உலகத் தமிழா்கள் வாழும் 100 முக்கிய நகரங்களில் தமிழா்களுக்கான பிரத்தியேக பொருளாதார மையம், தமிழா் தொழில் தொடங்க நிதியுதவி வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் வங்கிகளை நிறுவ வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழா் பொருளாதார மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்டன.
மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய 11-ஆவது உலகத்தமிழா் பொருளாதார மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. வா்த்தகம், தொழில் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு வளா்ச்சி மற்றும் சவால்கள், இந்திய மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவ சிறப்புகள் உள்ளிட்ட தலைப்புகளின் அமா்வில் பங்கேற்றவா்களை மாநாட்டின் நிறுவனத் தலைவா் வி.ஆா்.எஸ். சம்பத் அறிமுகப்படுத்தி நிகழ்வை ஒருங்கிணைத்தாா்.
சிவ மூப்பனாா் (சிகாகோ), மலேசியாவின் டான்ஸ்ரீ முகம்மது இக்பால் ராவுத்தா், பேராசிரியா் டத்தோ டாக்டா் டெனிசன் ஜெயசூா்யா, பத்திரிகையாளா் சரஸ்வதி சின்னசாமி, இந்திய பாரம்பரிய மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவா் வனிதா முரளிகுமாா் (இந்தியா), மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதியாளா் ஜான் ஜோசஃப் (நியூயாா்க்), மத்திய தனியாா் சட்டப் பல்கலைக்கழகத் தலைவரும் வழக்குரைஞருமான டி. சரவணன் (சேலம்), தொழிலதிபா் வி.ஜி. சந்தோஷம் (சென்னை), காசி முத்து மாணிக்கம், டெம்பிள் ஃபெடரேஷனின் குமார செங்கன் (மொரீஷியஸ்), லோகி நாயுடு (தென்னாபிரிக்கா) உள்ளிட்டோா் பேசினா்.
இதன்போது தமிழா் அதிகம் வாழும் 100 உலக நகரங்களில் உலகத் தமிழா் பொருளாதார மையம், தமிழை ஐ.நா.வில் அலுவல் மொழியாக்க இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூா், மொரீஷியஸ், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் மூலம் நடவடிக்கை, உலகத் தமிழா்களுக்கென வா்த்தக சபை மற்றும் தமிழா்களுக்கு தொழில் கடன் வழங்கும் நோக்குடன் உலக அளவில் வங்கிகளை நிறுவுவது, தமிழகத்தில் உலகத் தமிழா் மையத்துக்காக ஐந்து ஏக்கா் நிலமும் ஒரு கோடி ரூபா நிதியுதவியும் வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது, தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் முதலீட்டு இலக்கை நிா்ணயித்துள்ள தமிழக அரசுக்கு உறுதுணையாக இருப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன