இலங்கை மீளவொரு தேர்தல் களத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. செப்டெம்பர் (2024) ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நவம்பர் (2024) பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து, எதிர்வரும் மே-06 (2025) அன்று உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த இலங்கையின் அனைத்து உள்ளூராட்சி சபைகளும் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. முன்னைய தேர்தல் நிலைவரங்களிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தல் இயல்பு வேறுபட்டதாக அமைகின்றது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக்கூடியதாக அமைகின்ற போதிலும், முழுமையாக கடந்த தேர்தல் முடிவுகளை பிரதிபலிக்கக்கூடியவையாக அமையப் போவதில்லை.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பில் செல்வாக்கு செலுத்திய காரணிகளிலிருந்து வேறுபட்டதொரு அரசியல் நடத்தையே உள்ளூராட்சி சபைகளில் பிரதிபலிக்கக்கூடியதாகும். கடந்த கால தேர்தல்களில் அத்தகையதொரு போக்கினையே அவதானிக்கக்கூடியதாகவும் அமைந்திருந்தது. இக்கட்டுரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஈழத்தமிழர் எதார்த்தங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இடம்பெற்ற நிகழ்வை பதிவு செய்து முன்னகர்த்துவது பொருத்தமான விளக்கத்தை வழங்கக்கூடியதாக அமையும். 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் இணுவில் மேற்கு தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த வேட்பாளர் 588 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் மொத்த வாக்குகளில் 38.36 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் இரண்டாம் நிலையில் 26.42 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தார். கடந்த கால வரலாறுகளில் இணுவில் கிராமம் தமிழரசுக்கட்சியின் கோட்டையாக பிரதான வெற்றிப் பிரதேசமாகவே அமைந்திருந்தது.
தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பலரும் இணுவில் கிராமத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்நிலையில் இணுவில் மேற்கு தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த வேட்பாளரின் வெற்றி பல தளங்களில் அதிர்ச்சியை உருவாக்கியிருந்தது. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணுவில் மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதி, 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்ற வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் இணைக்கப்பட்டார்.
எனினும் இணுவில் மேற்கு அமைந்துள்ள மானிப்பாய் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி வெறுமனவே 1,482 வாக்குகளையே பெற்று, மொத்த வாக்குகளில் 4.18 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தது. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணுவில் மேற்கு தொகுதியில் பாரிய வெற்றியை பதிவு செய்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர், 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இணுவில் மேற்கில் வெறுமனவே இரட்டை இலக்கத்திலேயே வாக்கினைப் பெற்றிருந்தார். இது அடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான மக்களின் இரு வேறுபட்ட எண்ணங்களை பிரதிபலிக்கின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரதிநிதித்துவம் மக்களுடன் ஆழமான பிணைப்பைப் பெறுகின்றது. இங்கு கட்சிகளை தாண்டி நபர்கள் மீதான ஆர்வமே தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்துகின்றது. உறவு முறை, சாதியம் என அடிப்படையான சமூக உறவுக் காரணிகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரதிபலிக்கும் காரணிகளாக அமைகின்றது. வட்டாரங்களில் ஆதிக்கம் செலுத்தும், நன்கு நல்விம்பத்துடன் அறியப்பட்ட நபரே வெற்றி பெறக்கூடியவராக காணப்படுகின்றார். மேற்குறிப்பிட்ட 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணுவில் மேற்கு வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரின் வெற்றி அத்தகையதொரு தாக்கத்தின் பிரதிபலிப்பாகவே அமைந்திருந்தது.
குறித்த ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் இளைஞராகவும், அதிக நட்பு வட்டாரத்தை கொண்டவராகவும், குடும்ப ரீதியாக கௌரவமான நிலையை கொண்டிருந்தார். குறித்த வேட்பாளருக்கு எத்தகைய அரசியல் பின்புலமும் அமைந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடம் தனது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் எந்தவொரு கட்சியும் சரியான அங்கீகாரத்தை வழங்கியிருக்கவில்லை.
இந்த பின்னணியிலேயே அரசியல் பிரவேசத்துக்கானதொரு கருவியாக ஐக்கிய தேசிய கட்சி என்பதை பயன்படுத்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொண்டிருந்தார். இணுவில் மேற்கு மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற வாக்கானது ஐக்கிய தேசிய கட்சிக்கானதாக இருக்கவில்லை. எங்கன்ட பெடியன், தெரிஞ்ச பெடியன், நல்ல பெடியன், இவனை சபைக்கு அனுப்பினா நாங்க எதுவும் இலகுவாக கேட்கலாம் என்ற எண்ணங்களில் வேட்பாளரை மையப்படுத்தியே தீர்மானம் எடுத்திருந்தனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வட்டார அடிப்படையில் வேட்பாளர் தெரிவு செய்வதிலேயே கட்சியின் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.
வட்டாரங்களில் தாக்கம் செலுத்தக்கூடிய வேட்பாளர்களை சீராக ஈடுசெய்யும் கட்சிகளே வெற்றியை உறுதிப்படுத்தக்கூடியதாக அமையும். மாறாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி வெளிப்படுத்தியிருந்த பாரிய அலையின் வீச்சு வாக்காளர்களின் எண்ணங்களில் வாக்களிப்பில் பாரிய தாக்கத்தை செலுத்தும் காரணியாக அமையப் போவதில்லை. எனினும் இவ் அலையின் தாக்கத்தை முழுமையாக நிராகரிக்கவும் முடியாத நிலைமைகளே காணப்படுகின்றது. வேட்பாளர் தெரிவில் தேசிய மக்கள் சக்தியின் அலை வீச்சு இனங்காணக்கூடியதாக காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஈடுபட்டவர்கள் ஒருசிலர், இம்முறை தேசிய மக்கள் சக்தி சார்பாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்கள். அதேவேளை, வடக்கு – கிழக்கு முழுமையாக எவ்வித நிராகரிப்புகளுமின்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேட்பு மனுத் தாக்கல்களை மேற்கொண்டுள்ளமையும், வேட்பாளர் தெரிவில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளவில்லை என்பதையே உறுதி செய்கின்றது. இதுவும் பகுதியளவில் தேசிய மக்கள் சக்திக்கு சாதகமான நிலைமைகளை எடுத்துக்காட்டுகின்றது.
தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வெற்றி அவசியமாகின்றது. கட்சிகளின் செயற்பாடுகளிலும் அதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கடந்த காலங்களில் அதிகம் நேரிய மரங்களாக காட்டிக்கொண்டிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் விட்டுக்கொடுப்புடன் கூட்டாக செயற்பட தயாராகி உள்ளமை வரவேற்கத்தக்க அரசியலாகும்.
அரசியலில் விட்டுக்கொடுப்புகளும் கூட்டுச்செயற்பாடுகளும் பிரதானமான யுக்தியாகும். கடந்த காலங்களில் இதனை மறுத்திருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் தோல்வியூடாக சில ஆரோக்கியமான மாற்றங்களுக்கு தயாராகியுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஐங்கரநேசனின் தமிழ்த்தேசிய பசுமை இயக்கம், தவராசா தலைமையிலான ஜனநாயக தமிழரசுக் கட்சி, சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசிய கட்சி மற்றும் கந்தையா அருந்தவபாலன் ஆகியோருடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையில் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையில் ஐங்கரநேசன் செல்வாக்குமிக்க நபர் என்ற ரீதியில் வேட்பாளர் தெரிவில் அவருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அவ்வாறே சாவகச்சேரியில் கந்தையா அருந்தவபாலன் மற்றும் வல்வெட்டித்துறையில் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு வேட்பாளர் தெரிவில் சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமை அறியக்கூடியதாக உள்ளது. முன்னணியில் இத்தகைய கூட்டுச் செயற்பாடும் விட்டுக்கொடுப்பு அரசியலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றி சார்ந்து காணப்படும் உத்வேகத்தின் வெளிப்பாடாகவே அமைகின்றது. எனினும் சபைகளுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதில் நெருக்கீடுகளை எதிர்கொண்டமையும் அறியக்கூடியதாக அமைந்திருந்தது. இது அரசியல் கட்சி மக்களிடம் போதியளவில் பரந்துபட்ட கட்டமைப்பை கொண்டிருக்காமையின் வெளிப்பாடாகவே காணப்படுகின்றது.
தமிழ்த்தேசிய மக்கள் முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே வடக்கு-கிழக்கு முகத்தை கொண்ட பாரம்பரியமான கட்சியாக தமிழரசுக்கட்சி அமைகின்றது. எனினும் தமிழரசுக்கட்சியின் உட்கட்சி ஜனநாயகம் என்ற போர்வையில் அணிகளின் உருவாக்கம், கட்சியின் எதேச்சதிகார தலைமைகளால் கூட்டமைப்பு உடைக்கப்பட்டமை என பலவீனமான பக்கத்தையும் கொண்டுள்ளது. இப்பின்னணியில் பதில் தலைவராகவும், பதில் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சியை தொடர்ச்சியாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றி அவசியமான காரணியாக அமைகின்றது. அதன் பின்னணியிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகளும் இடம்பெற்றுள்ளது.
வெற்றியை இலக்காக கொண்டு வட்டாரங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நபர்களை தமிழரசுக்கட்சி களைந்தெடுத்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் தென்னிலங்கை கட்சிகள் உட்பட வேறு கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் வேட்பாளர்களை இம்முறை தமது பட்டியலுக்குள் தமிழரசுக்கட்சி உள்வாங்கியுள்ளது. எடுத்துக்காட்டாக கடந்த 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணுவில் மேற்கு வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பாரிய வெற்றியை பெற்றிருந்த வேட்பாளரை, இம்முறை தமிழரசுக்கட்சி தமது பட்டியலில் இணைத்துள்ளது. இவ்வாறான சூழலை பல வட்டாரங்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் கணிசமான அளவில் உயர்வாக காணப்படுகின்றது. குறிப்பாக வடக்கில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உட்பட பல பிரதேச சபை பட்டியல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினதும் யாழ்ப்பாணம் மாநகர சபை உட்பட தாக்கல் செய்யப்பட்ட பல பிரதேச சபை பட்டியல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினதும் நல்லூர் பிரதேச சபை பட்டியல் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியை பொறுத்தவரை யாழ்ப்பாணம் மாநகர சபை தொடர்பில் பாரிய நம்பிக்கை காணப்பட்டது. இறுதியாக தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் இறுதி இரு வருடங்களும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான அணியே ஆட்சி செய்திருந்தது. இந்த பின்னணியில் காட்சிப்புலனாகும் பல செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தனர். இந்தப் பின்னணியில் இம்முறை தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் மணிவண்ணன் தலைமையில் யாழ்ப்பாணம் மாநகர சபையில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் வேட்பாளர் தெரிவில் காணப்பட்ட நெருக்கடிகளால் யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்திலேயே கணிசமான சபைகளில் தமிழ் மக்கள் கூட்டணி வேட்பு மனுத்தாக்கலை செய்திருக்கவில்லை.
இந்நிலையில் வெற்றி இலக்காக எதிர்பார்க்கப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை பட்டியல் நிராகரிப்பும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இருப்பை அச்சுறுத்தக்கூடியதாகும். இதனடிப்படையிலேயே பட்டியல் நிராகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள். இவ்வழக்கு முடிவு தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு சாதகமாக அமையுமாயின், யாழ்ப்பாணம் மாநகர சபையில் மணிவண்ணன் தலைமையிலான அணி கணிசமான தாக்கத்தை செலுத்தும் வேட்பாளர்களாக மாறக்கூடிய சூழல் காணப்படுகின்றது.
எனவே, 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான முன்னாயத்த போட்டிகள் கொதி நிலையான களத்தையே உணர்த்தியுள்ளது. கட்சிகளை தாண்டி வேட்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் போட்டியில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தெரிவில் உயரளவிலான செல்வாக்கை செலுத்தியுள்ளனர். வட்டாரங்களில் செல்வாக்குமிக்க நபர்கள் மீது குறிவைத்து செயற்பட்டுள்ளார்கள். வெற்றி என்பதை மாத்திரம் இலக்காக கொண்டு வேட்பாளர் வேட்டையில் ஈடுபட்டுள்ளதையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஆரம்ப நிலைமைகள் அதிகம் தொங்கு சபைகளுக்கான எதிர்வு கூறல்களையே அடையாளப்படுத்துகின்றது.
எந்தவொரு கட்சியும் சபைகளில் அறுதிப் பெரும்பான்மையை உறுதி செய்ய முடியாத நிலைமைகளுக்கான ஏதுவான சூழல்களே காணப்படுகின்றது. தேர்தலுக்கு பின்னரான கூட்டுக்களே சபையின் ஸ்திரமான இருப்பையும் அபிவிருத்தியையும் உறுதிசெய்யக்கூடிய வாய்ப்புகளே எதிர்வுகூறப்படுகின்றது. அங்கு கட்சிகளின் நலன் ஆதிக்கத்தை பெறுவதாக அமையும். இலங்கை உள்ளூராட்சி கட்டமைப்பில் தேர்தல்களில் மக்களின் தெரிவு நபராகவும், தேர்தலுக்கு பின்னரான ஆட்சி உருவாக்கத்தின் கட்சி ஆதிக்கமும் செல்வாக்கு செலுத்துகிறது
ஐ.வி.மகாசேனன்