(எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய விசாரணைகளுக்கு அமைய, சஹ்ரான் கும்பலுடன் தொடர்புகளைப் பேணியதாக கூறபப்டும் உளவுத் துறையின் சொனிக் சொனிக் எனும் பெயரால் அறியப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை சி.ஐ.டி.யினர் விசாரணை செய்துள்ளனர். தொடர்ச்சியாக விசாரணைகளை தவிர்த்து வந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் கடந்த 7 ஆம் திகதி இவ்விசாரணைகள் நடாத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் ஆரம்பத்தில் விசாரணை செய்த, தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன உள்ளிட்டோர் சொனிக் சொனிக் தொடர்பில் விடயங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
மாத்தளை சஹ்ரானுடன் தொடர்புகளை குறித்த அதிகாரி பேணி, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகள் செய்ததாக காண்பிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் குறித்த உளவுத்துறை அதிகாரியின் பங்களிப்பு தொடர்பில் தெரியவந்திருந்தது.
இவ்வாறான நிலையில், அவரை விசாரிக்க தொடர்ச்சியாக தடைகள் இருந்த நிலையிலேயே இப்போது, புதிய விசாரணைகளுக்கு அமைய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.