பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாவீரர் தினம் தொடர்பான பதிவுகள், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர், புலிகளின் சீருடையில் உள்ள புகைப்படங்களை தனது முகநூலில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் இணுவில் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.
இவரை யாழில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் சுமார் 48 மணிநேரம் தடுத்து வைத்து, விசாரணைகளை முன்னெடுத்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், இளைஞனை இன்று ஞாயிற்றுக்கிழமை (01) யாழ். நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அதனையடுத்து நீதவான் இளைஞனை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, கைது செய்யப்பட்ட, யாழ். நகர்ப் பகுதி மற்றும் பருத்தித்துறை பகுதிகளை சேர்ந்த ஏனைய இருவரிடமும் அவர்களது முகநூல் பதிவுகள் தொடர்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.