நஜீப் பின் கபூர்-
பல தசாப்தங்களாக நாம் இந்த நாட்டில் நடந்த பல தேர்தல்களை நேரடியாகப் பார்த்து வந்திருக்கின்றோம். இன்னும் பல தேர்தல்கள் பற்றிப் படித்தும் தெரிந்தும் கொண்டிருக்கின்றோம். அவை அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் இந்தத் தேர்தல் தலைகீழாக மாற்றி இருக்கின்றது. ஒரு பொதுத் தேர்தலில் ஒரு கட்சி அதிக ஆசனங்களை (159) கைப்பற்றி ஒரு சாதனை படைத்திருக்கின்றது. அதேபோன்று 21 தேர்தல் மாவட்டங்களை ஒரு அணி கைப்பற்றியது இதுதான் முதல் தடவை.மட்டக்களப்பு மாவட்டம் தமிழர் தரப்பு கைப்பற்றி இருக்கின்றது. இதற்கு முன்னர் மஹிந்த காலத்தில் 2020 ல் ராஜபக்ஸக்கள் 141 ஆசனங்களைக் கைப்பற்றி இருந்தனர். இது இன்று 159 என்ற வரலாற்று சாதனை படைத்திருக்கின்றது.
அதேபோன்று ஒரு கட்சி பெற்ற அதிகூடிய தேசியப் பட்டியலையும் (18) இவர்கள் பெற்றிருக்கின்றனர்.அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்த தேர்தல் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றது.பழைய நாடாளுமன்றத்தில் இருந்தவர்களில் ஒரு இருபத்தி ஐந்து பேர்தான் திரும்பி வந்திருக்கின்றனர். தமக்கு இந்த தேர்தலில் தாக்குப் பிடிக்க முடியாது என்று அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் தேர்தலுக்கு முன்னரே தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொண்டிருந்தனர்.
சுதந்திரத்துக்குப் பின்னர் வடக்கில் ஒரு தெற்கு அரசியல் கட்சி இந்தளவு ஆதிக்கம் செலுத்தியதும் இதுதான் முதல் முறை என்று நாம் நம்புகின்றோம்.தேர்தல் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கின்ற நேரம் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் அனுர மேற்கொண்ட தேர்தல் பரப்புரைகள் நாம் பார்த்த மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாக இருந்தது. இதனைக் கேட்ட-பார்த்த தமிழர்கள் அனுரவை மனதில் தமது ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டு இந்த மனிதனை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டனர்.
இந்த முறை பிரதமர் ஹிருணி 6,55,289 வாக்குகளைப் பெற்றுச் சாதனை படைத்திருக்கின்றார். கம்பஹாவில் போட்டியிட்ட விஜித ஹேரத் மிக அதிகமான விருப்பு வாக்கை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கின்றார். அந்த எண்ணிக்கை 7,16,715. கண்டியில் லால் காந்த, குருணாகல் நாமல் ராஜகருணா போன்றவர்கள் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கின்றார்கள். இதற்கு மத்தியில் புதிய பல இளம் தலைமுறையினர் களத்துக்கு வந்து அதிரடி காட்டி இருக்கின்றனர்.
கிட்டத்தட்ட ஒரு டசனுக்கு மேற்பட்ட பெண்கள் என்.பி.பி. தரப்பில் இந்த முறை நாடாளுமன்றம் போக இருக்கின்றார்கள். தமிழர்கள், முஸ்லிம்கள் என்று நாட்டில் நாலா புறங்களில் இருந்தும் தமிழ், முஸ்லிம் உறுப்பினர் தெரிவாகி இருக்கின்றனர். மலையகத்தில் இருந்தும் பலர் தெரிவாகி இருக்கின்றார்கள்.
மாத்தறையில் அக்கரம் என்ற ஒரு இளைஞர் தெரிவாகி இருக்கின்றார். ஆனால் அங்கு ஒரு இருபத்தி ஐந்து ஆயிரம் வரையிலான முஸ்லிம் வாக்காளர்கள்தான் இருக்கின்றார்கள். ஆனால் அக்ரம் அதனை விட இரு மடங்கு அதிக வாக்குப் பெற்று மாத்தறையில் வெற்றி பெற்றிருக்கின்றார். இவருக்கு சிங்கள, தமிழ் சமூகத்தினர் அதிகளவில் வாக்களித்திருக்கின்றனர். அதேபோன்று பதுளையில் மலையக கிரீட்னன் மற்றும் அம்பிகாவுக்கும் அப்படி பெரும்பான்மை வாக்குகள் கிடைத்து அவர்களும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.
நமது பத்தாவது பாராளுமன்றத் தேர்தல் முடிந்துள்ள இந்த நேரத்தில் நாட்டு மக்களின் அடுத்த எதிர்பார்ப்பாக இருப்பது யார் சபாநாயகர், யாருக்கெல்லாம் அமைச்சுக்கள், பிரதி அமைச்சுக்கள் கொடுக்கப்படும் என்பதாக இருக்கின்றது.நிச்சயம் இதில் பல புதுமைகளும் வரலாற்றுப் பதிவுகளும் அமையும் என்பதனை நாம் முன்கூட்டிச் சொல்ல முடியும். அமைச்சரவையில் இருபத்தி ஐந்துக்கும் குறைந்த எண்ணிக்கை என்பது ஏற்கெனவே உறுதி கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதே எண்ணிக்கையில் உதவி அமைச்சர்களும் இருப்பார்கள்.
கடந்த அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அமைகின்ற மிகவும் செலவு குறைந்த பாராளுமன்றமாக இது அமையும். இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் நிறையவே சிக்கனங்கள் கடைப்பிடிக்கப்படும். மக்கள் பிரதிநிதிகள் என்போர் கடந்த காலங்களில் ஏதோ இந்த நாட்டில் இருக்கின்ற நீதித் துறைச் சட்டதிட்டங்களுக்கு அப்பால் பட்டவர்கள் என்ற ஒரு நிலை இந்த நாட்டில் இருந்தது. அவர்கள் நீதியைக் கையில் எடுத்து கடந்த காலங்களில் பார்த்த அட்டகாசங்கள் எந்தளவு மக்கள் மத்தியில் வெறுக்கப்பட்டிருக்கின்றது – நிராகரிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகள் நல்ல சான்றாக இருக்கின்றது.மக்கள் ஒரு வெறியில் இருந்திருப்பது தெளிவாக பார்க்க முடிகின்றது.
வெற்றி பெற்றிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகன வசதி என்ற பேச்சுக்கே இடமிருகாது. நூறு கிலோ மீற்றர்களுக்கு மேற்பட்ட தூரத்தில் இருந்து நாடாளுமன்றம் வருகின்ற உறுப்பினர்களுக்கு தங்கு வசதிகள் கிடைக்கும். அதற்குக் குறைவான தூரங்களில் இருந்து வரும் உறுப்பினர்களுக்கு பொது பிரயாண வசதி என்ற ஒரு ஒழுங்கு முறை கடைப்பிடிக்கப்படும். உதாரணத்துக்கு கண்டியில் இருந்து நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளும் ஆளும் எதிரணி உறுப்பினர்களுக்கு பொதுவான பிரயாண வசதி. இடையில் இருக்கும் கேகாலை போன்ற உறுப்பினர்களும் அதனை பயன்படுத்திக் கொள்ளும் ஏற்பாடு போன்றவை ஆலோசிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் தமது குடும்ப உறுப்பினர்களை பதவிக்கு அமர்த்தி வருமானம் ஈட்டுகின்ற ஒரு இடமாக நாடாளுமன்றம் செயல்பட்டு வந்தது. ஆனால் இந்தமுறை தமது குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சுகளின் ஆளணியில் வாய்ப்புக்கள் கிடைக்காது. அதற்குப் பொருத்தமானவர்கள் வெளியில் இருந்து அடையாளம் காணப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள். அப்படி நியமனம் செய்யப்படுபவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்தது போல கட்டு மீறிய வசதி வாய்ப்புகள் கிடைக்காது என்பதும் உறுதி. இதற்கு ஜனாதிபதி அனுரவும் பிரதமர் ஹிருணியும் நல்ல முன்னுதாரணங்களாக நடந்து கொண்டு வருகின்றனர்.
அமைச்சுக்கள் புவியியல் விஞ்ஞான அடிப்படையில் ஏற்கெனவே இனம் காணப்பட்டிருக்கின்றன. தனி மனிதர்களைத் திருப்திப்படுத்துவதற்காக இங்கு அமைச்சர்களுக்கு நியமனம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.மஹிந்த காலத்தில் பொறுப்புக்கள் இல்லாத பல அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு இவர்களுக்கு வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. இது எல்லாம் யார் வீட்டு காசு? நாடு நெருக்கடியான பொருளாதார சிக்கல்களுக்கு இலக்காகி இருக்கின்ற இந்த நேரத்தில் முதலில் ஆட்சியாளர்கள் முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு கொள்கையில்தான் இந்த அரசு பயணிக்க முனைகின்றது. இதனை சிலருக்கு ஜீரணித்துக் கொள்ள சற்று சிக்கலாகத்தான் இருக்கும்.
வன்முறை அற்ற தேர்தலாக இது அமைவதற்கு அதிகாரத்தில் இருக்கின்ற கட்சி கடைப்பிடிக்கின்ற மென்போக்குத் தான் அடிப்படைக் காரணம். கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருப்போர் ஏனைய கட்சிகளை அடக்கி தமது அதிகாரத்தை செலுத்த முனைகின்ற போதுதான் அதிகமான வன்முறைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த முறை ஜனாதிபதி அனுர தலைமையிலான அணி நாட்டில் அமைதியான தேர்தலுக்கு வழி சமைத்திருப்பதுடன், சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்படுவதும் அமைதிக்கு மற்றுமொரு காரணம் என்றும் இதனை எடுத்துக் கொள்ள முடியும். அதனால் பொலிஸ் தனது கடமைகளைப் பக்கச்சார்பின்றி மேற்கொண்டு வருகின்றது.
கடந்த பொதுத் தேர்தலில் நாட்டில் இரண்டு இலட்சம் வரையிலான தேர்தல் பணிமனைகளை – செயலகங்களை கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் அமைத்திருந்தன. ஆனால் இந்த முறை அது எட்டு ஆயிரம் (8000) என்ற அளவுக்குக் குறைந்திருக்கின்றது.பொதுவாக பெரும்பான்மை சமூகத்தினர் வாழ்கின்ற பிரதேசங்களில் எதிர்க்கட்சி தேர்தல் காரியாலயங்களை கண்டு கொள்ள முடியவில்லை. அவர்கள் ஏறக்குறைய போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கின்ற ஒரு நிலை காணப்படுகின்றது.அதற்கு நல்ல உதாரணம்தான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் கொழும்புக்கு வெளியில் ஒரே ஒரு கூட்டத்தை மட்டும் கம்பஹாவில் நடத்தி இருந்தார்.
அத்துடன், 8388 வேட்பாளர்கள் தேர்தல் போட்டிக்கு வந்தாலும் அவர்களில் ஏழு (7000) ஆயிரம் பேர்வரை போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே ஆயிரத்துக்கும் சற்று அதிகமான எண்ணிக்கையானவர்கள்தான் கோதாவில் நின்றிருக்கின்றார்கள். இதுவும் கட்சிக் காரியாலயங்கள் திறக்கப்படாமைக்கும் தேர்தல் சூடுபிடிக்காமைக்கும் முக்கிய காரணங்களாக நாம் மதிப்பீடு செய்கின்றோம். தேர்தலுக்கு முன்னர் என்.பி.பி. வேட்பாளர்களை யாருக்கும் தெரியாது என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அதற்கு இதற்கு முன்னர் நாம் பதில் கொடுத்திருந்தோம். அப்படி இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டுக்களை மக்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே ஏற்கெனவே இருந்த அரசியல்வாதிகளை விரட்டியடிக்க வேண்டும் என்ற வெறியில்தான் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.
பேரணிகளில் ஜனாதிபதி அனுர பேசுகின்ற போது இந்த நாட்டில் புரையோடிப் போய் இருக்கின்ற தவறுகளை திருத்தி மக்களுக்கு நல்ல பணிகள் புரிய எனக்கு பலமான ஒரு நாடாளுமன்றத்தை பெற்றுத் தாருங்கள் என்று அவர் மக்களிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் இப்படி மூன்றில் இரண்டை அவர் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். அது அப்படி இருக்க தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற போது எதிரணியில் இருந்த பல அரசியல்வாதிகள் குறிப்பாக கட்சித் தலைவர்கள் கதறி அழுதிருக்கின்றனர். தலைவர் கண்ணீர் சிந்துவதைப் பார்த்த அவரது விசிறிகள் அங்கு ஒப்பாரி வைத்து அழுதிருக்கின்றனர். இவர்கள் கூலிக்கு ஒப்பாரி வைத்தார்களா அல்லது தலைவர்கள் மீதுள்ள பாசத்தில் கதறினார்களா என்பது நமக்குத் தெரியாது.
அப்படி தனக்குத் தோல்விதான் என்று நம்பிய ஒரு தலைவர் அதிர்ஷ்டவசமாக தொங்கிக் கொண்டு வந்திருக்கின்றார். ஆனால் கிடைத்திருக்கின்ற வாக்கில் மக்கள் எந்தளவுக்கு தன்னை வெறுத்திருக்கின்றார்கள் என்பதும் அவர்களுக்கு தேர்தல் முடிவில் தெரிந்திருக்கும். சிறுபான்மை சமூகத்தினர் மிக அதிகளவில் அனுர தரப்புக்கு வாக்குகளை அள்ளிக் கொட்டியதால்தான் இந்த சேதாரம் நடந்திருக்கின்றது. இதில் அடிபட்டுப் போன ஒரு தலைவர்தான் மனோ கணேசன். அவருக்கு தேசியப் பட்டியல் கொடுக்கக்கூடும் என்றும் ஒரு கதை. ஆனால் ஐந்து தேசியப் பட்டியலை எப்படிப் பங்கீடு செய்வது என்பதுதான் இப்போது கேள்வி.
சஜித் அணியில் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, டலஸ், ஜீ.எல்., சுஜீவ மீதமுள்ள ஒரு ஆசனத்துக்கு யாரை நியமிப்பது? சிறுபான்மையினரில் யாருக்குக் கொடுப்பது? மொட்டுக் கட்சியில் நாமல் வருவார். ரணில் அணியில் ரவி, வஜிர வரக்கூடும். திலித்தும் நிச்சயம் தேசிய பட்டியலில் வருவார். மு.கா.வுக்கு கிடைத்திருக்கின்ற தேசியப் பட்டியலில் ஹரிஸுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு என்ன நடக்கும் என்பதுதான் இப்போது கேள்வி. ஆனால் கல்முனையில் திசைகாட்டிக்கு கிடைத்த வாக்கை காரணம் காட்டி அதற்கு ஆப்பு வைக்கப்படலாம் என்று நாம் நம்புகின்றோம்.
ஆளும் தரப்புக்கும் எதிரணிக்கும் இடையில் வாக்கு வித்தியாசம் ஐம்பது இலட்சம் அல்லது ஐந்து மில்லியன்கள்.! இந்தளவுக்கு வாக்கு வித்தியாசத்தில் ஒரு எதிரணி பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதும் வரலாற்றில் முதல் முறையாக இருக்கலாம்.