தமிழ் அமைப்புக்கள் மீதான தடைகளும் பொருளாதார மீட்சிக்கான வெற்றிடமும்; மீள பரிசீலிக்குமா அரசாங்கம்?!

மழை நின்றும் தூவானம் நின்று விடவில்லை. அது போல தான் யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் நெருங்கும் நிலையில் கூட தமிழ் மக்கள் மீதான தடைகளும், அமைப்புக்கள் மீதான தடைகளும் பயங்கரவாதம் என்ற பெயரில் தொடர்கின்றது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்த விடயம் இன்று பேசுபொருளாக உள்ளது. இந்தத் தடைகள் மூலம் தடையிடப்பட்ட புலம் பெயர் அமைப்புகளின் பெயர்களை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அத்தோடு அந்த அமைப்பின் செயற்பாட்டாளர்களையும் பெயர் பட்டியலிட்டு இலங்கை நாட்டிற்கு வரமுடியாதவாறு தடையினைப் பிறப்பித்துள்ளார்கள். இதன் மூலம் அரசாங்கம் சாதிக்க முயல்வது என்ன? தடை செய்யப்பட்ட அமைப்புகள் உண்மையில் பயங்கரவாத அமைப்புகளா? இன்னும் பயங்கரவாதம் இருக்கின்றதா என்ற பல கேள்விகள் மக்கள் மனங்களில் எழாமல் இல்லை.

இலங்கை தீவு ஆட்சியாளர்களின் திட்டமிடாத அரசியல், பொருளாதாரக் கொள்கைகளாலும், 30 வருட யுத்தத்தாலும் பொருளாதார ஸ்திர தன்மையை இழந்து பொருளாதார மீட்சிக்காக போராடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் புலம்பெயர் முதலீட்டாளர்களையும், புலம்பெயர் அமைப்புக்கள், வெளிநாட்டு பல்தேசிய கம்பனிகள் என்பவற்றின் உதவிகளைப் பெற்று நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. ஆனால் கடந்த கால அரசாங்கங்களை போல இவ் அரசாங்கமும் புலம் பெயர் அமைப்புகளையும், நபர்களையும் தடை செய்து நாட்டுக்கு வரும் முதலீடுகளை குறைக்கும் செயற்பாட்டையே மேற்கொள்கின்றது.

தமிழ் தேசிய இனம் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தயாரில்லை. அகிம்சை ரீதியில் தனக்கான உரிமைக்காக ஜனநாயக இடைவெளிகளைப் பயன்படுத்தியே போராடி வருகின்றது. அதற்கு பக்க பலமாக புலம் பெயர் அமைபபுகளும், புலம் பெயர் தமிழ் மக்களும் செயற்படுகிறார்களே தவிர, மாறாக புலி உருவாக்கம் இடம் பெறவில்லை. அதற்கான வாய்ப்புகளும் 16 வருடங்களுக்கு பின் இருக்குமா என்பதை சிந்திக்க வேண்டும். வடக்கு – கிழக்கில் தேசிய மக்கள் சக்தி கூட பெருவாரியான வாக்குகளைப் பெற்றுள்ளமையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பல ஆயிரக்கணக்கான போராளிகள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வின் பின் சமூகமயப்படுத்தப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிறார்கள். புலம் பெயர் மக்களும் வடக்கு – கிழக்கு தமிழ்  மக்களும்  தம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இது இலங்கையில் பொருளாதாரத்திற்கு ஒரு பலமாகவும் இருக்கின்றது. ஆனால் பயங்கரவாதம் என்ற ஒரு கண்ணாடியைப் போட்டுக் கொண்டு காலத்திற்கு காலம் கடந்த அரசாங்கங்கள் செய்த அதே தவறை தற்போதைய அரசாங்கமும் செய்கின்றதா என்ற கேள்வி எழுகிறது.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடம் ஏறுகின்ற அரசாங்கங்கள் காலத்துக்குக் காலம் தமிழர் விவகாரத்துடன் தொடர்புடைய விடயங்களில் தமது நலன்களுக்காக இவ்வாறான முடிவுகளை அறிவிப்பதும், அந்த முடிவுகளை நடைமுறைப்படுத்தாது விடுவதும் மீண்டும் புதிது புதிதாக முடிவுகளை அறிவிப்பதும் வழமையான ஒன்று.

2009 மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பின்னர் இந்த அமைப்புகளில் பல மாறி மாறி பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு மீண்டும் பலமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களின் பின்னர் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் 424 நபர்களையும் 16 அமைப்புகளையும் தடை செய்தது.

நல்லாட்சி அரசாங்கம் எட்டு அமைப்புகள் மற்றும் அவற்றில் அங்கம் வகித்த 267 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியது. பின்னர் மீண்டும் கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கம் ஏழு அமைப்புகளையும் 389 நபர்களையும் தடைப் பட்டியலில் சேர்த்தது. பின்னர் 6 அமைப்புகளும் 316 நபர்களும் மீண்டும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் கட்சிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறியே புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீதான தடைகளை விதிப்பதும் பின்னர் சில அமைப்புகள் மீதான தடைகளை நீக்குவதும் மீண்டும் தடை விதிப்பதுமாக  செயற்பட்டு வருகின்றன.

இதுபற்றி டெய்லிமிரர் (16.08.2022) தனது ஆசிரியர் தலையங்கத்தில் பின்வரும் கேள்விகளை முன்வைத்திருந்தது. தேசிய பாதுகாப்பிற்கு விரோதமான அமைப்புக்கள் என தடைசெய்யப்பட்ட இரண்டு தடவையும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ராஜபக்‌ஷவால் முடிவெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் தடையை நீக்கும் முடிவுகளை ரணில் விக்கிரமசிங்க முதல் முறையாக பிரதமராகவும் இப்போது ஜனாதிபதியாகவும் இருக்கும் போது எடுக்கப்பட்டுள்ளது. எனவே இவை உளவுத்துறை மதிப்பீடுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல. அரசியல் முடிவுகள் என்று எவரும் முடிவு செய்வது இயல்பானதே.

எவ்வாறாயினும் ஒவ்வொரு முறையும் அரசாங்கத்தின் முடிவுகள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளின் இத்தகைய மதிப்பீடுகள் மற்றும் பரிந்துரைகளுக்கு காரணமாகும் என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்‌ஷர்களின் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கத்தின் தலைவர்கள் காது கேளாத மௌனத்தையும் மீறி சமீபத்திய முடிவுக்கு உடன்படுகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் எட்டு அமைப்புக்கள் மற்றும் 267 நபர்களை பட்டியலிலிருந்து நீக்கிய போது அவர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பதையும் டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம் அப்போது சுட்டிக் காட்டியிருந்தது.

உண்மையில் ‘தேசிய பாதுகாப்பு’ என்ற போர்வையில் அரசியல் தலைமைகள் மேற்கொள்ளும் தீர்மானங்களே இவை. இந்தத் தீர்மானங்களுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. கடந்த கால தடைகள், தடை நீக்கம் என்பன மாத்திரமல்ல  தற்போதைய தடையும் இதனையே உணர்த்தி நிற்கின்றன.

தற்போதைய ஜனாதிபதி அனுர அரசாங்கம் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பில், தமிழீழ விடுதலைப் புலிகள்  உட்பட 15 அமைப்புகள் மீதான தடை தொடரும் என அறிவித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் கையொப்பமிட்டுள்ள இந்த வர்த்தமானியில், இந்த அமைப்புகள் தொடர்ச்சியாக பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அவற்றின் நிதி மற்றும் பொருளாதார சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 222 தனி நபர்களுக்கும் தடை விதித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் மறுவாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலகத் தமிழ் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் நிவாரண நிதி, தலைமையகக் குழு, கனடியத் தமிழர் தேசிய மன்றம், தமிழ் இளைஞர் அமைப்பு என்பவையே இந்த அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புகளாகும்.

இதில் உண்மையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் உள்ளார்களா? இந்த அமைப்புக்கள் தொடர்ந்தும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இயங்குகின்றதா என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும். உண்மை வெளிப்படுத்தப்பட்டு தடைகளை பரிசீலனை செய்ய வேண்டும. இந்த அமைப்புக்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 222 தனிநபர் என்பது சாதாரண விடயமல்ல. எமது நாட்டுக்கு வரக்கூடிய வெளிநாட்டு முதலீட்டை அது குறைக்கும். எனவே இதனை பாதுகாப்பு அமைச்சும், அரசாங்கமும் அரசியல் நோக்கத்திற்காக கையாளாது உண்மையான பயங்கரவாதத்தை கண்டறிந்து எமது நாட்டின் பொருளாதார மீட்சிக்கு வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்க வேணடும். அதன் மூலமே நாட்டை பொருளாதார ரீதியாக மீள கட்டியெழுப்ப முடியும்.

ஹரிகரன் ரவீந்திரநாதன்

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc