கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா உள்ளது. லெபனானில் இயங்கிவரும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆதரவாக உள்ளது.
இதனால் போர், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். இவர்களைத் தவிர இந்தப் போரில் 45 ஆயிரத்திற்கும் (45,338) மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், போர் காரணமாக சுமார் 12 லட்சம் பேர், தங்கள் இடங்களை விட்டு வெளியேறியிருந்தனர்.
இந்தச் சூழலில், அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மாற்றம் காரணமாக, விரைவில் இங்கு போர் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே, கடந்த நவம்பர் 27ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய நிலையிலும், இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. சமீபத்தில்கூட, காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் முகாம்களில் புகுந்து இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர் தாக்குதலை நடத்திவருகின்றனர். மேற்குக்கரை பகுதியில் உள்ள முகாமில் நடத்திய தாக்குதலில் 7 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ந்த நிலையில், காஸாவில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக பாலஸ்தீனத்துக்கான ஐ.நாவின் நிவாரணக் குழு தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைகள் தங்குவதற்கு இடமில்லாமல் தவிப்பதாகவும், போர் தொடங்கியதில் இருந்து 14,500 குழந்தைகள் கொல்லப்பட்டதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளதாகவும் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில், குழந்தைகளைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது. உயிர் பிழைத்தவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் காயமடைந்துள்ளனர். கற்றல் இல்லாமல், காஸாவில் உள்ள சிறுவர்களும் சிறுமிகளும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இந்தக் குழந்தைகளுக்கான எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கை, எதிர்காலத்துக்கான நம்பிக்கை இழக்கிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.