தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் பட்டலந்த வதைமுகாம் பற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புதைக்கப்பட்ட உண்மைகளும் சிதைக்கப்பட்ட மனித உரிமைகளும் பட்டலந்த இருட்டில் இருந்து சூரிய ஒளிக்கு வந்துள்ளதாக அமைச்சர் விமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க விடயமாகும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
ஜேவிபியினருக்கு எதிரான பட்டலந்த வதைமுகாம் கொடுமைகள் ஜே.வி.பி யினர் ஆட்சியதிகாரத்துக்கு வந்ததன் பின்னர், சுமார் 37 ஆண்டுகளுக்கு முந்திய உண்மைகளை வெளிக்குக் கொண்டு வந்துள்ளனர். அதாவது ஜே.வி.பி. யினர் ஆட்சிக்கு வந்ததால்தான் ஜே.வி.பி யினருக்கு எதிரான சட்டவிரோதக் கொடிய செயல்களை அம்பலத்துக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புகள் 1956 இல் இருந்து ஆரம்பித்து 2009 வரை நடைபெற்றன. தற்போது தமிழர் பண்பாட்டு அழிப்புகள் நடைபெறுகின்றன.
வடக்கு, கிழக்கில் குறிப்பாக 1978 -2009 இற்கு இடைப்பட்ட பயங்கரவாத தடைச்சட்ட, அவசர காலச் சட்ட ஆட்சியில் வடக்கு கிழக்கில் பட்டலந்த வதைமுகாமையும் மிஞ்சிய பல வதை முகாம்கள் கொலை முகாம்கள் காணப்பட்டன அவற்றில் தமிழர்கள் வகை தொகையின்றி சித்திரவதைகள் பாலியல்வதைகள் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் பட்டலந்த வதைமுகாம் படுகொலைகளை மிஞ்சிய சத்துருக் கொண்டான் கொக்கடிச்சோலை கொண்ட வட்டவான், கரடியனாறு, கல்லடி போன்ற பல முகாம்கள் சித்தரவதை படுகொலைகள் என்பவற்றுக்குப் பெயர் போன முகாம்களாக இருந்தன.
ஒரே இரவில் 4 கிராமங்களைச் சேர்ந்த 186 பொதுமக்களை சித்திரவதைகள், பாலியல் பலாத்காரம் புரிந்து படுகொலைகள் செய்த பெருமை சத்துருக் கொண்டான் இராணுவ வதை முகாமுக்குண்டு. குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள்,உடல் ஊனமுற்றவர்கள் என்ற பேதமில்லாமல் சமத்துவப் படுகொலை செய்த கொடூரம் சத்துருக் கொண்டான் வதைமுகாமுக்கு உண்டு.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வடக்குக் கிழக்கில் பட்டலந்தை போன்ற வதை முகாம்களுக்குப் பஞ்சம் இருக்கவில்லை. கொலைகள் சித்திரவதைகள் ஸ்ரீலங்காவின் வன்மக்கலைகள் என்று சொலத்தக்க விதத்தில் சட்டபூர்வமான அதிகாரம் பெற்ற சக்திகளாலும் துணைக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன இவற்றை ஆராய்ந்து நீதி வழங்கும் தகுதி கடந்தகால அரசாங்கங்களுக்கு இருக்கவில்லை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஜேவிபி சகாக்கள் கொல்லப்பட்டதனால் பட்டலந்த வதைகள் கொலைகளை விசாரிக்க முன்வந்துள்ளன.
ஆனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட வதைகள், கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டதை விசாரணை நடாத்தி நீதி வழங்கும் சம தருமம் தேசிய மக்கள் சக்திக்கு இருக்குமா? என்ற ஐயம் தமிழர்களுக்கு உண்டு. பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சிங்களப் படையினர் என்பதாலும் இந்த சந்தேகம் தமிழர்களுக்கு கனதியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.