கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விடுக்கப்படும் கோரிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் உதாசீனம் செய்கிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாவட்ட வைத்தியசாலைக்கு தகவல்களை அறிவதற்கான உரிமை சட்டத்தின் மூலம் கோரிக்கை விடுக்கப்படுகின்ற போது சட்டத்தில் விதந்துரைக்கப்பட்ட காலத்திற்குள் பதில் வழங்காமை, கோரிய தகவல்களை முழுமையாக வழங்காமை, சட்டத்திற்கு புறம்பாக சென்று தகவல்களை வழங்க மறுகின்றமை, போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதகாவும், இது தொடர்பில் குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு மேன் முறையீடு செய்கின்ற போதும் அங்கும் இதே போன்ற நடவடிக்கைகளே இடம்பெறுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஒருசிலர் தகவல் அறியும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த போதும் பலர் மேலதிக நடவடிக்கைகளுக்கு செல்லாது இருந்துவிடுகின்றனர்.
எனவே கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் பொது மக்களின் தகவல் அறியும் உரிமையை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.