சுயநிர்ணய கோரிக்கை இனவாதம் அல்ல

தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்ததன் மூலம் வடபகுதி மக்கள் இனவாத்தை கைவிட்டுள்ளதாக ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். ஆனால் ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” ”மரபு வழித் தாயகம்” என்பதை உள்ளடக்கிய அரசியல் விடுதலைப் போராட்டம் 'இனவாதம்' அல்ல.

“இனவாதம்” என்பது ஒரு இனம் ஏனை இனங்களைவிட மேலானது என்ற உள்ளார்ந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” என்பது 'சுயநிர்ணய உரிமை' 'தேசம்' பற்றிய கோட்பாட்டுக்குள் அடங்கும்.

ஆகவே இவற்றை இனவாதம் என்றால் 'இலங்கை அரசு' என்ற கட்டமைப்பின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் பௌத்த சமய முன்னுரிமையும் தமிழ் - முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியாக - பிரதமராக பதவி வகிக்க முடியாத பின்னணிகளும் இனவாத நோக்கம் கொண்டவை என்று பொருள் கொள்ள முடியும் அல்லவா?

1945ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தின் போது, ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 1(2), 55(c) சரத்துகளில், 'சம உரிமை, மக்களின் சுயநிர்ணய உரிமை (Equal Rights and Self-Determination of Peoples) ஆகியவற்றின் அடிப்படையிலான தேசங்கள் பற்றிய சட்டவிளக்கம் உண்டு.

இலங்கைத்தீவில் 'சோசலிச சமத்துவம்' என்பதை அடிப்படையாகக் கொண்டு ஜேவிபி இரண்டு முறை அயுதப் போராட்டம் நடத்தித் தோல்வி கண்ட நிலையில், 1994ஆம் ஆண்டு முதல் முதல் ஜனநாயக வழியில் அரசியலுக்குள் நுழைந்தது. ஆனால் ஆரம்பகாலம் முதல் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பதை ஏற்க மறுத்திருந்தது.

இப் பின்னணியில் 2024ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் அறுதிப் பெரும்பான்மை கொண்ட நாடாளுமன்றத்துடனும் ஆட்சிக்கு வந்துள்ள ஜேவிபி எனப்படும் மக்கள் சக்தி தற்போது 'தேசம்' 'சுயநிர்ணய உரிமை' என்ற ஒரு இனத்தின் சுயமரியாதைக்குரிய கோட்பாடுகளை இனவாதமாகச் சித்தரிக்க முனைவது அரசியல் வேடிக்கை.

வெளிச் சக்திகளின் வற்புறுத்தல்கள் இன்றி, ஒரு இனக் குழுமம் தனது செயற்பாடுகளைத் தானே தெரிவு செய்துகொள்ளும் தத்துவமே சுயநிர்ண உரிமை என்பதன் மற்றுமொரு விளக்கம்.

தேசம் (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும்.

நாடு (Country) என்பது நிர்வாகத்துக்காக தோற்றுவிக்கப்பட்ட பகுதியாகும். உலகில் பல தேசங்களை கொண்ட நாடுகளும் உண்டு.

சங்க இலக்கியங்களில் தமிழ்த்தேசம் என்பதற்கு வரையறையாக ”மொழி” என்பதை மையமாக் கொண்டு சொல்லப்படுகிறது. பெரும்பாலும் தேசம் என்பதற்கு மொழி, மரபு, இனக்குழு, குடிவழக்கு போன்றவை ஒருங்கே அமையப்பெற்றதாக வரையறை வகுக்கப்படுகிறது.

வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலையை எடுத்துரைத்த திம்புக் கோட்பாட்டின் முதலாவது பகுதியானது 'இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்படுதல்' என்று சட்ட வியாக்கியாணம் செய்கிறது.

தேசம் என்ற சொல்லை வரைவிலக்கணம் செய்த சோவியத் யூனியனின் காம்யூனிஸ போராளியான ஜோசப் ஸ்டாலின், 'வரலாற்று ரீதியாகக் கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வெளிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த, நிலையான மக்கள் சமூகமொன்று, ஒரு தேசமாகும்' என்று வரையறுக்கிறார்.

குறிப்பாக பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வெளிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அம்சங்களை, ஒரு மக்கள் சமூகமானது, ஒரு தனித்த தேசமாக வரையறுக்க முடியும்.

ஒரு தேசத்தின் இருப்பு என்பது, 'நித்திய பொதுவாக்கெடுப்பு' என்று ஏனஸ்ட் றெனன் என்ற அறிஞன் வரையறுக்கிறார்.

இதனை மையமாக் கொண்டே வடக்குக் கிழக்கு இணைந்த தயாகம் என்பதற்கும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பதை அங்கீகரிக்கவும் பொதுவாக்கெடுப்பு ஒன்றை சிவில் சமூக அமைப்புகள் கோரி வருகின்றன.

'சர்வதேச சட்டத்தில், அங்கிகரிக்கப்பட்ட மூலாதாரங்கள், சுயநிர்ணய உரிமையானது பொதுவாக உள்ளகச் சுயநிர்ணய உரிமை மூலம் நிறைவேற்றப்படுவதாக நிறுவுகிறது” என்று கியூபெக் மாநிலத்தின் பிரிவினை தொடர்பான வழக்கில், கனடிய உச்சநீதிமன்றம் பொருள் கோடல் செய்துள்ளது.

ஆகவே இச் சர்வதேச சட்ட விளக்கங்களை எவருமே மறுக்க முடியாது. 1920 ஆம் ஆண்டு இலங்கைத் தேசிய இயக்கப்பிளவும் 1921 இல் உருவான தமிழர் மகா சபையுயும் சிங்கள - தமிழ் இன முரண்பாட்டின் ஆரம்பம்.

அன்றில் இருந்து இன்றுவரை உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியல் யாப்புக்களிலும் ஈழத்த் தமிழர்களின் சுயநிரிணய உரிமை மறுதலிக்கப்பட்டு வந்த பின்னணியில் அகிம்சைப் போராட்டங்களும் அதன் பின்னர் ஆயுதப் போராட்டங்களும் உருவெடுத்திருந்தன.

2009 மே மாதத்திற்குப் பின்னரான 15 ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக மறுதலிப்புகளே விஞ்சிக் காணப்பட்டன. இன நல்லிணக்கத்தை ஏற்கும் பொறுப்புக் கூறலில் இருந்து இலங்கை விலகிச் செல்கிறது என ஜெனீவா மனித உாிமைச் சபையும் குற்றம் சுமத்தியிருந்தது.

இப் பின்னணியில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் போது தமிழர்களின் ”தேசம்” ”சுயநிர்ணய உரிமை” மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய உரையாடல்கள் அனைத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனவாதமாகவே கருதும் என்றால், பொருளாதார நெருக்கடி பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது.

1948இல் இருந்து அரசியல் - பொருளாதார பொறிமுறைகள் வகுக்கப்பட்ட போது தமிழ் - முஸ்லிம் மக்கள் உள்வாங்கப்பட்டவில்லை. இதனால் எழுந்த 30 வருட போர் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என்கிறார் அசோக லியனகே என்ற பொருளியல் ஆய்வாளர்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc