளடங்கியிருந்தனர். இதில் அமெரிக்காவின் எப்.பி.ஐ. விசாரணைகள் முக்கியமானவை.

21/4 தாக்குதலின் பின்னர் இலங்கை வந்த அமெரிக்காவின் எப்.பி.ஐ. விசாரணைக் குழு, தொலைதொடர்பு விவகாரம், வெடிபொருட்கள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் தேர்ச்சிபெற்ற அதிகாரிகளை உள்ளடக்கியிருந்தது.

அவர்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் பகுப்பாய்வுக்கு தேவையான பல்வேறு தடயங்களை கண்டறிந்து மேலதிக பகுப்பாய்வுக்காக சில சான்றுகளை அவர்களுடன் எடுத்துச் சென்றிருந்தனர். இதற்காக நீதிமன்ற அனுமதியும் உரிய வழி முறைகளும் பின்பற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில் அதனை பகுப்பாய்வு செய்த பின்னர் எப்.பி.ஐ. 5 சிறப்பு அறிக்கைகளை சி.ஐ.டி.க்கு அனுப்பியுள்ளதுடன் இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில், 21/4 தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் சமஷ்டி நீதிமன்றத்தில் 3 இலங்கையர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித் திணைக்களம் அறிவித்துள்ளது.

21/4 தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்த, இன்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி, மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான், ஹயாது மொஹம்மட் அஹமட் மில்ஹான் எனும் அஹமட் மில்ஹான் ஆகிய மூவர் மீதே இவ்வாறு லொஸ் ஏஞ்சலிஸ் சமஷ்டி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் இணைக்கப்பட்ட சத்தியக் கடதாசியே இந்த நாட்களில் புதிய விடயங்களாக பேசப்பட்டு வருகின்றது.

எனவே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய, சதி செய்த, அதன் பின்னணியில் உள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும். எனவே தான் அது குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்படல் வேண்டும்

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc