கனேடியத் தமிழர் பேரவை (CTC) யின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும், அவசரக் கலந்துரையாடல் ஒன்று தமிழ்ச் சமூகக் கரிசனையாளர்களால் Toronto வில் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
போருக்குப் பின்னரான காலத்தில், ஈழத்தமிழர் விவகாரம் சார்ந்த கனேடியத் தமிழ்ச் சமூகத்தின் கரிசனைகளை வெளிப்படுத்தும் முகமாக, கரிசனையுள்ள சமூக உறுப்பினர்கள் ஒன்றுகூடி, ஆக்கபூர்வமான கருத்துக்களை உள்வாங்கும் முதலாவது கூட்டமாக இக்கூட்டம் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்பிரகாரம், உலகத் தமிழர் பேரவையின் (GTF) முன்னெடுப்பிலும், கனேடியத் தமிழர் பேரவையின் அனுசரணையுடனும், இலங்கையில் முன்னனெடுக்கப்படும் ‘இமாலயப் பிரகடனம்’ எனப்படும் செயற்திட்டம் தொடர்பிலும், தமிழர் விவகாரம் சார்ந்த CTC யின் செயற்பாடுகள் தொடர்பிலும் பரவலான அதிருப்திகளும், கண்டனங்களும் தமிழ்ச் சமூக மட்டத்தில் வெளியிடப்பட்டுவரும் நிலையில், இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கனேடியத் தமிழ்ச் சமூகம் சார்ந்த சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், CTC யின் முன்னாள் செயற்பாட்டாளர்கள், CTC யின் இந்நாள் உறுப்பினர்கள், அரசியல்-சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என 20 பேர் கலந்துகொண்ட இக்கூட்டம் Toronto வில் நேற்று வியாழக்கிழமை (February 15, 2024) Scarborough Event Center இல் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகி சுமார் 3 மணிநேரத்துக்கும் அதிகமாக இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு CTC தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்படடடது. எனினும், CTC யின் நிர்வாகப் பீடத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி எவரும் கலந்துகொள்ளவில்லை.
கனேடியத் தமிழர்களின் குரலாக தம்மை அடையாளப்படுத்தும் CTC, கனேடியத் தமிழர்களைக் கலந்துரையாடாமல் அல்லது அவர்களது ஆணையைப் பெறாமல், ‘இமாலயப் பிரகடன’ விவகாரத்தில் தன்னிச்சையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டமை தொடர்பில், தமது கடுமையான கண்டனங்களையும், கரிசனைகளையும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வெளிப்படுத்தினர். குறிப்பாக, தமது அமைப்புச் சார்ந்த உறுப்பினர்கள் பலருக்கும் அறிவிக்கப்படாமல் இமாலயப் பிரகடன விவகாரத்தில் ஈடுபட்டமைப்புக்குப் பொறுப்பேற்று CTC யின் நிர்வாக மற்றும் இயக்குனர் சபை மறுசீரமைப்பைச் செய்ய வலியுறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
CTC யின் இவ்வாறான செயற்பாடுகள், ஒரு மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புக்கு இருக்கவேண்டிய ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முரணாக, தன்னிச்சையான தன்மையைப் பிரதிபலிப்பதாகவும், அதனது நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும், இமாலயப் பிரகடன விவகாரம் தொடர்பில் ஈழத்தமிழர்கள் மத்தியில், ‘நிலத்திலும் – புலம்பெயர் தேசங்களிலும்’ பரவலாக வெளிப்படுத்தப்பட்ட அதிருப்திகள் தொடர்பிலும், தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டுத் தளங்களில் வெளிப்படுத்தப்பட்ட கண்டனங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. குறிப்பாக, கனடாவில் நாடாளுமன்ற, மாகாண, நகர மட்டங்களுக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள் வெளியிட்ட கண்டனங்கள், கரிசனைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, CTC யின் செயற்பாடுகள் தொடர்பில், கனேடியத் தமிழ்ச்சமூகம் சார்பில் வெளிப்படுத்தப்பட்டுவரும் கூட்டு அதிருப்திகளுக்கும், கரிசனைகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கும் மார்க்கங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், ‘தமிழினப்படுகொலை’ என்ற பதத்தையோ அல்லது ‘தமிழினப்படுகொலைக்கான நீதி விசாரணை’ என்ற பதங்களையோ ‘கனேடியத் தமிழர் பேரவை’ உத்தியோகபூர்வமாக பயன்படுத்துவதில்லை என்ற நிலைப்பாடு, கனடாவிலும், புலம்பெயர் தேசங்களிலும், தமிழினப் படுகொலைக்கான நீதிவேண்டிய செயற்பாடுகளுக்கு ஏற்படுத்தப்போகும் பாதிப்புக்கள் தொடர்பிலும், ஏற்கனவே தமிழினப்படுகொலை விவகாரம் சார்ந்து நீதிவேண்டும் குரலாக ஓங்கி ஒலிக்கும் கனேடியத் தேசியக் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் குறித்தும் கூட்டத்தில் அச்சம் வெளியிடப்பட்டது.
அத்துடன், CTC தாயகத்தில் முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள உதவிப்பணிகள் மற்றும் அவற்றுக்காகத் திரட்டப்படும் நிதி, கனடாவில் CTC நடாத்தும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அதனால் சேகரிக்கப்படும் நிதி என்பன தொடர்பில் நம்பகத்தன்மையயை உறுதிசெய்யும் முகமான வெளிப்படைத் தன்மையை CTC பின்பற்றுவதில்லை என்ற விமர்சனங்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
எனவே, CTC யின் தமிழ்ச் சமூகம் சார்ந்த செயற்பாடுகள் கடும் விமர்சனங்களையும், அதிருப்திகளையும், கண்டனங்களையும் எதிர்கொண்டுவரும் நிலையில், CTC யின் நிர்வாக மற்றும் இயக்குனர் சபை, தமது அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் மறுசீரமைப்பு என்பவற்றை உறுதிசெய்யும் முகமாக ஆக்கபூர்வமான உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துவது என இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
மேலும், கனேடியத் தமிழர் பேரவை (CTC) கனேடியத் தமிழர்களின் குரலாக தொடந்தும் ஆக்கபூர்வமாகச் செயற்படுவதை உறுதிசெய்வதே நோக்கம் எனவும், மாறாக CTC யை செயலிழக்க வைப்பது தமிழ்க் கரிசனையாளர்களின் நோக்கம் அல்ல என்பதும் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பதாக தம்மை அடையாளப்படுத்தும் CTC, அச்சமூகத்தின் குரல்களையும், கரிசனைகளையும் பிரதிபலிக்கும் தலைமையைக் கொண்டிருக்கவேண்டும் என்றும், அச்சமூகத்தின் நலன்சார்ந்த செயற்பாடுகளை பொறுப்புணர்வுடன் முன்னெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் மட்டுப்படுத்தப்பட்ட ஊடகர்களுடன் CTC ஊடக சந்திப்பொன்றை நடத்தியபோதிலும், இச்சந்திப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்தி அளிக்காத நிலையில், CTC தனது செயற்பாடுகள், திட்டங்கள் தொடர்பில், பூரண விளக்கமளிக்கும் ஊடக சந்திப்புக்களுக்கும், மக்களுடனான கலந்துரையாடல்களுக்கும் தொடர்ச்சியாக வலியுறுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், CTC விவகாரம் சார்ந்து ‘தமிழ்க் கரிசனையாளர்களின்’ கூட்டம் தொடர்பிலும் அவர்களின் கரிசனைகள் தொடர்பிலும், தமிழ் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை, (February 23, 2024) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊடக சந்திப்பு பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.
இவ்வூடக சந்திப்பின் ஊடாக, CTC யின் செயற்பாடுகள் தொடர்பிலான பொறுப்புக்கூறலையும், வெளிப்படைத்தன்மையையும், மறுசீரமைப்பையும் வலியுறுத்தும் தமிழ்க் கரிசனையாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டுவதும், தகவல்களைக் கொண்டு சேர்ப்பதும் முதற்கட்டப் படிநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: உதயன் S. பிள்ளை (சுயாதீன ஊடவியலாளர்)