மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலானது, தற்போதைய ஆட்சி முறை மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய இரண்டிலும் ஓர் அடிப்படை மாற்றத்தை வலியுறுத்தி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட அனுரகுமார திசாநாயக்கவின் வெற்றியோடு முடிவுக்கு வந்துள்ளது. இத்தகையதொரு மாற்றத்தினையே 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனத்தா அரகலய என்று அழைக்கப்படும் பிரபல்யமான மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் இளைஞர்களும் கோரி நின்றனர் என்பதனை இங்கு நினைவுப்படுத்துவது பொருத்தமாகும். தேசிய மற்றும் சர்வதேச அவதானிப்பாளர்களின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலானது, மக்கள் தமது இறைமை அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது ஆட்சியாளர்களை சுதந்திரமாகத் தெரிவு செய்வதற்கு வாய்ப்புக்கிட்டிய மிகவும் அமைதியானதும் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலாகும். எனவே, இலங்கையின் பிரதிநிதித்துவ ஜனநாயகம் மீண்டும் ஒருமுறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, அதிகாரத்தை கைமாற்றுவதற்கான ஒரேயொரு வழி என்ற வகையில் ஜனநாயகம் இலங்கையில் மீள உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஓர் அரசியல் முறைமை என்ற வகையில் ஜனநாயகத்தின் மீதான இலங்கை மக்களின் பற்றுறுதி மற்றும் திடநம்பிக்கை ஆகியவற்றை இத்தேர்தல் மீண்டும் ஒருமுறை பறை சாட்டியுள்ளது. சுமார் 75 விகிதமாக இலங்கையர்கள் தேர்தலில் வாக்களித்தமை இதற்கான சான்றாகும். தேர்தலின் பின்னர் முன்னைய ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடமிருந்து அதிகார கைமாற்றம் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது. இது, இலங்கையின் பலமான நிறுவனமயப்படுத்தப்பட்ட ஜனநாயகத்துக்கான ஓர் சான்றாக அமைகிறது. பல்வேறு காரணங்களுக்காக இத் தேர்தல் முக்கியமானதாக திகழுவதோடு, எமக்கு பல படிப்பினைகளையும் வழங்கியுள்ளது. எனவே, 2024ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முக்கிய பிரதிபலிப்புகளை சுருக்கமாக ஆராய்வதை இக்கட்டுரை நோக்கமாகக்கொண்டுள்ளது.
வாக்களிப்பு நடத்தையில் வகுப்பு ரீதியான போக்குகள்
சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இலங்கையின் அரசியலானது பிரபுத்துவ குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த சிறிய அரசியல் மற்றும் சமூக மேட்டுக்குடி (உயர் வகுப்பு) குழுவினரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. முக்கியமாக, பிரேமதாச மற்றும் சிறிசேன ஆட்சிகாலத்தில் கூட அரசாங்கத்தின் தலைவர் கீழ் வகுப்புப் பின்னணியைக் கொண்டவர்களாக இருந்தபோதும், அரசாங்கத்தின் உள் வட்டாரம் எப்போதும் மேட்டுக் குடியினர் வசமே இருந்தது. எனவே, இலங்கையின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியதர அல்லது கீழ் வகுப்பினைச் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் ஒருபோதும் அதிகார ஆசனத்தில் வீற்றிருக்கவில்லை – தீர்மானம் மேற்கொள்ளலில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கவும் இல்லை. இது ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகத் தோன்றலாம். எனினும், நடுத்தர அல்லது சாதாரண வகுப்பு பின்னணியைக் கொண்ட அரசியல்வாதிகளுக்கு நாட்டின் கொள்கை வகுத்தலில் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிற்கே செல்வாக்கு செலுத்த முடிந்தது. தத்தமது அமைச்சுகளுக்கு வழங்கப்பட்ட நிருவாக அதிகாரங்களைக் கொண்டிருப்பதைத் தவிர, நாடாளுமன்றத்தினால் அல்லது அமைச்சரவையினால் மேற்கொள்ளப்படும் முக்கிய தீர்மானங்களில் அவர்கள் எவ்வித கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. எப்போதும், நாடாளுமன்ற உறுப்பினர்களுள் மிகப் பெரும்பான்மையானோர் நாடாளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டங்கள் அல்லது அரசியலமைப்பிற்கான திருத்தங்கள் ஆகியவற்றை அங்கீகரிப்பதற்காக அமோக ஆதரவுடன் தமது கைகளை உயர்த்தியபோதிலும், அவற்றை அவர்கள் வாசிப்பதோ அல்லது புரிந்துகொள்வதோ இல்லை. வேறு வகையில் கூறுவதாயின், முக்கிய தீர்மானங்களை எப்போதும் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு சிறிய மேட்டுக்குடி வகுப்பினரோடு இணைந்து உயர்குழாம் அரசியல் வர்க்கம் மேற்கொண்டன. ஆகவே, சாதாரன வகுப்பு பின்னணியோடு வந்த அரசியல்வாதிகளுள் மிகப் பெரும்பான்மையினர் அதிகாரத்தின் வெளிப்புற விளிம்பு நிலையில் காணப்பட்டனர்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக, குறிப்பாக, 1978ஆம் ஆண்டிற்குப் பின்னர், அரசியல் களம் கணிசமான அளவு மாறியுள்ளது என்பதனை உணர முடிகின்றது. இதனை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன. அதாவது, அனுசரணை அரசியல் (patronage politics) அல்லது காப்பாளன் – கட்சிக்காரன் (patron-clientelism) உறவு மற்றும் மேட்டுக்குடியினர் அரசைக் கைப்பற்றுதல் ஆகியவற்றுக்கு வழிவகுத்து, சுமார் 75 ஆண்டுகளுக்கு மேல் இந்த நாட்டை ஆட்சி செய்த எண்ணிக்கையில் சறிய அரசியல் வகுப்பினரை இனியும் நம்புவதற்குத் தாம் தயாரில்லை என்ற தீர்ப்பினை இத்தேர்தலில் இலங்கை மக்கள் வழங்கியுள்ளனர். ஆளும் வர்க்கத்தினரின் தொடர்ச்சியான தீயஆட்சி, ஊழல், அனுசரணை அரசியல், நண்பர்சார்புவாதம் மற்றும்பரம்பரை அரசியலைப் பாதுகாத்தல் ஆகியன காரணமாக இலங்கையின் வாக்காளர்களில்ஒரு கணிசமான பிரிவினர் ஆளும் வர்க்கத்தினர் மீது அதிருப்தியுற்றுள்ளனர் அல்லது அவர்களை வெறுக்கவும் செய்கின்றனர் என்பதை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இறுதியில் மேற்போந்த காரணிகளே 2022 இல் இலங்கையை பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கின என்ற கருத்து இன்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ளது போல் தென்படுகின்றது. எனவே, இத்தேர்தலில் மக்கள் ஒரு கிராமிய, ஆளும் வர்க்கம் சாராத, மேட்டுக்குடி சாராத குடும்பப் பின்னணியிலிருந்து வரும் ஒரு தலைவரைத் தமது தெரிவாக மேற்கொண்டுள்ளனர். இவ் அதிகார நிலைமாற்றமானது, இலங்கையின் பாரம்பரிய அரசியல் கலாசாரம் ஒரு புதிய யுகத்திற்குள் காலடியெடுத்து வைத்துள்ளதை காட்டுகின்றது. குறிப்பாக, மக்கள்மைய, திறந்த, பொறுப்புக்கூறல்மிக்க, ஊழலற்ற, கீழிருந்து மேல்நோக்கிய, திறமைக்கு முதலிடம் மற்றும் பங்கேற்பு ஆட்சிமுறை யுகத்தினை நோக்கி நிலைமாற்றமுறுவதன் தொடக்கத்தை உணர்த்தி நிற்கிறது.
இனத்துவமும் வாக்களிப்பு நடத்தையும்
இனத்துவம், பிரதேசம், சாதி மற்றும் மதம் ஆகியவற்றிற்கிடையிலான இடைத்தொடர்பின் மாற்றமுறும் தன்மை பற்றிய முக்கிய புரிதல்களையும் இத்தேர்தல் முடிவுகள் எமக்கு வழங்குகின்றன. இன, மத உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கு தன்னலவாதிகளால் ஒரு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக தேர்தல் பிரசாரத்தின் போது இனவாதம் எவ்வித தாக்ககரமான பங்கையும் வகிக்கவில்லை என்பது தெளிவு. மொட்டுக் கட்சி மற்றும் திலித் ஜயவீரவின் மௌபிம ஜனத்தா கட்சி ஆகியவை தோற்கடிக்கப்பட்டமை இக்கருத்தினை மேலும் உறுதிப்படுத்துகிறது. எனினும், வாக்களிப்பு நடத்தையில் இன மற்றும் மதக் காரணிகளின் செல்வாக்கு ஓரளவுக்கேனும் இருந்தது என்பதும் மறுப்பதற்கில்லை. ஆயினும், நாடாளுமன்றத் தேர்தலில் இன, மத, சாதி மற்றும் பிரதேசக் காரணிகளை வாக்காளர்கள் முற்றாக புறக்கணித்திருப்பதனை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதனை தெற்கிலும், வட -கிழக்கிலும் மற்றும் மலையகத்திலும் அவதானிக்க முடிகின்றது. தீவிர தமிழ்த் தேசியவாதம் மற்றும் முஸ்லிம் தேசியவாதம் நிலவும் தேர்தல் தொகுதிகள் (வட்டுக்கோட்டை, திகாமடுல்ல) மற்றும் மலையக அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்பட்ட நுவரெலிய -மஸ்கெலியா தேர்தல் தொகுதி என்பவற்றில் தேசிய மக்கள் சக்தி வெற்றிப்பெற்றிருப்பது இதனை மேலும் உறுதிசெய்கிறது.
மேலும் நவ-தாராளவாதம், நண்பர்சார்புவாதம், ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஆகியவற்றை நிராகரித்ததன் மூலம் சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் தற்போதிருக்கும் ஆட்சி முறையில் ஒரு மாற்றத்தினை வேண்டி தமது வாக்குகளை அளித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. இருப்பினும், ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை இனத்தவர்கள் வாழும் பிரதேசங்களில் வாக்களிப்பு முறைமை வேறுப்பட்டதாக அமைந்திருந்தது. பிராந்திய அரசியல் கட்சிகள் பலம்பொருந்திய நிலையிலுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், புத்தளம் மற்றும் மலையக மாவட்டங்களில் வாழும் மக்களின் வாக்காளர் நடத்தை சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களின் வாக்காளர் நடத்தையிலிருந்து கணிசமான அளவு வேறுபட்டிருந்ததை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி, தேசிய காங்கிரஸ் ஆகியன சஜித் பிரேமதாச அல்லது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக முனைப்பாக பிரசாரம் செய்தன. இதற்கு மாறாக, தேர்தலுக்கு முன்னர் வடக்கு கிழக்கில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் “தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு” என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு அரியநேத்திரனை “பொது தமிழ் வேட்பாளராக” களமிறக்கின. எனவே, மாவட்ட அடிப்படையிலான தேர்தல் முடிவு வரைபடத்தில் காட்டப்பட்டவாறு யாழ்ப்பாணம், வன்னி, திகாமடுல்ல, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா, பதுளை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் சஜித் பிரேமதாச வினால் வெற்றிகொள்ளப்பட்டதோடு, ரணில் விக்ரமசிங்கவும் கணிசமான அளவு வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். இவ்வாறு, இனத்துவ சிறுபான்மையினரது – இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம்கள் வாக்களிப்பு நடத்தை ஏனைய சிங்கள பெரும்பான்மையினரது வாக்களிப்பு நடத்தையிலிருந்து கணிசமான அளவு வேறுபட்டிருந்தது. இம் மாறுபட்ட வாக்களிப்பு நடத்தைக்கு ஒருவர் பின்வரும் பல விளக்கங்களைத் முன்வைக்கலாம்.
இலங்கையில் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் தொடக்க காலத்திலிருந்தே மத்திய அரசாங்கம் சிறுபான்மையினரது கோரிக்கைகளுக்கு பாராமுகமாக உள்ளது என்ற கருத்தை இன, மத சிறுபான்மையினரது பிரதிநிதிகள் கொண்டிருப்பதனால் இவ்விரு தரப்புகளுக்கும் இடையே ஒரு செயழிழந்த உறவே நிலவிவருகின்றது. எனவே, சிறுபான்மையினரின் சமூக அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் பிராந்திய கட்சிகள் அரசாங்கத்திற்கும் தொகுதி மக்களுக்குமிடையில் ஒரு தரகராக செயற்பட்டு வந்துள்ளன. மரபுரீதியாக, சிறுபான்மையினர் தலைமைதாங்கும் அரசியல் கட்சிகள் தாமே இச்சமூகங்களின் ஏக பிரதிநிதிகள் என்ற மனோநிலையில் மத்திய அரசாங்க மட்டத்தில் கொள்கை வகுத்தல் செயன்முறையில் இம்மக்களின் பிரச்சினைகளை எடுத்தியம்புகின்றன. அதனால், சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த பயன் என்ன என்பது தனியாக ஆராயப்படவேண்டிய வினாவாகும். ஆகையால், பிராந்திய கட்சிகள் ஒரு காப்பாளர் – கட்சிக்காரர் (patron-clientelism) எனும் அணுகுமுறையையும் போசகர் வலையமைப்புகளையும் அத்துடன் இன, மத தேசியவாதத்தையும் பயன்படுத்தி உள்ளூர் குடிமக்களோடு ஒரு நெருக்கமான உறவை கட்டியெழுப்பியுள்ளன. இக்கட்சிகள் உள்ளூர் மட்டத்தில் முனைப்புடன் செயற்படுவதோடு, மக்கள் தமது நாளாந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்காக அவற்றின் உள்ளூர் செயற்பாட்டாளர்களை அணுக விளைகின்றனர். கட்சிக்கும் வாக்காளருக்கும் இடையிலான உறவுகள் இப்பிரதேசங்களில் பலமானதாக உள்ளன. எனவே, மக்கள் தேசிய மட்ட கட்சிகளை விட இப் பிராந்திய கட்சிகளுக்கு அரசியல் ரீதியாக அதிகம் விசுவாசமாக உள்ளனர் அல்லது பிணைக்கப்பட்டுள்ளனர் எனலாம். எனவே, ஜனாதிபதி தேர்தல்களின்போது வாக்காளர்கள் வழமையாக தமது தேர்தல் தெரிவுகளை மேற்கொள்வதில் பிராந்திய இனத்துவ கட்சிகளின் தலைவர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களையே பின்பற்றுகின்றனர். மேலும், இப் பிராந்திய இனத்துவ கட்சிகள் பெருமளவில் தலைவர் மைய, தனிநபர் தன்மை மிக்க மற்றும் குறைந்தளவிலான ஜனநாயகத்தினைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.
எனவே, இனத்துவம், சாதி மற்றும் மதம் ஆகியன பிராந்திய இனத்துவ கட்சிகளோடு வலுவாக பிணைக்கப்பட்டுள்ளன. எனினும், இக்கட்சிகள் தேசிய தேர்தல்களில் தேசிய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதோடு, சில சந்தர்ப்பங்களில் தேசிய மட்டத்தில் அரசாங்கங்கத்தை அமைப்பதிலும் முக்கிய சக்திகளாகக் காணப்படுகின்றன. தேர்தல்களின்போது தேசிய மட்டக் கட்சித் தலைவர்கள் பிராந்திய இன, மத கட்சிகளின் தலைவர்களின் ஆதரவுடன் அடிக்கடி சிறுபான்மையினர் செறிவாக வாழும் பகுதிகளுக்குச் விஜயம் செய்வதானது அச்சமூகத்தின் மீது ஒருவித ஏகபோகத்தை சிறுபான்மையின தலைவர்களுக்கு தவறுதலாக வழங்குகிறது. தேசிய மட்டக் கட்சிகள் சிறுபான்மைப் பகுதிகளில் தமது அரசியல் அலுவலகங்களைக் கொண்டிருந்தபோதிலும், தமது பணிகளுக்கு மக்களை ஒன்றுதிரட்டுவதில் அவை மிகவும் செயற்றிறனற்றவையாக உள்ளன. அதேவேளை, பிராந்தியக் கட்சிகள் மக்களுடன் இணைந்திருப்பதை உறுதிசெய்வதற்காக அப்பிரதேச மக்களுடன் முறைசாரா கூட்டங்களையும் அனுசரணை வலையமைப்புகளையும் பயன்படுத்துகின்றன.
பிராந்தியக் கட்சிகள் தமது சமூகத்தின் மீது கொண்டிருக்கும் மேலாதிக்கமானது, அரச அதிகாரம், வளங்கள், அமைச்சுப் பதவிகள் மற்றும் வேறு கண்கூடான மற்றும் கண்கூடற்ற பயன்களைப் பெற்றுக்கொள்வதற்கு உதவுகிறது. எனினும், அவை எந்தளவுக்கு தமது சமூகம் சார் நலன்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பது கேள்விக்குறியே. முக்கியமாக, தேசிய மட்ட கட்சிகள் சிறுபான்மையினர் உரிமைகள், அதிகார பகிர்வு, நல்லிணக்கம் சமாதானம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவை தொடர்பாக கொண்டிருக்கும் கொள்கைகள் தொடர்பாக ஒருவித எதிர்மறையான கருத்து சிறுபான்மை மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இதற்கு வரலாற்றுக் காரணிகள் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன. பதிலுக்கு அவை சிறுபான்மை மக்கள் மத்தியில் தேசியக் கட்சிகள் குறித்த நம்பிக்கையீனம் மற்றும் சந்தேகம் ஆகியவற்றுக்கு இட்டுச் சென்றுள்ளன. இவை அனைத்தும் சிறுபான்மை வாக்காளர்களுக்கும் தேசிய கட்சிகளுக்கும் இடையே ஒரு பகைமையான உறவிற்கு வித்திட்டுள்ளதாக சிலர் வாதிடுகின்றனர். இது, தேசியக் கட்சிகளுடன் சிறுபான்மை கட்சிகள் இணைந்து செயல்படுவதற்கான அவகாசத்தினை குறைவடையச் செய்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் இது தொடர்பாடல் மொழிகளில் காணப்படும் மட்டுப்பாடுகள் காரணமாக பரப்பப்படும் தவறான தகவல்களினால் ஏற்படுகிறது – தெற்கின் அரசியல் போக்குகள் தொடர்பாக தமிழ் ஊடகங்கள் சிறுபான்மையினருக்கு தகவல் வழங்கும் முறை வேறுபட்டதாக அமையலாம். சில சந்தர்ப்பங்களில் அத்தகைய துருவமயமாதல் சில பிராந்திய கட்சித் தலைவர்களால் தாம் மீண்டும் தெரிவு செய்யப்படுவதையும் வேறு அரசியல் ஆதாயங்களையும் இலக்கு வைத்து தமது வாக்கு வங்கியைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவையனைத்தும் சிறுபான்மையினரின் வாக்களிப்பு நடத்தையில் பெரியளவிலான தாக்கத்தினைச் செலுத்துகின்றது. இத்தகைய வாக்களிப்பு வேற்றுமை 2005, 2010, 2015, 2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளின் ஜனாதிபதித் தேர்தல்களில் பிரதிபலித்துள்ளது. இதன்போது, சிறுபான்மை இனத்தவரது வாக்களிப்பு நடத்தை நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபடுகின்றது. ஆகவே, முன்னைய மற்றும் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில் நோக்கும் போது இனத்துவ சிறுபான்மையினர் தமது தெரிவுகளை பெரும்பாலும் தமது கட்சியின் வேண்டுகோளுக்கும் நிகழ்ச்சி நிரலுக்கும் அமையவே மேற்கொள்கின்றனர் என்று வாதிட முடியும்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்றவுடனேயே சிறுபான்மை இனத்தவருக்கெதிரான பெருமளவு விமர்சனங்களை நாம் கண்டுள்ளோம். எனினும், வெறுமனே அவர்களது வாக்களிப்பு பாங்கினை அடிப்படையாகக் கொண்டு சிறுபான்மை இனத்தவர்கள் தற்போதிருக்கும் ஆட்சி முறைமையைத் திருத்தி அமைப்பதற்குத் தயாராக இல்லை என்று கற்பிதம் கொள்வது நியாயமானதல்ல. மாறாக, அவர்கள் வாழுகின்ற அரசியல் சூழ்நிலை மற்றும் பல ஆண்டுகளாக பிராந்திய கட்சிகளினால் விருத்தி செய்யப்பட்ட அரசியல் கலாசாரம் ஆகியன அவர்களது தேர்தல் நடத்தையை வடிவமைப்பதில் பெருமளவு தாக்கம் செலுத்தியுள்ளது. இது பாரம்பரிய கட்சி தாபனங்களையும் காலத்துக்கொவ்வாத பழைமைவாய்ந்த அரசியல் கலாசாரத்தையும் நிராகரிப்பதற்கான அவர்களது வாய்ப்பை மட்டுப்படுத்தி இருப்பதாக தென்படுகிறது. ஆயினும், இப்போக்கினை நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றியுள்ளனர் என்பது சிறுபான்மை தேர்தல் அரசியலில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றமாகும். எனவே, எதிர்காலத்தில் தேசிய மட்டக் கட்சிகள் இப்பகுதிகளில் தமது கட்சி அலுவலகங்களை வலுவூட்டியும் உயிர்ப்பூட்டியும் தமது அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களில் சிறுபான்மையினரை நேரடியாக ஈடுபடுத்திக்கொள்வதற்கு கூடுதல் முயற்சியொன்றை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தேசியக் கட்சிகள் உள்ளூர் மட்டத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், கூட்டங்கள், கள விஜயங்கள் மற்றும் சமூக மட்டத்திலான நிகழ்ச்சிகள் மேற்கொள்ளலாம். இவை அனைத்தும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல், பரஸ்பர புரிந்துணர்வு, மதிப்பளித்தல் மற்றும் சிறுபான்மையினருடனான உறவு ஆகியவற்றை வளர்த்தெடுக்க உதவும். இவ்விடயத்தில் தேசியக் கட்சிகளின் தொடர்பாடல் மொழி மற்றும் சரியானதும் நம்பகமானதுமான தகவல்களைப் பரப்புதல் ஆகியன முக்கியமாகும். மேலும், பாரம்பரிய அரசியலில் ஒரு மாற்றத்தைக் கோரும் தேசியக் கட்சிகள் உள்ளூர் இளைஞர்களோடு இணைந்து செயற்படுவதும் தமது அரசியல் தளத்தை விரிவுபடுத்துவதற்கு உதவும். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகள் மாத்திரமின்றி, கண்டி மற்றும் புத்தளம் முதலிய சிறுபான்மை மக்களின் வாக்குகளை ஒன்று திரட்டுவதற்கு சரியான பொறிமுறையொன்றினை தேசியக் கட்சிகள் பின்பற்றுமாயின் பிராந்தியக் கட்சிகள் உருவாக்கியுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியக்க வாய்ப்பு ஏற்படலாம். தேசிய மக்கள் சக்தியின் (NPP) செயற்பாடுகள் அத்தகைய மாற்றம் ஒன்றிற்கான தேவையினை சிறுபான்மை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது எனலாம். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இதற்கான சிறந்ததொரு அடித்தளத்தினை இட்டுள்ளது எனலாம்.
அதேவேளை, மனித பாதுகாப்பு, அதிகாரப் பகிர்வு, ஜனநாயகத்திற்கு மதிப்பளித்தல், மனித உரிமைகள், அடிப்படை மனித சுதந்திரம் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான வாய்ப்பு குறித்த கரிசனைகள் சிறுபான்மையினரின் வாக்களிப்பு நடத்தையினை செம்மைப்படுத்துகின்றன என்பதனையும் தேசியக் கட்சிகள் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, இது குறித்த தெளிவான புரிதல் பிரதான தேசியக் கட்சிகளுக்கு இருக்க வேண்டும். மேற்கூறப்பட்டவற்றிற்கு மதிப்பளிக்கும் வேட்பாளர்களுக்கு பிராந்தியக் கட்சிகள் தமது ஆதரவை வழங்கும் போக்கும் காணப்படுகின்றது. எனவே, சிறுபான்மையினருக்கு ஆகக் குறைந்தளவு தீங்கிளைக்கும் வேட்பாளரைத் தெரிவு செய்யுமாறு அவர்கள் தமது ஆதரவாளர்களைக் கோருகின்றனர். எனினும், வரலாற்று ரீதியாக பல சந்தர்ப்ங்களில், இவ் எதிர்ப்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை. இவற்றுக்கப்பால், சிறுபான்மை மக்கள் ஏன் பிராந்திய அரசியலை நோக்கித் தள்ளப்பட்டார்கள், அதற்கான வரலாற்றுக் காரணிகள் மற்றும் தேசியக் கட்சிகள் காலம் காலமாக இம்மக்களின் பிரச்சினைகளைக் கையாண்ட விதம் போன்றவற்றினை தேசியக் கட்சிகள் புரிந்துக்கொள்வது மற்றும் அதற்கேற்ற வகையில் தமது கொள்கைகளைத் திருத்தி மாற்றிக்கொள்வது என்பன சிறுபான்மை மக்களை அணுகுவதற்கான வாய்ப்பினை அதிகரிக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களும் புதிய எதிர்ப்பார்புடன் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளார்கள் – அந்த நம்பிக்கையினை தொடர்ந்துப் பேணுவதற்கு அவசியமான செயற்பாடுகளை முன்னெடுப்பது புதிய அரசாங்கத்திற்குள்ள சவாலாகும். அது தேசிய மக்கள் சக்திக்கும் சிறுபான்மை மக்களுக்குமிடையிலான எதிர்கால உறவு பாதையினை தீர்மானிக்கும்.
ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மையினருள் ஒரு பிரிவினர் கட்சிச் செல்வாக்கின்றி தமது தெரிவை தாமே சுதந்திரமாக மேற்கொண்டுள்ளனர். எடுத்துக் காட்டாக, இத் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணம் (27,086), வன்னி (21,412), மட்டக்களப்பு, (38,832) மற்றும் நுவரெலியா (105,057) ஆகிய மாவட்டங்களில் கணிசமான அளவு வாக்குகளைப் பெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டு அனுர பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இது, சிறுபான்மையினர் தலைமை தாங்கும் கட்சிகளின் மேலாதிக்கத்துக்கான ஒரு சவாலை வெளிப்படுத்தும் கவனிக்கத்தக்கதொரு மாற்றமாகும். வடக்கு கிழக்கிலும் மத்திய மலைநாட்டிலும் கணிசமான ஆதரவைப் பெற்றுக்கொள்ள தேசிய மக்கள் சக்திக்கு முடியுமாயின், அது தேசிய கட்சியொன்றுக்கும் இனத்துவ மத சிறுபான்மையினருக்கும் இடையிலான புதியதொரு உறவை அதிலும் ஆரோக்கியமான நேரடி உறவினைத் தோற்றுவிக்கலாம். நாடாளுமன்றத் தேல்தல் முடிவுகள் அதனை உறுதிசெய்வதாக அமைந்துள்ளது.
முக்கியமாக, முஸ்லிம் இளைஞர்கள், குறிப்பாக, கல்வி அறிவைக் கொண்டவர்கள், வெளி உலகத்தை அறிந்தவர்கள், சமூக ஊடகங்களில் முனைப்பாக செயற்படுபவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறுபட்ட பிரிவினரோடும் இடைத்தொடர்புகளைப் பேணுபவர்கள் புதிய அரசியல் மாற்றத்தினை கோரி வாக்களித்துள்ளார்கள். இத்தகையதொரு போக்கினை பெருந்தோட்டப் புறங்களில் வாழும் இளைஞர்கள் மத்தியிலும் கண்கூடாக எம்மால் அவதானிக்க முடிகிறது. அவர்கள் சமூக ஊடகங்களின் மூலம் அநுரகுமார திசாநாயக்கவிற்காக பிரசாரம் செய்ததோடு, தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தில் மாற்றமொன்றினை வேண்டி தேர்தல் தெரிவுகளை மேற்கொள்வதில் தமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு செலுத்தினர். அவர்கள் தமது சமூகத்தின் பாரம்பரிய அரசியல் தலைவர்களை மிகவும் தீவிரமாக விமர்சனம் செய்பவர்களாக இருந்ததோடு, தமது தலைவர்களது சந்தர்ப்பவாத நடத்தைகள் காரணமாக அவர்கள் மீது பெருமளவு அவநம்பிக்கையையும் கொண்டிருந்தனர். அவர்கள் தமது தலைவர்களின் அடிக்கடி மாற்றமுறும் அரசியல் நிலைப்பாடுகள், கட்சித் தாவல்கள் மற்றும் சந்தர்ப்பவாதக் கொள்கைகள் ஆகியவற்றை விமர்சிப்பவர்களாகவும் இருந்தனர்.
எனவே, தூய அரசியல் குறித்து கரிசனை கொண்டுள்ள, புதிய அரசியல் கலாசாரமொன்றைப் பற்றி கனவு காணும் இளம் தலைமுறையினர் தற்போதிருக்கும் பாரம்பரிய மற்றும் பிரபுத்துவ அரசியல் கலாசாரத்தை படிப்படியாக மாற்றியமைப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆயினும், கட்சிக் கட்டமைப்புகள், ஒன்றுதிரட்டல் உபாயங்கள் மற்றும் பிராந்திய கட்சிகளினால் பயன்படுத்தப்படும் அனுசரணை வலையமைப்புகள் ஆகியவை காரணமாக இது ஒரு எளிதான பணியாக அமைந்துவிடாது – அவை மிகவும் பலமானவையாகவும் நிறுவனமயப்படுத்தப்பட்டவையாகவும் உள்ளன. அத்துடன், உள்ளூர் அரசியல் மற்றும் வர்த்தக மேட்டுக் குடியினர் உள்ளூர் அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் உள்ளனர். எனவே, அவர்கள் அத்தகைய மாற்றத்தை எதிர்ப்பார்கள்; தமது அதிகாரத்தையும் செல்வாக்கையும் சமூக ஆதரவு பொறிமுறைகளையும் பயன்படுத்தி இளைஞர்களை அரசியல் ஈடுபாட்டிலிருந்து தனிமைப்படுத்துவார்கள். இது, எதிர்காலத்தில் பாரம்பரிய அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதில் சிறுபான்மையின இளைஞர்கள் எதிர்நோக்கவேண்டியிருக்கும் ஒரு முக்கிய சவாலாகத் தோன்றுகிறது. எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வாழும் முஸ்லிம் இளைஞர்களின் ஆதரவு கணிசமாக தேசிய மக்கள் சக்தியினை நோக்கி நகர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் வெளிப்பாடே நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளாகும்.
நவ தாராளவாத நிகழ்ச்சி நிரலை நிராகரித்தல்
மேலும், இலங்கை வாக்காளர்கள் தமது தேர்தல் ஜனநாயக வரலாற்றில் முதல் தடவையாக பிரபல தலைவர்களையும் அவர்களது யதார்த்தபூர்வமற்ற வாக்குறுதிகளையும் நிராகரித்து, மக்கள் பிரச்சனைகளை தீர்க்கவல்ல மக்கள் – மைய அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்த ஒரு வேட்பாளரை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர். மத்தியதர மக்கள் மத்தியில் இவ்வுணர்வு மிகவும் பலமாக உள்ளதாகத் தோன்றுகிறது. அதேவேளை, விவசாயம், பண்ணைத்தொழில், சிறு தொழில் முயற்சியாண்மை, சுயதொழில் மற்றும் அரசாங்கத்தின் சமூகப் பாதுகாப்பு பயன்கள் ஆகியவற்றை நம்பியிருக்கும்; சாதாரண மக்களின் சில பிரிவினர்களும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்கவை ஆதரித்தனர். எனினும், இதற்கு மாறாக, கிராமப்புற வாக்களர்களுள் குறிப்பிடத்ததொரு பிரிவினர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தேசிய மக்கள் சக்தி பொருளாதார ஜனநாயகம் மற்றும் ஓர் உறுதியான சமூக பாதுகாப்பு வலையமைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு சமத்துவமான பொருளாதாரத்திற்கான சீர்திருத்தங்களை முன்வைத்து பிரசாரம் செய்தது. இது பொருளாதார ஜனநாயகம், பொருளாதார நன்மைகளை பகிர்ந்தளிப்பதில் ஒரு மனிதாபிமான அணுகுமுறையை பின்பற்றுதல், நவதாராளவாத கொள்கையை நிராகரித்தல் என்பவற்றினை பிரதான பொருளாதாரக் கொள்கையாக உள்ளடக்கி இருந்தது. அது இலங்கை மக்களில் 5% குறைவானவர்கள் மத்தியில் நாட்டின் செல்வம் மிக அதிக அளவில் குவிந்துகிடப்பதை நிராகரிக்கும் ஒரு பொருளாதார முறைமையாகும். அத்தகையதொரு பொருளாதாரக் கொள்கைக்கு மக்கள் அமோக ஆதரவினை வழங்கியிருப்பது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் மேலும் உறுதியாகியுள்ளது.
ஊழலுக்கெதிராக அரச சேவையாளர்களின் வாக்களிப்பு
ஊழலற்ற அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்த அநுரகுமார திசாநாயக்கவின் மிகத் தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் அரசாங்க உத்தியோகத்தர்கள் இருக்கின்றனர் என்பதை தபால்மூல வாக்குகள் எடுத்துக்காட்டுகின்றன. அரச ஊழியர்கள் ஊழலுக்கு எதிராக போராடுவதற்கு தாம் தயாராக இருப்பதாக தமது வாக்குகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளனர். இது எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், சிறந்ததொரு ஆரம்பமாக நோக்கலாம். ஊழல் மிக்க அரசியல் தலைவர்களுக்கான ஒரு பலமான செய்தியாகவும் இது அமைகிறது. அரச ஊழியர்கள் ஊழலின் ஆபத்தையும், பொருளாதாரம், சமூக நலநோம்புகை மற்றும் நாட்டின் அபிவிருத்தி ஆகியவற்றின் மீதான அதன் பாதகமான தாக்கத்தையும் உணர்ந்துள்ளனர். அரசாங்க உத்தியோகத்தர்கள் ஊழல் மிக்கவர்கள் என்ற ஒரு பரவலான கருத்து சமூகத்தில் மிக நீண்டகாலமாக நிலவி வருகின்றது. எனினும், முழு தேர்தல் பிரசாரத்தையும் ஊழலுக்கெதிரான ஆட்சி என்ற கருப்பொருளில் நடத்திய ஒரு தலைவருக்கு கணிசமான அரச அதிகாரிகள் வாக்களித்துள்ளனர். இது அரச அதிகாரிகளின் சிந்தனை போக்கில் ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்பதோடு, அரசாங்க நிறுவனங்களில் ஊழல் பிரச்சினையின் தாக்கத்தையும் இது எடுத்துக் காட்டுகிறது.
அத்துடன், அரச நிறுவனங்களிலும் சமூகத்திலும் தீவிரமாகப் பரவியுள்ள ஊழல் காரணமாக இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என்ற உண்மையையும் அவர்கள் உணர்ந்துள்ளனர் போல் தெரிகின்றது. அரசியல் தலையீடற்ற, ஊழலுக்கெதிரான நிறுவனங்களை பலப்படுத்துவதன் மூலம் ஊழலுக்கெதிராக போராடுவதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு புதிய ஜனாதிபதிக்கு ஒருவித சட்டபூர்வத் தன்மையை தபால் மூல வாக்குகள் வழங்கியுள்ளன. அரச அதிகாரிகளின் வாக்களிப்பு நடத்தை நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. சுமார் 80% அதிகமான அரச அதிகாரிகள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே, ஊழலற்ற ஓர் இலங்கை, சட்டவாட்சி எனும் கோட்பாட்டிற்கு இணங்க, பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படை தன்மை மிக்க ஆட்சிக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். மக்கள் பல்வேறு காரணங்களினால் அரசாங்க நிறுவனங்களிலும் சட்டத்தை நிலைநாட்டும் அமைப்புகளிலும் நம்பிக்கையை இழந்துள்ளனர். எனவே, அரசாங்க நிறுவனங்களுக்கு புத்துயிரளிப்பதும் அவற்றின் மீதான பிரஜைகளது நம்பிக்கையை உறுதி செய்வதுமே தற்போதைய தேவையாகும் – இது புதிய ஜனாதிபதியினால் நிறைவேற்றப்படவேண்டிய ஒரு மாபெரும் பணியாகும்.
கிராமப்புற சிங்கள மக்களின் வாக்களிப்பு கோலங்கள்
ஜனாதிபதித் தேர்தலில் இரத்தினபுரி, பதுளை மற்றும் மொனராகலை முதலிய மாவட்டங்களில் கிராமப்புற சிங்கள வாக்காளர்களின் வாக்களிப்பு நடத்தை வேறுப்பட்டிருந்தது. அம்மாவட்டங்களில் வறுமை நிலையிலுள்ளோர் வீதம் முறையே 28%, 37% மற்றும் 33% என மிக அதிகமாகப் பதிவாகிறது (DCS, 2023). இவைதான் அநுரகுமாரவிற்கு குறைவான ஆதரவு கிடைத்த மாவட்டங்களாகும். எடுத்துக் காட்டாக, மொனராகலை மாவட்டத்தில் அளிக்கப்பட்ட 341,753 வாக்குகளுள் சஜித் 134,238 வாக்ககுள் பெற்றிருந்த அதேவேளை, அநுரகுமார திசாநாயக்க 140,269 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தார். அதே போன்று இரத்தினபுரியில் மொத்தமாக அளிக்கப்பட்ட756,970 வாக்குகளுள் சஜித் மற்றும் ரணில் ஆகியோர் முறையே 257,721 மற்றும்145,38 வாக்குகளைப் பெற, அநுரகுமார திசாநாயக்க 291,708 வாக்குகளைப் பெற்றார். பதுளை மாவட்டத்தில் மொத்தமாக அளிக்கப்பட்ட 584,443 வாக்குகளுள் அநுரகுமார திசாநாயக்க 197,283 வாக்குகளைப் பெற்றார். ஆயினும், கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நடுத்தர வர்க்க மற்றும் கல்விகற்ற வாக்காளர்கள் அநுரகுமார திசாநாயக்கவை பலமாக ஆதரித்த அதேவேளை, மொனராகலை, பதுளை, இரத்தினபுரி ஆகிய தேர்தல் மாவட்டங்களில் வறுமை மற்றும் குறைந்த கல்வியறிவு ஆகிய இரண்டினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் தேசிய மக்கள் சக்தியினால் வாக்குறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தவாத, ஊழல் எதிர்ப்பு, சமூக நலநோம்புகை நிகழ்ச்சித் திட்டம், பொருளாதார ஜனநாயக மாதிரி ஆகியவற்றின் பின்னால் அணிதிரளவில்லை என்பது தெளிவானதொரு எடுத்துக்காட்டாகும். மறுபுறமாக, ஹோமாகம, கடுவெல, கெஸ்பேவ, கம்பஹா மற்றும் குருநாகல் போன்ற கல்வி மட்டம் உயர்வாக காணப்படும் தேர்தல் தொகுதிகள் அநுரகுமாரவிற்கு மிக அதிகமான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தன (https://election.newsfirst.lk/district/Colombo). உயர்ந்த கல்வி மட்டத்தையும் உயர்ந்த பொருளாதார அடைவுகளையும் கொண்டுள்ள பகுதிகளில் மக்கள் ஒரு புதிய சமூக மற்றும் அரசியல் இயக்கத்தை விரும்பியுள்ளனர். ஆயினும், ஏலவே சுட்டிக்காட்டிய அதிக வறுமை நிலவும் மாவட்டங்களில், குறைந்தளவிலான கல்வி மட்டம், வெளியுலகத் தொடர்பு மற்றும் அரசியல் அறிவு என்பவற்றுடன், பெற்றோர்கள் பரம்பரை பரம்பரையாக கொண்டிருந்த அரசியல் விசுவாசம் என்பன புதிய அரசியல் மாற்றத்திற்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பினை தடுத்திருக்கலாம். ஆயினும், இந்நிலைமை நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர மாற்றத்துக்குள்ளாகியுள்ளது என்பது அவதானிக்கத்தக்க விடயமாகும்.
தேசியவாதமும் வாக்களிப்பு நடத்தையும்
வேறுபட்ட இனத்துவ பின்புலத்தினைக் கொண்ட மக்கள் தேசியவாதத்தினை நிராகரித்துள்ளமை (முழுமையாக இல்லாவிட்டாலும்) 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இம்முறை சிங்கள வாக்காளர் மத்தியில் தேசியவாதத்திற்கு இடம் இருக்கவில்லை. சிங்கள -பௌத்த மேலாதிக்கக் கட்சியான மொட்டுக்கட்சி மக்களால் தூக்கியெறிப்பட்டுள்ளது. இதற்கு பிறிதொரு வாதமும் முன்வைக்கப்படுகின்றது. அதாவது, சிங்கள பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கான மாற்றிடாக தேசிய மக்கள் சக்தியினை சிங்கள மக்கள் பார்க்கின்றார்கள் என்பதாகும். ஆகவே, மொட்டுக்கட்சியினை தூக்கியெறிந்து அனுரவிற்கு வாக்களித்துள்ளனர். தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருள் கணிசமான பிரிவினர் அநுரகுமார திசாநாயக்கவின் பின்னால் அணி திரளவில்லையெனினும், அது எவ்விதத்திலும் தேசியவாத காரணங்களினால் ஏற்பட்டதல்ல. மேலும், ஒரு சில தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தியிருந்தாலும், வடக்குக் கிழக்கு மக்கள் தமது பெரும்பான்மையான வாக்குகளை சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்ற தேசியத் தலைவர்களுக்கு வழங்கியதன் மூலம் தமிழ் தேசியம் எனும் சிந்தனையை வாக்களிப்பின் போது ஒரு பிரதான காரணியாக எடுக்கவில்லை என எண்ணத்தோன்றுகிறது. ஆயினும், இதற்கு மாறுபட்ட விளக்கங்களை ஒருவர் முன்வைக்கலாம். இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர் வாழும் ஒரு நாட்டில் தமிழ் பொது வேட்பாளர் 230,000 விற்கும் குறைவான வாக்குகளையே பெற முடிந்தது. இந்த வாக்களிப்புப் பாங்கானது வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் சமூக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார விடயங்களில் சம உரிமை, அங்கீகாரம் மற்றும் மதிப்பு ஆகியவற்றோடு ஓர் ஐக்கிய இலங்கைக்குள் வாழ விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. ரணில் மற்றும் சஜித் ஆகியோர் வட கிழக்குத் தமிழ் மக்களுக்கு பரீட்சயமாக நபர்களாகவும் அனுரகுமார அவர்கள் பரீட்சயமற்றவராக இருப்பதனால் வாக்களிப்பதனை தவிர்த்திருக்கலாம். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம் தமிழ் மக்கள் ஒரு தெளிவான செய்தியினை தெற்கிற்கு வழங்கியுள்ளார்கள். ஐக்கிய இலங்கைக்குள் சம உரிமைகளுடன் வாழ விரும்புவதே அச்செய்தியாகும். தெற்கின் சிங்கள -பௌத்த தேசியவாதத்திலும் வட கிழக்கு தமிழ் தேசியவாதத்லும் ஒரு முற்போக்கான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தீவிர மாற்றமா இல்லையா என்ற முடிவுக்கு வருவதற்கு காலம் அவசியம். ஆயினும், இதனை நல்லதொரு ஆரம்பமாக எடுத்துக்கொண்டு தெற்கும் – வடக்கும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். அதுவே காலத்தின் தேவையாகும் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதனை தெளிவாக உணர்த்தியுள்ளது. இச்சந்தர்ப்பம் தவறவிடப்படுமாயின் இனி ஒருபோதும் இலங்கை தேசத்தினைக் கட்டியெழுப்ப அல்லது இலங்கை அரசைக் கட்டியெழுப்ப வாய்ப்பு கிடைக்காது. இதுவே தேசிய மக்கள் சக்திக்கு முன் உள்ள பெரும் உள்ள பிரதான சவாலுமாகும்.
அரசியல் கட்சி முறைமையின் மாற்றமுறும் தன்மை மற்றும் அவநம்பிக்கை
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க. மற்றும் புதிதாகத் தோன்றிய மொட்டுக்கட்சி ஆகிய பாரம்பரிய கட்சிகளை தெளிவாக நிராகரித்து, தமது நம்பிக்கையை தேசிய மக்கள்ள சக்தியின் மீதும் ஐக்கிய மக்கள் சக்தியின் மீதும் வைத்துள்ளமையானது இலங்கையின் அரசியல் கட்சி முறைமையில் ஏற்பட்டுள்ள ஒரு தீவிர மாற்றத்தை இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டின. இவ்விரு கட்சிகளும் கட்சி அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரு பெரும் சக்திகளாக உருவெடுத்து நாட்டின் அரசியல் களத்தை வடிவமைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இவ்வனுமானத்தினை முற்றாக மாற்றியுள்ளது. மக்கள் நம்பிக்கை தேசிய மக்கள் சக்தியின் மீது பெரியளவில் அதிகரித்துள்ளது. எனவே, தேசிய மக்கள் சக்தி பழையக் கட்சிகளைப் பதிலீடு செய்துள்ளதுடன், இலங்கையின் அரசியல் கட்சி முறைமையும் ஒரு தீவிர மாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதனையும் காட்டுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும் போது பாரிய வீழ்ச்சியினை தழுவியுள்ளது. ஆயினும், தொடர்ந்தும் இரண்டாம் இடத்திலேயே உள்ளது. இவை தனிக் கட்சிகள் அல்ல. மாறாக, பல சிறிய கட்சிகளினால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பாகும். தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன தமது கொள்கைகள், சித்தாந்தங்கள் மற்றும் சௌகரியம் ஆகியவற்றைப் பின்பற்றும் இடதுசாரி மற்றும் வலதுசாரி கட்சிகளோடு செயற்படுவதற்கான வாய்ப்பை வழங்கும் அதேவேளை, இலங்கையில் அரசியல் கட்சி முறைமை மீண்டும் ஒரு இரு கட்சி முறைமையாகவே இருக்கப் போகின்றது என்பதும் தெளிவாகிறது. ஆயினும், இக்கட்சிகளின் சித்தாந்தங்கள் அவ்வப்போது மாற்றமுறும் காரியவாதத்தை (pragmatism) அடிப்படையாகக் கொண்டுள்ளன.
இதுவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து எந்த ஒரு வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெற முடியாதுபோன முதல் தடவையாகும். இது அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு காணப்படும் நம்பிக்கையின்மை மற்றும் தற்போதைய தேர்தல் முறைமையில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றின்பால் எமது கவனத்தை ஈர்க்கின்றது. அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை இலங்கையில் தீவிரமாகக் குறைவடைந்துள்ளதோடு, ஆட்சி அதிகாரத்தினை தமது நலன்களையும் வர்த்தக வகுப்பினரின் தேவைகளையும் அடைந்துக்கொள்ளும் வகையில் பயன்படுத்திய விதம் குறித்து வாக்காளர்கள் அதிருப்தியுற்றிருப்பதாகவும் தோன்றுகிறது. எனவே, இந்தத் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவிற்கு வழங்கிய ஆதரவு ஏனைய பிரதான கட்சிகள் மீதான பெருமளவு நம்பிக்கையின்மையினை வெளிப்படுகிறது. இருப்பினும், ஏறத்தாழ 3.8 மில்லியன் இலங்கையர்கள் (வெளிநாடுகளில் தொழில் புரியும் தொழிலாளர் அடங்கலாக) இம்முறை வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்துள்ளனர். இது, அரசியல் கட்சிகள் மீது எந்தளவு நம்பிக்கை குறைவாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையின்மையானது, கட்சித் தாவல்ககள், பேராசை, அரசியல் ஊழல், அனைத்து வித ஏமாற்றுச் செயல்கள் ஆகியன அடங்கலாக மக்கள் ஆணையின் தொடர்ச்சியான மீறலினாலேயே பெரும்பாலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது, விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இலங்கையின் தேர்தல்முறை அரசியலில் ஒரு நிரந்தரமான அம்சமாக மாறியுள்ளது. எனவே, அத்தகைய அரசியல் தலைவர்களையும் அவர்களது கட்சிகளையும் இனியும் நம்புவதற்கு தயாரில்லை என்ற தெளிவான செய்தியை இலங்கை வாக்காளர்கள் வழங்கியுள்ளனர். இது ரணில் விக்ககிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் தோல்வியில் ஒரு முக்கிய காரணியாக இருந்துள்ளது. இதனை இலங்கை மக்கள் மிக தெளிவாக நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். சுமார் 40 விகிதமான வாக்காளர்கள் வாக்களிப்பதனை தவிர்த்துள்ளனர். யுத்தத்திற்குப் பின்னர் இடம்பெற்ற மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது, 2024ஆம் ஆண்டுத் தேர்தலிலேயே வாக்களியாமை போக்கு மிக அதிகமாக காணப்படுகின்றது.
மேலும் கட்சி – வாக்காளர் உறவில் மாற்றமுறும் தன்மையை இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. வாக்களிப்பதற்காக அரசியல் தலைவர்களிடமிருந்து பொருள்சார் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவும் அனுசரணை அரசியல் அல்லது காப்பாளர் – கட்சிக்கார் என்ற உறவு இலங்கையின் தேர்தல் அரசியலின் ஒரு முக்கிய அம்சமாகும். இந்தப் பாங்கானது, வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக உள்ளூர் மட்ட கட்சி அமைப்பாளர்கள் பல்வேறு வகையான பொருள்சார் பயன்களை தமது கட்சிக்காரர்களுக்கு வழங்கும் கலாசாரம் மிகவும் பலமாக விளங்குகின்றது. வேறு வகையில் கூறுவதானால், வாக்களர் – கட்சி எனும் உறவு இலங்கையிலும் ஏனைய தென்னாசிய நாடுகளிலும் பெருமளவிற்கு பொருள்சார் நன்மைகளினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. எனினும், இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த 57 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் அத்தகைய பயன்களை நிராகரித்து, ஆட்சி முறைமையில் ஒரு மாற்றதிற்காக தமது வாக்குகளை வழங்கியுள்ளனர். இது, மரபு ரீதியான தேர்தல் அரசியலினால் நேரடியாகப் பலியாகியுள்ள இளைஞர்கள் மத்தியில் துரிதமாகத் தோன்றிவரும் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தின் ஆரம்பமாகத் தோன்றுகிறது. இதனை நாடாளுமன்றத் தேர்தல் மேலும் உறுதிசெய்துள்ளதுடன், இலங்கையில் அனுசரணை அரசியல் மற்றும் காப்பளர் – கட்சிக்காரன் உறவு முடிவுக்கு வரும் காலம் கனிந்துள்ளது என எண்ணத்தோன்றுகிறது.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் காட்டிய பிறிதொரு விடயம் யாதெனில், இலங்கையின் தேர்தல் அரசியல், வாக்காளர் நடத்தை மற்றும் கட்சி அரசியல் மிக வேகமாக மாற்றமுறும் தன்மையினையாகும். உதாரணமாக, நான்கு வருடங்களில் தேசிய மக்கள் சக்தி 3% இலிருந்து 42% இற்கு முன்னோக்கிப் பாய்வது ஒரு சாதாரண விடயம் அல்ல. இவ்வெற்றி அரசியல் விஞ்ஞானிகளை மற்றும் அவதானிப்பாளர்களை பெரும் வியப்புக்குள் ஆழ்த்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எம்மை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படியான அரசியல் மாற்றங்கள் உலகில் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றது. அத்துடன், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ 6.9 மில்லியன் வாக்குகளையும் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தெளிவான மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் பெற்றுக்கொள்வதற்கு உதவியது சிங்கள – பௌத்த பெரும்பான்மைவாதத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட பலமிக்க மொட்டுக்கட்சியாகும். ஆயினும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெறும் 3% வாக்குகளைப் பெற்று பெரும் தோல்வியை. நாடாளுமன்றத் தேர்தலிலும் மொட்டுக்கட்சியினை மக்கள் முற்றாகப் புறக்கணித்துள்ளார்கள். இத்தேர்தலிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம் இலங்கையின் தேர்தல் அரசியல் களம் துரிதமாக மாறிவருகிறது என்பதும் வாக்காளர்கள் அரசியல் நிகழ்வுகள் குறித்து நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதும் அவர்கள் தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி தேர்தல் நடைமுறை வாயிலாக ஊழல்மிக்க, ஏமாற்றுத் தலைவர்களைத் தண்டிப்பதில் அக்கறையாக உள்ளனர் என்பதுமாகும். ஊழல்மிக்க மற்றும் மக்கள் ஆணையினை மீறும் அரசியல்வாதிகளை மக்கள் தண்டிப்பதற்குள்ள ஒரே ஒரு சந்தர்ப்பம் தேர்தலாகும். இத்தண்டை நாடாளுமன்றத் தேர்தலில் மிகத் தெளிவாகவே வெளிப்பட்டுள்ளது.
இனத்துவக் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் இத்தேர்தலில் கற்றுக்கொள்வதற்கு ஒரு பாடம் உண்டு. அதாவது, வர்க்கபேதம், சாதி, பிரதேசம், இனத்துவம் மற்றும் மதம் ஆகியவற்றால் உருவாக்கப்படும் குறுகிய பிரதேசவாத அரசியலை மீளக்கட்டமைப்பதிலேயே அவர்களின் எதிர்கால அரசியல் பிழைப்பு தங்கியுள்ளது என்பதே அப்படிப்பினையாகும். பிராந்திய அரசியலை புதிய பாதையில் மற்றும் பானியில் முன்கொண்டு செல்ல புதிய அணுகுமுறையினையொன்றினைக் குறித்து சிந்திக்க வேண்டும். பெரும்பான்மை – சிறுபான்மை எனும் சிந்தனை இத்தேர்தல் பிரசாரம் முழுவதிலும் அவ்வளவு கவர்ச்சியைப் பெறவில்லை. எனவே, வேட்பாளர்களும் அவர்களது கட்சிகளும் இதனை நன்கறிந்து தேர்தல் ஆதாயத்திற்கான ஒரு ஆயுதமாக இனத்துவத்தினை கையாள முற்படவில்லை. எனவே, இனத்துவக் கட்சிகள் தத்தமது தேர்தல் தொகுதிகளையும் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதேவேளை, தேசிய அரசியலிலும் தேசியப் பிரச்சினைகளிலும் நேரடியாக ஈடுபடவேண்டும் – இது, சிறுபான்மையினர் தெற்கு அரசியல் தலைவர்களோடும் கட்சிகளின் செயற்பாடுகளோடும் இணைந்து செயலாற்றுவதற்கான வாய்ப்பினை திறந்துவிடும். இவ்வணுகுமுறை, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமத்துவத்தினை உறுதிசெய்யும் அனைவரையும் அரவணைத்து இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான முன்நிபந்தனையாகவிருக்கும். இது பெரும்பான்மையினர் – சிறுபான்மையினருக்கிடையிலான இடைவெளியை அகற்றுவதற்கான இன்றைய தேவையாகத் தோன்றுகிறது. அத்தகைய மாற்றம் மிக ஆழமாக துருவமயமாக்கப்பட்டுள்ள இலங்கையின் தேர்தல் அரசியலின் தன்மையை நிச்சயமாக நிலைமாற்ற உதவும். இதற்கு தெற்கு அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் மத்தியில் சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் அங்கீகரித்தல் ஏற்பட வேண்டும் என்பதுடன் சமூக – பொருளாதார மற்றும் அரசியல் விடயங்களில் சமத்துவம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு நிலைநாட்டப்படவும் வேண்டும். அதற்கான ஆணையினையே நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இலங்கையர்களும் சகல வேறுபாடுகளையும் மறந்து வழங்கியுள்ளனர்.
முடிவுரை
இலங்கையின் தேர்தல் அரசியல் மாற்றங்கண்டுள்ளது; அதுதொடர்ந்து மாற்றமுறும் என்ற முடிவுக்கு வரலாம். அரகலய (மக்கள் போராட்டம்) காரணமாக அரசியலில் இனவாதத்திற்கும் வகுப்புவாதத்திற்குமான முன்னுரிமை ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளது. அதன் தாக்கத்தினை ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தெளிவாக அவதானிக்க முடிந்தது. இலங்கையின் மத்தியதர வர்க்கம் அரசியல் ரீதியாக எழுச்சி பெற்றுள்ளது. இம்மாற்றம் சிறுபான்மையினர் உள்ளிட்ட ஏனைய சமூகத்தவர்கள் மத்தியிலும் பரவிச்சென்றுள்ளதனை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன – குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில். தேசிய மக்கள் சக்தி தமக்கு மக்கள் வழங்கியுள்ள மிகப்பெரிய ஆணையினை நன்கு புரிந்துக்கொண்டு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாயின், அது இலங்கையின் அரசியல் கலாசாரத்தை நிரந்தரமாக மாற்றியமைக்கக் கூடும். எனினும், இது நடைபெறுவதற்கு தேசிய மக்கள் சக்தி அதன் மக்கள் விடுதலை முன்னணி தோற்றுவாயிலிருந்து விடுபட்டு முன்னோக்கி நகர வேண்டியிருக்கும். முற்போக்கான கொள்கைகள் மற்றும் கருத்தியல்களை முன்னிறுத்தி செயற்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தி தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த திட்டங்களை யதார்த்தபூர்வமாக அடைவதற்கு பொதுத்தேர்தலில் ஆணைக்கிடைத்துள்ளது. தேசிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவம் செய்ய பல தொழில்வாண்மையாளர்கள் இம்முறை நாடாளுமன்றம் சென்றுள்ளார்கள். ஆகவே, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இவர்களின் இயலுமை, அறிவு மற்றும் நிபுணத்துவத்தினை முழுமையாக பயன்படுத்த முடியும். எனினும், தேர்தல் வாக்குறுதிகளுக்கும் யதார்த்த விளைவுகளுக்கும் இடையே எப்போதும் ஓர் இடைவெளி காணப்படும். இவ்விடைவெளி இயன்றவரை சிறியதாக இருக்க வேண்டும் – அது தேசிய மக்கள் சக்தியின் மக்கள் ஆதரவினைத் தொடர்ந்து பேண உதவும். தேசிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டங்கள் வெறுமனே ஒரு பொருளாதார மீட்சியாக மாத்திரமல்லாமல் மனித மேம்பாடு, சமூக நலன், ஜனநாயகம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறும் அரசாங்கம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
ரமேஷ் ராமசாமி மற்றும் எம்.எம். இஃஜாஸ்
அரசியல் விஞ்ஞானத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்