விவசாயிகளுக்கு மானியமாக வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரத்தை விவசாயிகளுக்கு வழங்காமல் சுமார் 100 கோடி ரூபா மோசடி செய்தமை தொடர்பாக பல உர நிறுவனங்களின் முக்கிய பதவிகளை வகிக்கும் பத்துப் பேரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுப்பதாக தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்படவுள்ளவர்களில் பெண்களும் அடங்குவதாக தெரியவருகிறது.
அவர்களில் ஐந்து பாரிய நிறுவனங்களின் முக்கிய பதவிகளை வகிப்பவர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த மானிய உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் ஹொரனை, கேகாலை, மாதம்பை பிரதேசங்களில் உள்ள பிரதான கைத்தொழில் துறை நிறுவனங்களுக்கு பல்வேறு மோசடி முறைகளில் அதிக விலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.