நோயாளிகளுக்கு வழங்கப்படும் சோடியம் பைகார்பனேட், இன்சுலின், இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் நிர்வாகத்தின் போது போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சுகாதார சேவையின் உயர் அதிகாரிகள் சிலர் இன்னும் அந்த பதவிகளில் இருப்பதாக சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சய தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சுகாதார சேவையின் உண்மையான பிரச்சினைகள் உரிய முறையில் தீர்க்கப்படுவதில்லை எனவும், எதிர்கால சுகாதார துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப இது பெரும் தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் சுகாதார அமைச்சரின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தரக்குறைவான மருந்துகளினால் மனித உயிர்கள் அழியும் போது, முன்னாள் சுகாதார அமைச்சருடன் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய அதிகாரிகள் இன்னமும் பதவிகளில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக கடந்த நிர்வாகத்தின் போது இந்த நாட்டில் சுகாதார அமைப்பு கடும் நெருக்கடிக்கு உள்ளாவதற்கு காரணமான அதிகாரிகளை நீக்கி குறித்த பதவிகளுக்கு உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றார்.
இதேவேளை, நாட்டில் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.