கானல் நீரில் தாகம் தீர்த்தல் தொடர்பான கதையையும், கடந்து போன நூறு நாட்களில் நாட்டில் நடந்த மாற்றங்கள் பற்றியும் இங்கு பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கு முன்னர் நாம் கடந்த ஆண்டில் துல்லியமாக வாசகர்களுக்கு வழங்கி இருந்த தகவல்களை மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்த விரும்புகின்றோம். இதற்கு முன்னரும் இப்படியான வார்த்தைகளை நாம் உச்சரித்திருந்தாலும் அதனை கூறியது கூறலாக நமது வாசகர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று நாம் நம்புகின்றோம்.
அனுரவுடன் மோதுவதாக இருந்தால் மெகா கூட்டணி போட்டுக் கொள்ளுங்கள் என்று எதிரணிகளுக்கு சொல்லி இருந்தோம்.அது அப்படி நடக்காததன் விளைவை அனுர அரசியல் எதிரிகள் இப்போது அனுபவித்து வருகின்றார்கள். மெகா கூட்டணி சமைத்திருந்தாலும் அனுர வெற்றியைத் தடுத்திருக்க முடியாது. ஆனால் சேதத்தை குறைத்திருக்க முடியும். அவ்வளவுதான். அடுத்து முதலில் பொதுத் தேர்தலை நடத்துவதுதான் அனுர எதிரிகளுக்கு ஆரோக்கியம் என்றும் எச்சரித்தோம். அதுவும் ஆகவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்குத்தான் வாய்ப்பு-வெற்றி என்று ஊடகங்களும் அவரது சகாக்களும் அப்போது கூவிக் கொண்டிருக்கின்ற போது மனிதன் கோதாவுக்கு வெளியேதான் இருக்கின்றார். அவர் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான ஒரு போட்டியாளரே கிடையாது என்றும் சொல்லி இருந்தோம்.
ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் அனுர களத்தில் தனிக் குதிரையாகத்தான் இருக்கின்றார். அவருக்கு போட்டியே கிடையாது என்றோம். அப்படித்தான் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளும் வந்தது. பொதுத் தேர்தலிலும் இதே கதை. ரணில் தலைமையிலான அணிக்கு படுதோல்வி வரும் என்று அடித்துச் சொன்னோம். அதுதானே நடந்தது. தேர்தலுக்குப் பின்னர் சஜித்துக்கு நெருக்கடி. அவர் கூட்டணியில் பிளவு வரும் என்றும் சொன்னோம். அந்தக் காட்சிகள்தான் இப்போது நடந்து வருகின்றது.
கூட்டணிக் கட்சிகள் ஜனாதிபதி அனுரவுடன் நெருக்கமாக பயணிக்க முயல்வார்கள் என்றும் சுட்டிக்காட்டி இருந்தோம். அத்துடன் இவற்றுக்கு குறிப்பிட்ட தலைப்புகளிலே கட்டுரை போட்டும் தகவல்களை விரிவாகவும் சொல்லி வந்தோம். 2024 வருடம் முடிந்து 2025 புத்தாண்டு தொடங்கியிருப்பதால் செய்திகளை மீண்டும் ஒரு முறை மீட்டிருக்கின்றோம் என்று இதனை எடுத்துக் கொள்ளுங்கள்.
அனுரவின் நூறு நாட்கள்!
இப்போது ஜனாதிபதி அனுரகுமாரவின் கடந்து போன நூறு நாட்கள் பற்றி முதலில் பார்ப்போம். ஜனாதிபதி அனுரகுமார பதவிக்கு வந்து ஜனவரி இரண்டாம் திகதியுடன் நூறு நாட்கள் கடந்து போய் இருக்கின்றது. இப்போது குறிப்பாக பி.பி.சி சிங்கள செய்தி சேவைக்கு ஜனாதிபதி அனுர நூறு நாட்களில் தாம் செய்வதாக சொன்ன விடயங்கள் எந்தளவுக்கு இதுவரை நிறைவேறி இருக்கின்றது என்று பார்த்தால் அதற்கு இப்படி ஒரு விளக்கத்தை முதலில் சொல்லி வைக்கலாம்.
“என்னதான் அரசு புரட்சிகரமான சிந்தனைகளை மக்கள் மயப்படுத்தி அதில் வெற்றி கண்டாலும் துருப்பிடித்து-இத்துப்போன ஒரு நிருவாக இயந்திரத்தை வைத்துக் கொண்டுதான் அரசு காரியங்களைச் செய்ய வேண்டி இருக்கின்றது.” எனவே ஏட்டுச் சுரக்காய் நிலைதான் நூறு நாள் நிருவாகம் பயணித்து வந்திருக்கின்றது. எனவே மாற்றங்கள் அல்லது நல்லவை நடக்க குடிமக்கள் இன்னும் சற்றுப் பொறுமை காக்க வேண்டி இருக்கும். நமது அரசியலில் நூறுநாள் வேலைத்திட்டம் தொடர்பான எண்ணக்கரு முதன் முதலில் மைத்திரி-ரணில் நல்லாட்சியில்தான் அறிமுகமாகி இருந்தது.
இப்படித்தான் ஜனாதிபதி அனுரவும் ஒரு பட்டியலை 100 நாட்களுக்கு வரிசைப்படுத்தி இருந்தார். ஆனால் அது எந்தளவுக்கு நிறைவேறி இருக்கின்றது என்பதில் நிறையவே குளறுபடிகள் இருக்கின்றன. எனவேதான் ஜனாதிபதி அனுர குமார நிருவாகத்துறையினரை மீண்டும் மீண்டும் மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து நடந்து கொள்ளுமாறு கேட்டு வருகின்றார். இப்போது அவர் அனைத்துத் துறையில் இருக்கின்ற நிருவாகிகளை எச்சரிக்கின்ற ஒரு தொணியில் பேசுவது போல தெரிகின்றது.
இது எதனைச் சுட்டிக் காட்டுகின்றது என்றால் அவரது எதிர்பார்ப்புகளுக்கு அமைய நிருவாகம் இன்னும் செயல்படவில்லை என்பதைத்தான் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. எனவேதான் துருப்பிடித்த இயந்திரத்தில்தான் உற்பத்திகள் என்று நாம் முன்பு சுட்டிக் காட்டி இருந்தோம். ஆனால் இப்படி ஜனாதிபதி அனுர தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்க முடியாது.
இப்படியே தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒரு மோதலாகக் கூட மாறலாம் என்று நாம் எச்சரிக்கின்றோம். கடந்த ஆட்சிக் காலங்களில் அரசியல்வாதிகள் சுதந்திரமாகக் கொள்ளையடித்ததால்-ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு இலாபமீட்டியதை வாய்ப்பாக வைத்துக் கொண்டு அதன் மூலம் தாமும் இலாபம் சம்பாதித்த ஒரு நிருவாக வர்க்கமே இன்னும் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பதவிகளில் இருந்து வருகின்றது.
எனவே இந்த அரசாங்கம் தமது வருமானத்துக்கு-பிழைப்புக்கு ஆப்பு வைத்தால் அதனை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என எண்ணுகின்ற ஒரு கூட்டமும் இந்த நிருவாகத்தில் இருக்கின்றது. இதற்கு நல்ல உதாரணம்தான் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அரசியல் காரணங்களினால்-தேவைகளினால் கிடப்பில் போட்டது அல்லது கண்டு கொள்ளாமல் விட்டது மற்றும் அதற்கான ஆதாரங்களை சிதைத்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை நாம் இங்கு சுட்டிக்காட்ட முடியும்.
சில அதிகாரிகள் கடந்த ஆட்சிக் காலத்தில் பயணித்த தண்டவாளத்தில் பயணிப்பதில்தான் ஆர்வமாக இருக்கின்றார்கள் அல்லது அடம்பிடிக்கின்றார்கள். எனவே அரசுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு கயிறிழுப்பு நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் தமது பிழையான தீர்மானங்கள்-நடவடிக்கைகள் தம்மைக் காட்டிக் கொடுத்து விடும். எனவே புதிய அரசாங்கத்தை இவர்கள் பயங்கரவாதிகளாக பார்க்கின்ற ஒரு நிலைதான் நாட்டில் தொடர்கின்றது என்றும் நாம் வாதிட முடியும்.
மேலும் இதற்கு நல்ல உதாரணம் ஒன்றை நமக்கு இங்கு கூற முடியும். கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தனது அமைச்சின் நல்ல திட்டங்களுக்கு திணைக்களத்தில் இருக்கின்ற அதிகாரிகள் தடையாக இருக்கின்றார்கள் என்பதனை பகிரங்கமாக ஒரு கூட்டத்தில் கூறி இருப்பதுடன், இதனால் தனது அமைச்சிலே போராட்டங்களை நடத்த வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை இங்கு இருக்கின்றது என்றார். இந்த அரசில் ஹந்துன் செல்வாக்கான ஒரு அமைச்சர். அவருக்கே இந்த நிலை என்றால் சற்று சிந்தித்துப் பாருங்கள்? இந்த முட்டுக் கட்டைகளை அகற்றிக் கொண்டு பயணிப்பதில் அரசுக்கு பல நெருக்கடிகள் என்பது தெளிவு.
அத்துடன் அனுர அரசு பதவிக்கு வந்து நூறு நாட்கள் கடந்து போய் இருக்கின்ற இந்த நேரத்தில் மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஒரு நல்லெண்ணம் தொடர்ந்தும் இருந்து வருகின்றது. சில விடயங்களில் எதிர்பார்த்த வேகம் இல்லாமல் போனாலும் ஆட்சியாளர்கள் மீது ஊழல் செய்கின்றார்கள், கொமிஸ் வியாபாரம் செய்து பணம் குவிக்கின்றார்கள் என்று எவரும் இதுவரை குற்றம் சுமத்தவில்லை. அந்த வகையில் ஆட்சியாளர்கள் மோசடிக்காரர்கள் அல்ல என்று மக்கள் நினைக்கின்றார்கள்.
அவர்கள் நேர்மையான ஒரு ஆட்சியை முன்னெடுக்கின்ற போரட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பது குடிகளுக்குப் புரிகின்றது. ஆட்சியாளர்கள் எதிர்நோக்குகின்ற சவால்களை மக்கள் புரிந்து கொண்டு வருவதும் நல்ல செய்திதான். பொருட்கள் மீது திட்டமிட்ட தட்டுப்பாடுகளை உண்டு பண்ணுவது, இது விடயத்தில் மாபியாக்களின் செயல்பாட்டை அனுர அரசு சொன்னது போல இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே. அதற்காக அனுர ஒரு ஹிட்லராகவோ இடி அமீனாகவோ செயலாற்றவும் முடியாது.
உள்நாட்டில் ஜனாதிபதி அனுர மீது மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இருப்பது போல சர்வதேச அளவிலும் அவரது இமேஜ் உயர்ந்து கொண்டுதான் வருகின்றது. இது மேற்கு – கிழக்கு என்று சகல இடங்களிலும் தெரிகின்றது. சுருக்கமாக அனுர கடந்து வந்த நூறு நாட்கள் நம்பிக்கையும் எச்சரிக்கைகளும் முட்டுக்கட்டைகளும் நிரம்பியதாகத்தான் காணப்படுகின்றது. இதனை வெற்றியும் தோல்வியில் இல்லாத ஐம்பதுக்கு ஐம்பது என்றுதான் நாம் பார்க்கின்றோம்.
ஜனாதிபதி அனுர ‘கிளீன் லங்கா’ என்ற நிகழ்வில் பேசுகின்ற போது தனக்குள்ள இரு முகங்கள் பற்றி அவர் சூசகமாக சுட்டிக்காட்டி இருந்தார். இதனை பசுமையும் நெருப்பும் என்று சொல்ல முடியும். அது பற்றி பிறிதொரு இடத்தில் சற்று விரிவாக பேச இருக்கின்றோம்.
பலமான ஒரு நாடாளுமன்றத்தை நிறுவுவோம். நீதித்துறையில் மாற்றங்கள், கிடப்பில் போடப்பட்ட வழக்குகளைத் தூசி தட்டுதல், குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் விசாரணை விடயத்தில் முன்னேற்றம், கிரிக்கட் நிருவாக சபைக்கு வாக்களிப்போர் எண்ணிக்கையில் குறைப்பு, ஆளும் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் கடத்தல்கள் பற்றிய விசாரணைகளைத் துரிதப்படுத்தல், போன்றவற்றில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.
அதேநேரம் புதிய கிரிக்கட் யாப்பு, அதிபர்கள்- ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகளைக் களைதல்,35000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் அனுர அரசால் மேற்கொள்ள முடியவில்லை. எனவே நாம் முன்பு சொன்னது போது வெற்றி தோல்வி இல்லாத ஒரு முடிவாக இந்த நூறு நாட்களை நாம் கூற முடியும்.
இப்போது நாம் தலைப்பில் சொல்லி இருக்கின்ற கானல் நீரில் தாகம் தீர்க்கின்ற கதை பற்றிப் பார்ப்போம். அனுர தரப்பினருக்கு வெற்றி வாய்ப்பே கிடையாது என்று தேர்தல் மேடைகளில் சொன்னவர்கள், அப்படித்தான் அவர்கள் அபூர்வமாக வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் செய்த அனுபவம் கிடையாது. இதனால் ஒரு வாரத்துக்கு மேல் அவர்களது ஆட்சி நீடிக்காது. மேலும் இவர்களின் கடந்த காலங்கள் இரத்தக்கறை படிந்திருப்பதால் இவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காது என்றும் பரப்புரைகள் நடந்தது.
ஆனால் அனுரவுக்கு இந்தியா, சீனா ஏன் அமெரிக்க அரசியல் தலைமைகளிடமிருந்து கூட அழைப்பு – நேசக்கரம் நீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே ஆங்கில அறிவு கிடையாது, அனுபவம் கிடையாது என்று சொல்லப்பட்ட அனைத்துக் கதைகளும் வஞ்சக நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட பரப்புரைகள் என்பது இப்போது உறுதியாகி இருக்கின்றது.
எனவே அனுர அரசு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் மிகவும் வலுவாக இருக்கின்றது. ஆனாலும் அவரது அரசியல் எதிரிகள் அரசு இன்று கவிழும் நாளை கவிழும் என்று மக்கள் மத்தியில் கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கென பல சமூக ஊடகங்களை அவர்கள் வாடகைக்கு அமர்த்தி புரளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் குடிமக்கள் புத்தி கூர்மையுடன் சிந்திப்பதால் அனுர ஆட்சிக்கு எந்த ஆபத்தும் கிடையாது.
நமது கணிப்புப்படி மாற்று அணிகளில் இருக்கின்ற இன்னும் இருபத்தி ஐந்து வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி அனுர தரப்பு மேற்கொள்கின்ற நல்ல திட்டங்களுக்கு துணைக்கு வருவதற்கு தயாராக இருக்கின்றார்கள். இதில் பெரும் எண்ணிக்கையானவர்கள் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில் சில வங்குரோத்து அரசியல்வாதிகள் அனுர அரசுக்கு ஆயுள் கம்மி இவர்களுக்கும் கோட்டாவுக்கு நடந்ததுதான் நடக்கும் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டு கதைகளைச் சொல்லி வருகின்றார்கள். அத்துடன் ஜே.வி.பி.க்கும் என்.பி.பி. க்கும் மோதல், பிரதமர் ஹருணியை பதவியில் இருந்து விரட்டப் போகின்றார்கள் என்றெல்லாம் கட்டுக் கதைகள்.
அப்படி எந்த மோதல்களும் சச்சரவுகளும் ஆளும் கட்சியில் இல்லை. இல்லாத ஒன்றுக்கு உருவம் கொடுத்து அவர்கள் சந்தோசப்பட்டுக் கொண்டு குடி மக்களை தவறாக வழி நடத்த முனைகின்றார்கள். இது இவர்களது பகல் கனவு மட்டுமே. இதனைத்தான் கானல் நீரைப் பருகி சுகம் காண்கின்ற அரசியல் என்று நாம் அடையாளப்படுத்துகின்றோம்