இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்ற விவாதங்கள், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் தமிழர்களுக்கு எதையும் பெற்றுத் தராது என்பது வேறு. இருந்தாலும், நாடாளுமன்ற செய்தியாளர் என்ற அடிப்படையில் அங்கு நடைபெற்ற விவாதங்களில் இருந்து அறிவும் உணர்வும் சார்ந்த பல விடயதானங்களை மூளைக்குள் செலுத்தக் கூடியதாக இருந்தது.
1947 இல் பிரித்தானியரின் சோல்பரி அரசியல் யாப்பின் மூலமான முதலாவது நாடாளுமன்றத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு நவம்பர் வரையிலான ரணில் அரசாங்கத்தின் நாடாளுமன்றம் வரை, பல தர்க்க ரீதியான விவாதங்கள் நடந்தன. அதாவது ஒரு விடயதானம் குறித்து இருவேறு நிலைகளில் நின்று விவாதிப்பது அதற்காக வாதாடுவது என்ற மையக்கருத்து முதன்மை பெற்றிருந்தது.
ஆனாலும், சிறில் மத்தியு காலத்தில் இருந்து இன்றைய மேர்வின் சில்வா வரையும் அரசியல் கோமாளிக் கூத்துகளையும், அர்த்தமற்ற வார்த்தைகளையும் சபை நடத்தைக்கு ஒவ்வாத கீழ்த்தரமான செயற்பாடுகளையும் இந்த நாடாளுமன்றம் கண்டதுண்டு.
எனினும் ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்றத்தில், சில தமிழ் உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே புரிகிறதா என்பது சந்தேகமே.
தமிழர்களின் ”அரசியல் நிலைப்பாடு” என்ற முரண்பாடுகளுக்கு அப்பால் நாடாளுமன்றத்தை மேடையாக்கி ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழமாக விவாதித்த பல தமிழ் அரசியல் மேதைகள் உறுப்பினர்களாக இருந்த ஆசனத்தில், இன்று தமிழ்மொழி வாக்கிய அமைவுகளைக் கூட புரிந்து கொள்ள முடியாத உறுப்பினர்கள் அங்கம் வகிப்பது வெட்கக் கேடு.
தமிழ்த் தேசிய கட்சிகளின் உறுப்பினர்கள் மீது அதிருப்திகள் உண்டு. ஆனாலும் அவர்களிடம் மொழி மற்றும் சபை நாகரிகம் உண்டு.
ஆனால் 'பரபரப்பு' 'விடுப்பு' என்பதை முதன்மைப்படுத்தி தமிழர்களின் 'அரசியல் விடுதலை' என்ற கருத்தியலை நகைச்சுவை ஆக்கி மலினப்படுத்துகிறார் வைத்தியர் அர்ச்சுனா.
அபிவிருத்தி என்று மார் தட்டி தமிழர் அரசியலை கொழும்பு மைய அரசியலுடன் கரைக்கிறார் அமைச்சர் சந்திரசேகரன். தமிழ் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி, தமிழ்த் தேசிய அரசியல் நியாயங்களை குறை மதிப்பீடு செய்கிறார்.
ஆகவே இப் பின்புலத்தில் கீழ் வரும் விளக்கம் - சந்திரசேகரன், அர்ச்சுனா, இளங்குமரன் ஆகியோரின் கவனத்துக்கு--
1) முரண்பாடு (Conflict) என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. அது தவிர்க்க முடியாதது. அரசியல் என்பது வாழ்க்கையோடு பின்னி பிணைந்து. மற்றொரு இனத்துடன் எழும் முரண்பாடுகள் என்பது கோட்பாட்டு ரீதியானது. இந்த முரண்பாடுகள் ஒரு கட்டத்தில் களையப்பட வல்லன. உருமாற்றம் செய்யப்பட்டு ஆக்கபூர்வ நிலைக்கு இட்டுச் செல்லப்படக் கூடியன.
2) வாக்குவாதம் அல்லது வாதம் (Argument) என்பது. வாக்கியங்கள், அறிக்கைகள் ஆகியவற்றில் இருந்து எழும் கருத்துப் பரிமாற்றங்களை குறிக்கும். நியாயப்படுத்துதல், விளக்கம் என்பதன் அடிப்படை.
3) சர்ச்சை (Controversy) என்பது அரசியல் கட்சிகளுக்கு இடையே உள்ள மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை திறமையாகவும் நியாயமாகவும் தீர்க்கும் செயல் வடிவம். இது இனக்குழுமங்கள் மத்தியிலும் எழும். குடும்பங்களிலும் உண்டு.
”முரண்பாடு” – ”வாக்குவாதம்” - ”சர்ச்சை” என்ற மூன்றும் அறிவு சார்ந்தது. தெளிவுபடுத்தல் ஊடான நியாயங்களின் வெளிப்பாடுகள்-- இதற்கு அரசறிவியல் பாடத்தில் மேலும் ஆழமான வியாக்கியானங்கள் உண்டு.
ஆகவே இதனைப் புரிந்து விவாதங்களில் பேசுங்கள். செய்தியாளர்களும் இது பற்றிய அறிவைப் பெற வேண்டும்.
அ.நிக்ஸன்
பத்திரிகையாளர்