இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழ் மக்களிடமிருந்து வடக்கு மாகாணம் பறிபோயுள்ள நிலையில் கடந்த தேர்தலில் பறி போயிருந்த கிழக்கு மாகாணம் தமிழ் மக்களினால் மீண்டும் கைப்பற்றப்படுள்ளது
கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி. ) 1 ஆசனத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1 ஆசனத்தையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1 ஆசனத்தையும் என 7 ஆசனங்களையும் கைப்பற்றி வடக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
அதே நேரம் வன்னிமாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 1ஆசனத்தையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1ஆசனத்தையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி ) 1ஆசனத்தையும் கைப்பற்றிய நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆதிக்கத்திலேயே வன்னி மாவட்டமும் இருந்தது.
அதே நேரம் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 4 ஆசனங்களில் இலங்கை தமிழரசுக்கட்சி ஒரு ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1ஆசனத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 ஆசனங்களில் இலங்கை தமிழரசு கட்சி 2 ஆசனங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 1 ஆசனத்தையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2 ஆசனத்தையும் திகாமடுல்ல மாவட்டத்தில் உள்ள 7 ஆசனங்களில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் தேசிய காங்கிரஸ் 1 ஆசனத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன
இதற்கமைய 2020 பாராளுமன்றத்தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இருந்த 13 ஆசனங்களில் தமிழ் கட்சிகள் 10 ஆசனங்களை கைப்பற்றியிருந்ததுடன் கிழக்கு மாகாணத்திலிருந்த 16 ஆசனங்களில் தமிழ் கட்சிகள் 4 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தன
இந்நிலையில் தான் வியாழக்கிழமை நடந்த பாராளுமன்றத்திற்கான தேர்தலில் வடக்கு மாகாணத்தில் உள்ள 12 ஆசனங்களில் தமிழ் கட்சிகள் 5 ஆசனங்களை மட்டும் கைப்பற்றி வடக்கு மாகாணத்தை தேசிய மக்கள் சக்தியிடம் பறிகொடுத்துள்ளன.
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள 16 ஆசனங்களில் கடந்த முறை 4 ஆசனங்களை தமிழ் கட்சிகள் கைப்பற்றியிருந்த நிலையில் இம்முறை இலங்கை தமிழரசுக்கட்சி தனியாக 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 ஆசனங்களில் இலங்கை தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களைக்கைப்பற்றி தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துள்ளதுடன் திருகோணமலையில் இரா.சம்பந்தனின் வெற்றிடத்தையும் நிரப்பியுள்ளதுடன் கடந்த முறை திகாமடுல்ல மாவட்டத்தில் பறிகொடுத்த தமிழர் பிரதிநிதித்துவத்தையும் இம்முறை தக்கவைத்துள்ளது