கந்தையா சர்வேஸ்வரன்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தலைமை வகித்த இலங்கை தமிழரசு கட்சியின் ஜனநாயகப் பண்புகளை புறந்தள்ளிய சர்வாதிகாரப் போக்கும், சகோதரக் கட்சிகளில் இருந்து பலரை விலைக்கு வாங்கி தமிழரசு கட்சி வளர்க்கும் தொடர்ச்சியான போக்கும், மக்கள் நலன் சார்ந்து சிறந்த கொள்கை முடிவெடுக்கும் ஆற்றல், அவற்றை செயல்படுத்துவதற்கான வேலை திட்டங்களை உருவாக்கும் ஆளுமை உள்ளவர்களை திட்டமிட்டு புறந்தள்ளி, தலையாட்டுபவர்களை அதிகரிக்கும் போக்கு, மக்கள் உரிமை சார் செயல்பாடுகளை புறந்தள்ளி தேர்தல் வெற்றிக்கான திட்டங்கள் என்ற பெயரால் குழப்பகரமான முடிவுகளை எடுத்து தோல்வியுறல் போன்ற தவறான நீண்ட பட்டியலை கொண்ட செயற்பாடுகளால் படிப்படியாக உடைந்து இறுதியில் தமிழரசு கட்சியும் உடையும் நிலை ஏற்பட்டது.
இலங்கை தமிழ் அரசியலைப் பொருத்தவரை தமிழ் மக்கள் 75 ஆண்டுகளுக்கு மேலாக ஓர் தேசிய இனமாக தமது தனித்துவத்தை பாதுகாத்து வாழும் உரிமைக்காக போராடிவரும் இனம். மக்கள் தொகையில் பன்னிரண்டு வீதம் மட்டுமே கொண்ட இனம். இவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் வடக்கு, கிழக்கில் அதிகபட்சம் 18 முதல் 20 நாடாளுமன்ற ஆசனங்களையே பெறக்கூடிய நிலைமையில் உள்ளவர்கள். சிங்கள குடியேற்றங்கள், தமிழ் மக்கள் தொகை தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைதல் ஆகியவற்றால் தொடர்ச்சியாக பிரதிநிதித்துவத்தை இழந்து வரும் நிலையில் உள்ளவர்கள். 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 18 தொடக்கம் 20 உறுப்பினர்களே வர முடியும் என்ற நிலையில் ஒரு கட்சியாக அல்லது ஓர் அணியாக செயல்பட வேண்டியது என்பது மக்கள் நலன் சார்ந்து அவசியமானது.
ஓர் கட்சியாகவோ ஒரு அணியாகவோ பலமான – உறுதியான செயத்திறன்மிக்க அணியாக செயல்பட வேண்டுமாயின் கொள்கை முடிவுகளை எடுப்பதிலும் சரி அவற்றை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டங்களை வகுத்து செயல்படுவதிலும் சரி தனிநபர் நலனோ ஓர் கட்சிசார் நலனோ அன்றே ஆக்கபூர்வமான மக்கள் நலன் சார்ந்த கருத்தாடல்களின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகளை அனைவரும் ஏற்றுக் கொண்டு அவற்றை நிறைவேற்ற ஈடுபாட்டுடன் உழைத்தல் என்பது அவசியம். ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போல் கூட்டணிக்குள் ஒரு சிலரின் சுயநல செயல்பாடுகள் அல்லது குறுகிய கட்சி நலன் சார் செயற்பாடுகள் கூட்டுக்குள் அவ நம்பிக்கைகளையும் சந்தேகங்களையும் தோற்றுவிக்கும். அது ஒன்றுபட்ட செயற்பாடுகளை பலவீனப்படுத்தும்.
மக்கள் பார்வையில் கூட்டானது பலமான மக்கள் நலன்சார் அணியாக நோக்கப்படும் நிலையை பெரிய அளவில் பாதிக்கும். கட்சி என்பது தனியாகவோ கூட்டாகவோ இயங்கலாம். எதுவாக இருப்பினும் கட்சி என்பது மக்களுக்கானதே தவிர, கட்சிக்காக மக்கள் அல்ல. எந்தளவுக்கு ஓர் கட்சி அல்லது கட்சிகளின் கூட்டானது மக்கள் நலன் சார்ந்து சிறந்த கொள்கை முடிவுகளை எடுத்து ஈடுபாட்டுடன் செயல்படுத்துகிறதோ அந்த அளவுக்கு அக்கட்சியின் பின்னாலோ அல்லது அணியின் பின்னாலோ மக்கள் நம்பிக்கையுடன் அணி திரள்வர். தேர்தல் என்று வரும்போது அக்கட்சியோ அணியோ மக்களின் விருப்பத்துடனான அங்கீகாரத்தை பெறும்.
தேர்தல் வாக்குகள் இரண்டு வகைப்படும். ஒன்று, அரசியல் வாக்கு. மற்றையது அரசியல் அற்ற வாக்கு. அரசியல் வாக்கு என்பது கட்சியின் கொள்கை, செயல்திட்டங்களை புரிந்து கொண்டு அதனை ஏற்று அங்கீகரித்து வழங்கப்படும் வாக்குகள். அரசியல் விழிப்புணர்ச்சி எந்த அளவுக்கு மக்களுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அரசியல் வாக்குகளும் அதிகமாக இருக்கும். அரசியலற்ற வாக்கு தற்காலிக கையூட்டல்களுக்காகவும் தனிநபர் சுயநலன்களுக்காகவும் வழங்கப்படுகின்ற வாக்குகள். இவ்வகையைச் சார்ந்தவை அரசியல் விழிப்புணர்ச்சியற்ற பொருளாதாரத்தில் மிக நலிந்த பிரிவினர் பெரும்பாலும் இத்தகைய வாக்காளர்கள் ஆவர்.
அரசியலை வியாபாரமாக அல்லது சொந்த முன்னேற்றத்திற்காக அல்லது சுய பிரபல்யத்திற்காக செயல்படுத்த முற்படும் கட்சிகளோ பிரமுகர்களோ இத்தகைய வாக்காளர்களை குறிவைத்தே செயல்படுகின்றனர். இப்போக்கானது தேர்தல் லஞ்சக் கலாசாரத்தை வளர்ப்பதுடன், அரசியல் வாக்குகளின் முக்கியத்துவத்தை வலுவிழக்கச் செய்யவும் காரணமாகிறது. இந்த புரிதலின் பின்னணியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தமிழ் பொது வேட்பாளரை களம் இறக்கிய முடிவு மக்கள் நலன் சார்ந்து சிறந்த முடிவு. இதற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனினும் ஒன்றுபட்ட தலைமையை உருவாக்குவதிலும் மக்களை ஓரணியில் திரட்டுவதிலும் ஓரளவு வெற்றி பெற்றது என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியானால் ஏன் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை?
ஒருபுறம் பொது வேட்பாளரை போட்டியில் இறக்கிவிட்டு மறுபுறம் போட்டி வேட்பாளரான ரணில் விக்ரமசிங்கவை சில கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தமையும் அதனூடாக தொகுதிக்கான ஒதுக்கீடுகளை பெற்றுக் கொண்டமையும் மக்களின் ஒரு சாரார் மத்தியில் இந்த ஒற்றுமையும் வலுவான ஒற்றுமையா? என்ற ஐயத்தை எழுப்பியது. மேலும் இவற்றைப் பெற்றுக் கொண்டதால் நக்குண்டார் நாவிழந்தார் என்பது போல் ரணிலுக்கு எதிராக அல்லது பொது வேட்பாளரின் சிறந்த வெற்றிக்காக ஈடுபாட்டுடன் உழைக்காது இரு தோணியில் கால் வைத்த நிலையே காரணமாகும். இதில் ஈடுபாட்டுடன் உழைத்த சில கட்சிகள், சில பொது அமைப்புகளின் உழைப்பே ஓரளவு வெற்றியை உறுதி செய்தது.
இக்கூட்டணியின் அனைத்து கட்சிகளும் முழுமையான ஈடுபாட்டுடன் உழைத்திருந்தால்
1, சிறப்பான வெற்றியை பெற்றிருக்க முடியும்
2. ஒற்றுமை அல்லது ஓரணியாக செயல்பட வேண்டிய முக்கியத்துவத்தை வெளியில் இருந்த கட்சிகளுக்கும் உணர்த்தி இருக்கும்
3. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பலத்தையும் அவசியத்தையும் மக்களுக்கு உணர்த்தி இருக்கும்
4. தீர்வு தொடர்பில் தென்னிலங்கை கட்சிகளின் பின்னால் தமிழ் தலைமை கெஞ்சுவதற்கு மாறாக தமிழ் தலைமைக்கு குறிப்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மதிப்பு கொடுத்து பேச வேண்டிய நிர்ப்பந்தத்தை தென்னிலங்கைக் கட்சிகளுக்கு ஏற்படுத்தியிருக்கும்.
5. இன மோதலுக்கு தீர்வு காணாமல் வடக்கு, கிழக்கில் தாம் வாக்கு கேட்டுப் போக முடியாது என்ற எச்சரிக்கையை தென்னிலங்கை கட்சிகளுக்கு கொடுத்திருக்கும்
6. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி புதிய யுக்திகளை கையாண்டு தென்னிலங்கை கட்சிகள் மீது அழுத்தம் கொடுக்கும் ஆற்றல் கொண்ட அணி என்கிற மக்கள் அங்கீகாரம் கிடைத்திருக்கும்
7. பொதுக் கட்டமைப்பாக தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு மக்களை ஓரணியில் திரட்டும் அடுத்த படியை நோக்கி முன்னேற வாய்ப்பாய் அமைந்திருக்கும்
8 . இவையெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் விருப்பத்துடனான அங்கீகாரத்தைப் பெற வழி சமைத்திருக்கும்.
ஆக பொது வேட்பாளரை நிறுத்திய சிறந்த முடிவை சரியாக செயல்படுத்தி அதன் மூலம் மக்கள் நம்பிக்கையை கட்டி எழுப்பக்கூடிய அரிய சந்தர்ப்பத்தை தவற விட்டதன் விளைவு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற ஓர் முக்கிய காரணமாகும். மேலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சில சிறிய கூட்டங்களில் சில கட்சிகளின் தலைவர்கள் தோன்றியதை தவிர கூட்டான பிரசாரமோ செயல்பாடுகளோ காணப்படவில்லை. மாறாக அனைவரும் தனியான பிரசாரங்களையே மேற்கொண்டமை இக்கூட்டணியின் ஒற்றுமையின் பலத்தை கேள்விக்கு உள்ளாக்கியது.
இவை தவிர தமிழ் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்துடன் பின் கதவால் சலுகைகள் பெறுபவர்கள் என்ற பிம்பத்தை அனைத்து தலைவர்கள் மீதும் வெற்றிகரமாக ஏற்படுத்தியது. சாராய அனுமதி, அதிக தொகுதி ஒதுக்கீடுகள் போன்ற விடயங்கள் பூதாகரப்படுத்தப்பட்டு சிலரின் தவறுகள் அனைவர் மீதும் சேறுபூசும் நிலையை ஏற்படுத்தியது. எதிர் பிரசாரம் சரியாகவும் காத்திரமாகவும் கையாளப்படவில்லை. இறுதியாக, ஆனால் முக்கியமாக சங்கு சின்னம் திருடப்பட்டதாக அல்லது முறையற்ற விதத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டதாக முன்னெடுக்கப்பட்ட பொய்யானதும் திரிக்கப்பட்டதுமான பிரச்சாரம் மக்களைச் சென்றடைந்த அளவுக்கு பொய்களும் திரிபுகளும் மக்களைச் சென்றடைந்ததா என்பது கேள்விக்குறியே. மக்களை அணிதிரட்ட ஜனாதிபதித் தேர்தல் மூலம் மேற்கொண்ட வெற்றிகளை அதன் பங்காளிகளான சிலராலேயே முட்டாள்தனமான பிரசாரம் மூலம் போட்டு உடைக்கப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நியமித்ததற்கான காரணிகளை வலுப்படுத்தி தீர்வு நோக்கி முன்னேற ஜனாதிபதித் தேர்தலின் நீட்சியாகவே நாடாளுமன்றத் தேர்தல் நோக்கப்பட வேண்டும் என்ற கருத்து மக்களைச் சென்றடைந்ததா? மாறாக சிலர் மக்களுக்கு அவசரமாக பொருட்கள் வழங்குவது, அவசரமாக சில முன்னேற்ற பணிகள் செய்வது என செயற்பட்டனரேயன்றி பரந்துபட்ட தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு போதிய உபாயங்களையும் பிரசாரங்களையும் மேற்கொள்ள தவறியமையும் நாடாளுமன்றத் தேர்தலின் தோல்விக்கு காரணமாகும்.
மக்கள் நம்பிக்கைகளை பெறும் வகையில் கட்சியோ கூட்டணியோ செயற்பட்டால் தேர்தலுக்கு அதிக செலவு தேவையில்லை. ஆரம்ப காலத்தில் 1970 கள் வரை தமிழரசு கட்சி வேட்பாளர்கள் ஒரு சதம் கூட செலவழித்திருக்க மாட்டார்கள். துண்டு பிரசுரங்கள் மட்டுமே. சுவரொட்டிகளே கிடையாது. மக்கள் கட்சியாக இருந்தது. மக்களே பிரச்சாரகராக இருந்தனர்.
1977 தமிழர் விடுதலைக் கூட்டணியும் கொள்கை விளக்க கூட்டங்கள் மட்டுமே. எதிர்க்கட்சிகள் கட்டுப்பணம் இழக்கும் அளவிற்கான வெற்றியை பெற்றது. 2002ன் பின் ஆரம்ப தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்களின் பெரும் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக திகழ்ந்தது. காரணம் மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தமயே.நம்பிக்கைகள் பொய்த்தபோது இவை அனைத்தும் பெருமளவுக்கு நிராகரிக்கப்பட்டன என்றதை வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கட்சிகளும் அணிகளும் காலத்துக்கு காலம் தம்மை வெளிப்படையாகவும் உண்மையாகவும் சுயபரிசோதனை செய்து கொண்டு உரிய மாற்றங்கள் ஊடாக மக்கள் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இக்கட்டுரை யாரையும் தாழ்த்தவல்ல. மாறாக சற்று ஆழமாகவும் அகலமாகவும் இவற்றை ஆய்வு செய்து உரிய மாற்றங்கள், திட்டங்களுடன் செயல்பட்டால் மக்கள் விரும்பும் உறுதியான அணியாக பிரதிநிதித்துவம் செய்ய முடியும்