நடராஜ ஜனகன்
பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில், ஆளும் கட்சியில் எதிர்பார்ப்புகளையும் எதிரணியின் விமர்சனங்களையும் மேற்படி தேர்தல் முடிவுகள் தீர்மானம் செலுத்தும் பிரதான காரணியாக அமையப்போகிறது.
நடந்து முடிந்துள்ள எம்பிலிப்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு அரசாங்கத்திற்கு பெரிய அளவில் சாதகமான கருத்துக்கணிப்பை வழங்கவில்லை. 48 விகிதத்திற்கும் குறைவான வாக்குகளையே அரசாங்கம் மேற்படி தேர்தலில் பெற்றிருக்கிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 58 விகிதமான மக்கள் புதிய ஜனாதிபதிக்கு எதிராகவே தமது வாக்குகளை பதிவு செய்திருக்கும் நிலையில் எம்பிலிபிட்டிய தேர்தல் முடிவும் நம்பிக்கை தரும் முடிவாக அமையவில்லை.அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட இருந்த வேதன உயர்வு தொடர்பான விடயத்தில் ஆட்சியாளர் பின்னடித்தமை எதிரணியினரின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தில் அமர்வதற்கு ஜனாதிபதி தேர்தலில் அரச ஊழியர்களின் வாக்குகள் பெரிய அளவில் உறுதுணையாக அமைந்திருந்தது. தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் அரச ஊழியருக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேதன மறுபரிசீலனை செய்யப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியிருந்த நிலையில் அந்த வாக்குறுதியானது தற்போது முற்றாகவே கரைந்து போன நிலை காணப்படுகிறது.
புதிய ஆட்சியாளர்களை தொழிற்சங்க தலைமைகள், மாணவ அமைப்புகள், சிவில் அமைப்புகளின் பிரதானிகள் அடுத்த வரவு – செலவு திட்டம் வரை பொறுமை காத்து நிற்கின்றனர். முன்னைய ஆட்சியின் போது தமக்கான கோரிக்கைகளை முன்வைத்து தினம் தினம் போராட்டங்களை முன்னெடுத்து வந்த இவர்கள் தற்போது கருத்துக்கள் எதனையும் பதிவு செய்யாமல் பொறுமை காத்து வருகின்றனர். ஆனாலும் புகையிரத சேவை அதிபர்கள் சங்கத்தினர் மீண்டும் போராட்டத்தில் இறங்கி இருக்கும் நிலை தோற்றம் பெற்றிருக்கிறது. எனவே நடைபெறப் போகும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினர் போதியளவு அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை காணப்படுகிறது.
இதேநேரம் மக்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கைச் செலவு சுமையை குறைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கான வேதன உயர்வுகள் வழங்கப்பட்டே ஆக வேண்டும். இவற்றுக்கான நிதி வருமானத்தை எப்படி பெற போகின்றார்கள் என்பது கேள்விக்குறியே .ஏற்கனவே பணத்தை அச்சடித்துள்ளார்கள், கடன்களைப் பெற்றுள்ளார்கள் என்ற விமர்சனங்கள் மேல் வந்திருக்கும் நிலையில், புதிய அரசாங்கத்தின் நிதியீட்டல் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது ஆய்வு அறிக்கை முழுமை பெற்ற பின்னரே நான்காம் கட்ட கடன் தொகையை பெற்றுக் கொள்ள முடியும். அந்த விடயம் இன்னமும் முற்றுப் பெறாத நிலையே காணப்படுகிறது.
புதிய ஆட்சியாளர் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக உறவு முறையில் சிக்கல்கள் வராமல் பார்த்துக் கொண்டாலும் ஈரான், மியன்மார், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுடன் தொடர்புகளை பேணுவதிலும் ஆர்வத்தை காட்டுவதால் சிக்கல் நிலைகள் உருவாகலாம்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலிருந்த ஆட்சியில் ரணிலின் நகர்வுகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளாது. ஏன் என்றால் ரணில் விக்ரமசிங்க தமது பிரதானி என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் தேசிய மக்களின் சக்தி நிலை அதுவல்ல. பூகோள அரசியல் முகாம் இரண்டு அணியாக பிரிந்து நிற்கின்ற இந்தக் காலகட்டத்தில் அதிக பொருளாதார சவால்களை கொண்டிருக்கும் சின்னஞ்சிறிய தேசமான இலங்கை ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டிய நிலையில் காணப்படுகிறது.
தமிழர் தேசத்தைப் பொறுத்தவரையில் தேசிய மக்கள் சக்தியின் மீது வைத்திருந்த நம்பிக்கைகள் தகரத் தொடங்கியுள்ளது. பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டு வரும் முன்னுரிமை கூடியிருக்கின்றதே தவிர குறையும் நிலை தென்படவில்லை. அவர்களது பிரச்சார மேடைகளில் கூட பௌத்த துறவிகளின் அதிக பிரசன்னத்தை காணக்கூடியதாக இருக்கின்றது. மேலும் அரசியலமைப்பின் 13 வது திருத்தம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைவர்களில் பிரதானமானவரான ரில்வின் சில்வா வெளிப்படுத்திய கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிக விமர்சனங்களை உருவாக்கியுள்ளன. மேலும் புதிய ஆட்சியில் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை பேரவை தீர்மானம் தொடர்பில் வெளிப்படுத்தியிருக்கும் நிலைப்பாடுகள் நம்பிக்கை எதனையும் வழங்காத நிலையே ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட மாட்டாது என்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அறிவிப்பு அவர்கள் மீதிருந்த சொற்ப நம்பிக்கையையும் துடைத்தெறிந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இவர்களின் ஆட்சியில் கூட மண்டதீவில் தனியார் காணியை அரசு தரப்பினர் தமதாக்க அளவீடு செய்யும் முயற்சிகளை மேற்கொண்டபோது தமிழ் அரசியல் பிரதானிகளும் மக்களும் தெரிவித்த கடும் எதிர்ப்பால் மேற்படி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே புதிய ஆட்சியில் நில விடுவிப்புக்கு தயாரில்லை. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை.காணாமல் போனோருகு பதிலில்லை இத்தகைய சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் எட்டாக்கனியாகவே மாறியுள்ளது.
இத்தகைய சவால் மிக்க தருணத்தில் ஒன்றிணைந்த செயற்பாட்டை நோக்கி தமிழர் தேசம் நகராமல் வெறும் பாராளுமன்ற ஆசனங்களை பெற அந்த முறைமையில் உள்ள வரப்பிரசாதங்களை அனுபவிக்க நூற்றுக்கணக்கானவர்கள் களத்தில் நிற்கின்றனர். இதற்காக ஊடகங்களில் இலட்சக்கணக்கில் செலவுகளை செய்து விளம்பரங்களை வெளிப்படுத்தி தமது வெற்றியை பெற பகிரத பிரயத்தனங்களை செய்து வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போரில் அனைத்தையும் இழந்த மக்கள் போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும் எதனையும் பெற்றுக்கொள்ளாத வடக்கு கிழக்கு மக்களின் துயரத்தை துடைக்க எத்தகைய வழி வகைகளையும் செய்ய முன்வராத இவர்கள் வடக்கு, கிழக்கில் உள்ள 20 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்வதற்காக எண்ணற்றவர்கள் களத்தில் நிற்பது வேதனை தரும் நிலையாகும். தேர்தல் முடிந்தவுடன் அனைவரும் தலைமறைவாகிவிடுவார்கள் என்பது மட்டும் உண்மை நிலையாகும்