அரசியல் கைதியாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் திஸாநாயக்க குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் குடும்பத்தினரை நான் சந்தித்தேன். நான் பிரதமராக இருந்த காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனயுடன் இணைந்து, என் அனுமதியுடன், அந்நாளில் பொருளாதார செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் படி, மாகாண சபைகளின் நிதி வைப்பு கணக்குகளில் பணம் வைத்திருக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. அரச நிதி மற்றும் பிற நிதிகள் அந்த வருடத்துக்குள் செலவிடப்பட வேண்டும். இல்லையெனில், அந்த நிதியை மீண்டும் நிதியமைச்சுத் துறைக்கு அல்லது மாகாண நிதி துறைக்கு ஒப்படைக்க வேண்டும்.
பணத்தை வைத்திருந்து பிற திட்டங்களுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமான செயலாக இருப்பதால், இந்த நடவடிக்கையை எடுத்தோம். அப்போது சாமர சம்பத் உள்ளிட்ட சில முதலமைச்சர்கள் என்னை தொடர்பு கொண்டார்கள். ஏன் இப்படி செய்ய முடியாது என்று கேட்டார்கள். அதன் பேரில் அவர்கள் அந்த நிதியை வைப்பு கணக்குகளில் இருந்து திரும்பப் பெற்றனர்.
இந்த நடவடிக்கைகள் உவா மாகாணத்தில் மட்டும் அல்லாது, பிற மாகாணங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. சாமர சம்பத் எப்போதும் என்னை தொடர்பு கொண்டு, கல்வி உள்ளிட்ட பல விஷயங்களில் எனது உதவியை நாடியிருந்தார். ஆனால் நாம் இருவரும் இரு பக்கங்கள் இருந்தோம்.
தற்போது அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர் மீது முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.
இந்த விவகாரம் ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட்டுள்ளது. ஒரு விசாரணையாலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. சந்தேகத்திற்குள்ள நபராக கூட அறிவிக்கப்படவில்லை. விசாரணை நடப்பது பழைய சம்பவங்களை சார்ந்தே. புதிய குற்றச்சாட்டுகளோ சம்பவங்களோ அல்ல.
மற்றொரு முக்கிய விடயம் என்னவென்றால், சாமர சம்பத் பதிலளித்தவுடன் அவரை கைது செய்ததாகவே அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு செய்வது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?
சாமர சம்பத் பாராளுமன்றத்தில் அடிக்கடி பேசுபவர். அவர் எதிர்க்கட்சியின் பலமான குரலாக திகழ்கிறார். இந்நடவடிக்கைகள் அவரின் பாராளுமன்ற செயற்பாடுகளுடன் தொடர்புடையதா என்பது பெரிய கேள்வி. எனவே, இந்த விடயத்தை அவர் பாராளுமன்றத்தில் விசாரணைக்காக கேட்க வேண்டும். இது பாராளுமன்ற உரிமை மீறலாக இருக்கிறதா என்பது விசாரணை செய்யப்பட வேண்டும்.”