பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்காக எதிர்காலத்தில் வழக்கு தொடரப்படுவதை உறுதிசெய்வதற்காக ஐக்கிய நாடுகளின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் காணாமல்போனவர்கள் அலுவலகத்தை மாற்றுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்,நாட்டின் பல மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வை காணவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ( நவம்பர் 18) சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இலங்கை ஜனாதிபதியாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கும் சமீபத்தைய நாடாளுமன்ற தேர்தலில் உங்களின் கட்சியின் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்.
நீங்கள் கடும் சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளீர்கள் என நாங்கள் கருதுகின்றோம்.
உங்களது நடவடிக்கைகள் செயற்பாடுகள் , இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் எதிர்வரும் பல வருடங்களிற்கு தாக்கத்தினை செலுத்தப்போகின்றன.
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் என்பது உலகின் 90க்கும் அதிகமான நாடுகளில் பணியாற்றும்,சுயாதீனமான அரசசார்பற்ற அமைப்பாகும்.
1980கள் முதல் இலங்கையில் பலவந்தமாக காணாமல்செய்யப்படுதல்,உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடு முழுவதும் பணியாற்றியுள்ளோம்.
மேலும் 1983 முதல் 2009 வரையான உள்நாட்டு யுத்தத்தில் அனைத்துதரப்பினரும் இழைத்த துஸ்பிரயோகங்கள்,தற்போதைய பொருளாதார நெருக்கடி பொருளாதார சமூக உரிமைகளில் செலுத்தியுள்ள தாக்கம் போன்ற விடயங்களையும் நாங்கள் கையாண்டுள்ளோம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நீக்குவது,உட்பட நீண்டகால மனித உரிமை பிரச்சினைகளிற்கு தீர்வை காணப்போவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் வரவேற்கின்றோம்.
இந்த முன்னுரிமைக்குரிய விடயங்கள் குறித்து எதிர்காலத்தில் உங்களுடனும் உங்கள் அரசாங்கத்துடனும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஈடுபாட்டை பேணமுடியும் என எதிர்பார்க்கின்றோம்.
இலங்கையின் பல முக்கியமான மனித உரிமை விவகாரங்களிற்கு முன்னைய அரசாங்கங்கள் தீர்வை காணத்தவறியுள்ளன.
முன்னுரிமைக்குரிய விடயங்கள் என உங்கள் அரசாங்கம்,பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவுவதை நோக்கிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்,சிறுபான்மை சமூகத்தினரை , மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களை,சிவில் சமூகத்தினரை பாதுகாப்பு படையினர் இலக்கு வைக்கும் நடவடிக்கைகள் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் - குறிப்பாக வடக்குகிழக்கில்
மேலும் மனித உரிமை மீறல்கள் ஊழல்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
மேலே குறிடப்பட்டுள்ள சில விடயங்களிற்கு தீர்வை காண்பது குறித்து நீங்கள் உறுதிமொழியை வழங்கியுள்ளதை நாங்கள் வரவேற்கின்றோம்.
முன்னைய அரசாங்கங்கள் மனித உரிமைகள் தொடர்பான பல வாக்குறுதிகளை வழங்கின,பல விசாரணை ஆணைக்குழுக்களை அமைத்தன,சில சந்தர்ப்பங்களில் சர்வதேச நிபுணர்களை அழைத்தன,எனினும் அவை உண்மை பொறுப்புக்கூறல் இழப்பீடு ஆகியவை குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறியுள்ளன.
மேலும் எதிர்காலத்தில் மீறல்களை தடுக்க முயலும்,முறையான சட்ட அமுலாக்கல் சீர்திருத்தங்களை அவை முன்னெடுக்கவில்லை.
முன்னைய விசாரணை ஆணைக்குழுக்கள் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் உங்கள் அரசாங்கம் செயற்படவேண்டும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காணாமல்போனவர்கள் அலுவலகத்தை மாற்றுங்கள் அல்லது சீர்திருத்தவேண்டும் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை பெறக்கூடிய ,மனித புதைகுழிகளில் மீட்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளம் காணக்கூடிய தொழில்நுட்ப திறன் உள்ள அமைப்பொன்றை நியமிக்கவேண்டும்.
பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்காக எதிர்காலத்தில் வழக்கு தொடரப்படுவதை உறுதிசெய்வதற்காகஐக்கிய நாடுகளின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் .