உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா என்பவர் தெரிவித்த சாட்சியங்கள் ஆராயப்படுமானால் உண்மைக் குற்றவாளிகளை,சூத்திரதாரிகளை கண்டுகொள்ள முடியும் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான ஸ்ரீநேசன், மயிலந்தனை, மாதவனையில் அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்பில் நீதிமன்றம் 3 தடவைகள் அளித்த தீர்ப்புகள் அமுல்படுத்தப்படாத நிலையில் இந்த ஆட்சியில் அங்கு சட்டவாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற கணக்கு வாக்குப்பதிவு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன உரையில் சட்டவாட்சியை பலப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
ஆகவே சட்டவாட்சி இங்கு பலவீனமாக இருக்கிறது என்பதனை அவர் உணர்ந்துள்ளார். சட்டவாட்சி பலவீனமாக இருந்த காரணத்தினால் பல குற்றச்செயல்கள் நடந்துள்ளன உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் கூட சட்டவாட்சியின் பலவீனத்தினால்தான் நடந்தது.
கடந்த காலத்தை எடுத்துக்கொண்டால் அதாவது மஹிந்த ராஜபக்ச ஆட்சி செய்த 2005 க்கும் 2015 க்கும் இடைப்பட்ட காலத்தை எடுத்துக்கொண்டால் அக்காலத்திற்குள் நடந்த படுகொலைகளைப்பற்றி சொல்லுவதாக இருந்தால் ஒருநாள் போதாது. 40 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்பை அழிப்பதற்காக ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைசெய்யப்பட்டார் ரவிராஜ், சந்திரநேரு சிவநேசன் போன்ற எமது எம்.பி.க்கள் படுகொலைசெய்யப்பட்டனர். கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தரான் ரவீந்திரநாத் படுகொலைசெய்யப்பட்டார் சிவராம் நடேசன் ஏக்னலிகொட, லசந்த என்ற ஊடகவியலார்கள் படுகொலை செய்யப்பட்டனர் .
ஆனால் இவற்றுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தண்டனைவழங்கப்படவில்லை. இதனால் நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா என்ற கேள்வி காணப்பட்டது. பணநாயகமே நாட்டை ஆட்சி செய்த்து. வீதிகள் எல்லாம் பிணங்கள் குவிந்து காணப்பட்டன.
எனவே பாரிய குற்றங்களை இழைத்து விட்டு கௌரவர்களாக ,தண்டிக்கப்படாதவர்களாக உலாவிவந்த அந்தக் குற்றவாளிகள் இந்த ஆட்சியில் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு முறையான தண்டனைகள் வழங்கப்படுவதன் மூலம் சட்டவாட்சியையோ பலப்படுத்த வேண்டும் .இவ்வாறு குற்றங்கள் புரிந்தவர்கள் ஒரு காலத்தில் இந்த பாராளுமன்றத்தைக்கூட அலங்கரித்திருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பாக ஆசாத் மௌலானா என்பவர் மிகவும் விபரமாக பல சாட்சியங்களை கூறியுள்ளார். அந்த சாட்சியங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அது சரியாக ஆராயப்படுமாக இருந்தால் குண்டுத்தாக்குதலுக்குரிய சூத்திரதாரிகள் யார் என்பதனை கண்டுகொள்ள முடியும்.
மயிலத்தமனை ,மாதவனை போன்ற பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் காணப்படுகின்றன ,மாவட்டம் கடந்து அவர்கள் குடியேறியுள்ளனர். அத்துமீறிகுடியேறிய அந்தக் குடியேறிகளை , காணிகளை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் 3 தடவைகள் தீர்ப்பளித்துள்ளது ,ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் அந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த ஆட்சியில் சட்டவாட்சி அங்கு
உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.