இயற்கை அனர்த்தத்தால் நாடு வழமை நிலையை தொலைத்துவிட்ட நிலை காணப்படுகிறது. கிட்டத்தட்ட நாட்டின் 21 மாவட்டங்கள் வெள்ள அழிவுக்கு உள்ளாகியுள்ளது. வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் அங்குள்ள அனைத்து மாவட்டங்களும் தற்போதைய சீரற்ற கால நிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 2008 ல் அழிவை ஏற்படுத்திய லீசா புயலின் பின்னர் இத்தகைய அனர்த்தம் வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுள்ளது.மறுபுறத்தில் வடக்கு, கிழக்கு முழுவதும் மாவீரர்கள் நினைவு தினம் உணர்ச்சிபூர்வமாக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கில் கொட்டும் மழையையும் வெள்ள அபாயத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் அணிதிரண்டு மாவீரர் நினைவு தின நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.
இத்தகைய சூழ்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கொள்கை பிரகடன உரை கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது. தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வை ஜனாதிபதி வலியுறுத்துவார் என்றே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஜனாதிபதியின் உரையில் அத்தகைய செய்திகள் எவையும் வெளிவராத நிலையில் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பான கரிசனையே மேலிட்டு காணப்பட்டது.
இலங்கை போன்ற அபிவிருத்தியடையாத நாடுகளில் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு முதலிலே பலமடைய வேண்டும். இதற்கு தடையாக இருக்கின்ற பிரதான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கான தீர்வு இடம்பெற்றே ஆக வேண்டும்.
கடந்த 75 ஆண்டு காலமாக இலங்கை வரலாற்றை பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய பிரச்சினை நீண்ட கால கட்டமாக தீர்க்கப்படாமல் இருந்து வரும் பிரச்சினையாக அடையாளப் படுத்தப்படுகிறது.
இதேநேரம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை தொடர்பில் இலங்கையின் விற்பன்னர்களான என்.எம்.பெரேரா தொடக்கம் ஜே. ஆர். ஜெயவர்த்தன வரையில் பல்வேறுபட்ட பொருளாதார அணுகுமுறைகளை, அரசியலமைப்பு மாற்றங்களை பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்கும் முகமாக முன்னெடுத்திருந்தனர். ஆனால் அத்தகைய சிகிச்சைகள் எவையும் பயனளிக்காமல் இறுதியில் 2022ல் நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றமையே உண்மை நிலையாகும்.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த தமிழ்த் தேசிய பிரச்சினை அகிம்சை போராட்டங்களை கடந்து ஆயுதப் போராட்டமாக மாறி இறுதியில் நாட்டின் வரலாற்றில் 30 வருட காலம் உள்நாட்டு போர் நடந்தேறி இருந்தது. இந்தப் போரை இறுதியாக நடத்தியவர்கள் போர் வெற்றிக்காக பெற்ற கடன் வெற்றியின் பின் தமக்கு கிடைத்த புகழை கவசமாகக் கொண்டு செய்த ஊழல் முறைகேடுகள் நாட்டின் பொருளாதாரத்தை இவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு வந்து சேர்த்தது.
தற்போது புதிதாக ஆட்சியை பொறுப்பேற்றிருக்கும் தேசிய மக்கள் சக்தியினர் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் காட்டும் அக்கறை தமிழ் தேசிய பிரச்சினை தொடர்பில் வெளிப்படுத்தாமல் தவிர்ப்பது கவலை தரும் நிலையாகும்.இருந்த போதிலும் இம்முறை மாவீரர் தினத்தை தமிழ் மக்கள் அனுஷ்டிப்பதற்காக முன்பிருந்த தடைகள் யாவும் இம்முறை இடம் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக பாதுகாப்பு தரப்பினரின் தலையீடுகள் எதுவும் இடம்பெறாத நிலை இடம்பெற்றிருந்தது.எனவே தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சி இந்த நிலை மேல்வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை நம்பிக்கை தரும் நிலையாகும்.
எனவே தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாகவும் ஆட்சியாளரின் கரிசனை முதன்மை நிலை பெற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். நாட்டின் பொருளாதார பிரச்சினை தொடர்பாக காட்டப்படும் கரிசனைக்கு சமாந்தரமாக தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளும் முன்னிலை பெற்றே ஆக வேண்டும்.
புதிய ஆட்சியாளரின் சர்வதேச நாணய நிதியத்துடனான உறவுநிலை ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்கால அணுகுமுறைகளை முழுமையாக பின்பற்றும் போக்கையே பிரதிபலிக்கிறது.
நாட்டின் சந்தை பொருளாதாரத்தை விரிவுபடுத்தல், சர்வதேச முதலீடுகளை உள்ளிர்த்தல், சுற்றுலாத்துறையின் வருமானத்தை அதிகரிப்பதற்காக சகல செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் போன்றவை யாவும் முன்னையை அரசாங்கத்தின் கொள்கைகளின் பிரதி விம்பமே நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் தொடர்பான அணுகுமுறைகள் குழப்பமான நிலையிலேயே காணப்படுகின்றன.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அரச நிறுவனங்களை ஒருபோதும் தனியார்மயமாக்க இடமளிக்கமாட்டோம் என்ற தேசிய மக்கள் சக்தியின் இறுக்கமான நிலைப்பாடு, அது தொடர்பில் இலங்கை மின்சார சபை மற்றும் எயார்லங்கா நிறுவனங்கள் போன்றவை மறுசீரமைப்பு தொடர்பில் தனியார் மயமாக்கலுக்கு இடமே இல்லை என்ற பிரகடனங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகளை முட்டி மோதாமல் தொடரும் நிலை சாத்தியப்படுமா என்பதே பிரதான விடயமாக மாறியுள்ளது.
இவை யாவற்றிற்கும் தேசிய மக்கள் கட்சியினர் கொண்டு வர இருக்கும் வரவு – செலவுத் திட்டம் நிச்சயம் பதிலை வழங்கும். உலக நிதி நிறுவனங்களையும் பல்தேசிய கம்பெனிகளின் எதிர்பார்ப்புகளையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக பொருளாதார எதிர்பார்ப்புகளை சரி செய்வது தேசிய மக்கள் சக்தியின் சோசலிஸ எதிர்பார்ப்புகளுக்கும் ஒன்றாக பயணிக்கக்கூடிய நிலைமைகள் தென்பட்டால் நன்றாக இருக்கும்.
எனவே தமிழ் தேசிய பிரச்சனை தீர்வை முன்னகர்த்துவதனூடாகவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு இலங்கை தேசியத்துக்குள் காலடி எடுத்து வைப்பார்கள் என்பதை தவிர்த்து, நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை கொண்டு தமிழ் மக்கள் தமிழ் தேசிய பிரச்சனையை கை விட்டுள்ளார்கள் என ஒரு முடிவுக்கு வருவதற்கு இம்முறை நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளில் மக்கள் உணர்ச்சிபூர்வமாக முன்னெடுத்த செயற்பாடுகள் மறுமொழியாக அமைகின்றது