ஜனநாயக ரீதியான வழிமுறைகளில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்களா?

'துயரங்களுக்கு வன்முறைகள் பதிலாகாது' மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்ட அவசர நிலை குறித்து மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், துணை மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள், நோயளர் காவு வண்டி சாரதிகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் இணைந்து வெள்ளிக்கிழமை (22) அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,

ஒரு இழப்பென்பது எந்தவிதத்திலும் தாங்க முடியாதது. காரண காரியங்கள் இருந்தாலும் அந்த இழப்பு எல்லோர் மனதையும் புண்படுத்தக் கூடியது.

ஒரு ஆரோக்கியமான சமூகம் அந்த இழப்பிற்குரிய குடும்பத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர்கள் அதிலிருந்து மீண்டு வரவும், ஏதும் பிழைகள் நிரூபிக்கப்பட்டு இருந்தால் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உதவ வேண்டும். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராடும் உரிமை உண்டு. ஆனால் எந்த போராட்டமும் அமைதியானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருக்க வேண்டும்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நடந்த தாய், சேய் மரணமானது சுகாதார அமைச்சினால் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு விடயம். அதை முழு மூச்சாக செய்ய மக்கள் போராடுவது அவர்களது உரிமை. வைத்தியசாலை ஊழியர்கள் அந்த சோகத்தோடு அதிர்ச்சியில் இருந்த வேளை வைத்திய சாலையை சுற்றி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நடந்த அசௌகரியமான சம்பவம் பின்வரும் கவலைக்கிடமான நிலைமைகளுக்கு வழிகோலி விட்டுள்ளது.

1.வைத்தியசாலை பணிகளுக்கும் மருத்துவ கடமைகளுக்குமான இடையூறுகள்

பிரசவ அறையை சுற்றி நடந்தது:-

50 க்கும் மேற்பட்டவர்கள் பிரசவ அறைக்குள் நுழைந்த பிரசவித்து கொண்டிருந்த இன்னொரு தாயின் அந்தரங்கத்தையும் அவருக்குரிய சேவையும் சீர் குலைத்தது.

பிரசவத்திற்காக பிரசவ அறைக்கு வர இருந்த இன்னுமோர் தாயை இந்த கூட்டம் பாதையை வழி மறித்து நின்றதால் அவரை ஸ்கான் அறையில் வைத்து பிரசவம் பார்த்த துர்ப்பாக்கிய நிலை. இது அந்த தாயையும் சேயையும் ஆபத்துக்குள்ளாயிருக்க கூடும்.

Caessarian  சத்திர சிகிச்சை முடித்துவிட்டு விடுதிக்கு கொண்டு வர இருந்த இன்னொரு தாயை விடுதிக்கு கொண்டு வந்து கவனிக்க விடாமல் இந்த குழுவால் அசம்பாவிதம் ஏற்பட்டது.

அன்றே இரட்டை குழந்தை பெற இருந்த இன்னொரு தாய் இந்த கலவரத்தை கண்டு பயந்து இவர்களால் விடுதி சூறையாடப் படலாம் எனப் பயந்து விடுதியை விட்டு அத்தியாவசியமான மருத்துவ கண்காணிப்பையும் மீறி வீடு செல்ல முற்பட்டமை.

அவசர Caesarian சத்திர சிகிச்சை செய்ய சத்திர சிகிச்சை கூடத்திட்குள் சென்று கொண்டிருந்த வைத்தியரை வழி மறித்து தாக்க முயன்றமை. இதனூடாக இன்னொரு தாயின் உயிரை பணயம் வைக்க முற்பட்டமை.

Preeclampsia எனும் உயிராபத்தை ஏற்படுத்தகூடிய நிலைமையுடன் அவசர சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணி தாயை பார்க்க சென்ற வைத்தியரை அச்சுறுத்தி அந்த தாயை ஆபத்துக்கு தள்ள முயன்றமை.

A&E எனப்படும் அவசர சிகிச்சை பகுதியில்

உலகத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் யுத்தத்தின் போதும் மதிப்பளிகின்ற நோயாளர் காவு வண்டியை வழி மறுத்து சேதப்படுத்த முயன்று மேலதிக சிகிச்சை பெற இருந்த நோயாளிகளை இன்னலுக்குள்ளாக்கியது.

அவசர நிலமைகள், உயிராபத்து நிலமைகளுடன் கூடிய நோயளர்கள் அவசர வைத்திய சிகிச்சையை நாட விடாமல் தடுத்தமை மூலம் சின்னம் சிறுவர்கள் உட்பட வேறு பல உயிர்களும் காவு கொள்ளப்படும் நிலை தோன்றியிருக்கும்.

2.வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பு கவலைக்கிடமாகியமை

மகப்பேற்று விடுதி தாதியர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் அவர்களின் பெயர்கள் சொல்லி அழைக்கப்பட்டு 'வெளியே வாருங்கள், உங்களை கொல்வோம் 'என்று உயிராபத்து அச்சுறுத்தல் விடுத்தமை.

Ambulance உதவியாளர் ஒருவரை தாக்குவதற்கு துரத்தி கொண்டு ஓடியமை.

பாதுகாப்பு ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை.

கடமையிலிருந்த வைத்தியர், தாதியர்களை அடாத்தாக புகைப்படம் எடுத்து தகாத வார்த்தைகளால் அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்தமை.

கடமையில் இருந்த  வைத்தியரை கடமையில் இருக்க விடாமல் வெளியே துரத்தி பய முறுத்தியமை.

தொலைபேசி பரிவர்த்தனை நிலைய ஊழியர்களுக்கு   அழைப்புகளை எடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியமை.

வைத்தியசாலை, பணிப்பாளரின் கௌரவத்தை தனிப்பட்ட ரீதியில் தாக்க முற்படுவது

மக்களின்,விலை மதிப்பற்ற அரச உடைமைகளை நாசம் செய்ய முற்பட்டமை

பிரசவ அறையின் கண்ணாடியை உடைத்தமை

பல மில்லியன் பெறுமதியான Monitor  களை தூக்கி போட்டு உடைக்க முயன்றமை. (அவை ஊழியர்களால் தடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன)

நோயாளர் கட்டில்கள் வேறு பல உடைமைகளை சேதமாக்க முற்பட்டமை.

அங்கீகரிக்கப்படாத அரசியல் தலையீடுகள்

தன்னை ஒரு கட்சியின் உறுப்பினர் என அடையாளப்படுத்திய ஒருவர் வைத்திய ஊழியர்களை மிரட்டி அநாகரிகமான முறையில் வாக்குமூலங்களை கோரியிருந்தார்.

இன்னொரு அரசியல் கட்சி உறுப்பினர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விபத்துக்கள் மற்றும் அவசர சேவை பிரிவு விடுதி  என்பவற்றில் மற்றைய நோயாளிகளின்,ஊழியர்களின்  Privacy கருத்தில் எடுக்காமல் ஒலிப்பதிவுகளை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அவை மக்களை பிழையான வழியில் தூண்டு பவையாக இருந்தது.

பிற அரசியல் வாதிகளும் உண்மை நிலவரங்களை ஆராய்ந்து மக்களை தெளிவுபடுத்தாமல் பிழையான வார்த்தை பிரயோகங்கள் உடன் மக்களின் உணர்ச்சி கொந்தளிப்பை தூண்டும் வகையில் பதிவுகள் இருகின்றமை.

இவ்வாறான கவலைக்கிடமான சம்பவங்களின் விளைவுகளாக வைத்தியசாலையின் ஒட்டுமொத்த ஊழியர்களுமே மனமுடைந்து செயலற்று போயிருக்கிறோம்.

நீங்கள் அறிந்தது போல வைத்திய சேவையை தரும் சேவையாளர்கள் சமப்பட்ட மனநிலை இருக்க வேண்டும் என்பது நியதி.

அவ்வாறு இல்லாவிட்டால் சேவை தளத்தில் உறுதியிராது. தற்சமயம் மேற்கண்ட சம்பவங்களால் ஒரு வினைதிறனான சேவை அல்லது மேலும் தரத்தை மேம்படுத்த முடியாத மனச்சுமையான நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எல்லாவற்றிக்கும் மேலாக தென்பகுதியில் இருந்து கடமைக்கு வரும் வைத்தியர்கள், தாதியர்கள் தங்களது பாதுகாப்பின்மையை உணர்கின்றார்கள். இந்த நிலமை பொருத்தமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இந்த நிலை மாறி இவ்வாறான ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளை விடுத்து எங்களை நாங்களே ஆசுவாசப்படுத்தி சேவையை தொடர மன்னார் மாவட்ட மக்களாகிய உங்கள் பங்களிப்பை எதிர்பார்த்தபடி நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

தாய் சேய் இறப்புக்கான காரணங்கள் நடுநிலையாக ஆராயப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். அதற்குரிய முழு ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்கி கொண்டிருக்கிறோம்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc