Bootstrap

ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் விசாரணைகளை தவறாக வழி நடத்த மூளையில்லாத கூத்தாடிகளின் முட்டாள் தனமான நாடகங்கள்...!

இலங்கையில் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் ஏப்ரல் 21 , 2019 அன்று நடத்தப்பட்டு சுமார் 29 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ராஜபக்சே சார்பு புலனாய்வு சேவையின் பல உறுப்பினர்கள் தலைமையிலான குழுவினர் இணைந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் சஹரான் உள்ளிட்ட தீவிரவாதக் குழுவினர் ஊடாக இந்த கொலைவெறி தாக்குதல்கள்  நடத்தப்பட்டது என்பதை நாட்டின் பெரும்பான்மை மக்கள் மற்றும் சர்வதேச சமூகம் ஒப்புக் கொள்கிறது. இந்த தீய செயற்பாட்டிற்கு சர்வதேச எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

கோத்தபாய மற்றும் சிறிசேனவின் கைகளில் ஞாயிறு தாக்குதல் இரத்தம்...

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிட்டத்தட்ட 300 நிராயுதபாணிகளான கத்தோலிக்க பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் உயிர்களைக் காவு கொன்ற காட்டு மிராண்டித்தனமான இந்த தாக்குதல், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பல பாதுகாப்புத் தரப்பு பிரதானிகளின் ஒத்துழைப்புடன் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் முன் நிறுத்தி அரசியல் அதிகாரத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு இரகசிய சதியே ஞாயிறு தாக்குதலாகும்.

அதன்படி, ஞாயிறு தாக்குதல் கொடூரமான கொலைகளால் சிந்தப்பட்ட இரத்தம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கைகளில் படிந்து உள்ளது.

இவ்வாறு கூறுவதற்கு காரணங்கள் இல்லாமலும் இல்லை. ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் 22 தொகுதிகளில் உள்ள தகவல்களைக் கவனிப்பதன் மூலமும் அந்த அறிக்கையில் மறைக்கப்பட்டுள்ள ஏனைய பக்கங்கள் பற்றி ஆராயும் போதும் இது உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த உண்மையை உறுதிப்படுத்தும் பல காரணிகள் உள்ளன. இந்த மர்மத்தை அவிழ்க்கக்கூடிய வலுவான ஆதாரங்களில் ஒன்றை இன்று நாம் வெளிப்படுத்துகிறோம்.

மேலும், தாக்குதலுக்கு முன்னும் தாக்குதலின் பின்னும் புலனாய்வு பிரிவினர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி சூட்சமமான முறையில் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கும் தப்பிக்கச் செய்வதற்கும் பல வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் ஞாயிறு தாக்குதல் போன்ற மற்றும் ஒரு தாக்குதல் நடக்கக் கூடும் என்று தற்போது பரப்பப்படும் கதையும் இந்த அரசாங்கத்தின் ஏற்பாடே ஆகும். ஞாயறு தாக்குதல் சம்பவத்தை மூடி மறைக்கவென மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றி பிரிவினைவாத தீயை மூட்டி ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை மூடி மறைக்க எடுக்கும் முயற்சிகளை நாம் இன்று அம்பலப்படுத்துகிறோம்.

நிகழ் காலத்துடன் பொருந்தும் கடந்த கால கதை ..

2016 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்த  போது வடக்கில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி உட்பட பல பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி தொடர்பில் தவறான கதை திடீரென பரப்பப்பட்டது. அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடைகள், சுவரொட்டிகள் என மற்றும் பல விளம்பர டிவிடிகள் இப் பகுதியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போதைய காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) அணியினருக்கு இது ஒரு சுவாரஸ்யமான கதையாகவே இருந்தது. அதனை அவர்கள் தலைப்பாக மாற்றினர்.

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய  ' வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சி ' கதை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது.

ஆனால், மைத்திரிபால சிறிசேன முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் இந்த விடயம் குறித்து விசாரணைகள் எதற்கும் உத்தரவு பிறப்பிக்காமல் கண்டு கொள்ளவில்லை.

அதே வாரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி என்ற தலைப்பிலான விடயம் குறித்து அமைச்சரவை கூட்டத்திலும் கடுமையாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதனை கண்டு கொள்ளாது கோபமாக பதிலளித்தார்.

நாலக்க சில்வாவிடம் மாட்டிய உண்மை...

பின்னர், பயங்கரவாத புலனாய்வு பிரிவின் (ரிஐடி) பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தலைமையில் இது குறித்து இரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

அதன்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீள் எழுச்சி ' கதை ' ஒரு சதி என்று விசாரணையில் தெரிய வந்தது. மேலும், அந்த சதி கதை சோடிப்பிற்குப் பின்னால் இராணுவ புலனாய்வு குழு ஒன்று இருப்பதுவும் தெரிய வந்தது. அப்போதைய இராணுவ புலனாய்வு பிரிவு தலைவராக இருந்த தற்போதைய அரச புலனாய்வு பிரிவு பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி ( அப்போது பிரிகேடியர் )  உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு மற்றொரு ராணுவ அதிகாரி அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டார். அப்போதைய அரச புலனாய்வுத் பிரிவு பொறுப்பாளராக இருந்த நிலந்த ஜெயவர்த்தனவும் பொய்யான ' கதையை ' உருவாக்கியதாகக் கூறப்பட்டது. ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்தும் அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காது குண்டு வெடிப்பு நடக்கும் வரை அமைதியாக இருந்தார் நிலந்த.  காரணம் அவருக்கும் புலனாய்வு குழுவுடன் ரகசிய உறவு இருந்தது. அரச புலனாய்வு பிரிவு தலைவராக இருந்த நிலந்த ஜெயவர்த்தன, ராஜபக்ஷக்களின் அரசியல் நலன்களுக்கு இரகசியமாக உதவி செய்தார்.

நிலந்த ஜெயவர்த்தன, நாலக்க சில்வாவை பழிவாங்கிய விதம்...

எவ்வாறாயினும், பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பில் இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவின் விசாரணைக்குப் பிறகு, முன்னாள் அரச உளவுத்துறை பொறுப்பாளர் நிலந்த ஜெயவர்த்தன தனக்கு உள்ள இராணுவ உளவுத் துறையுடனான தொடர்புகளை வெளிப்படுத்தியதால் கோபமடைந்தார். இந்த நிலையில் நிலந்த ஜெயவர்த்தன மற்றும் டிஐஜி நாலக்க சில்வா இடையேயான மோதல் மேலும் விரிவடைந்தது.

இதன் விளைவாக நாலக்க சில்வா மீது தொடர் சேறு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த நேரத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்த சமன் திஸாநாயக்கவின் உதவியுடன், சலுகைகளுக்கு பின் செல்லும் லங்கா தீப, திவயின உட்பட சில ஊடகங்களின் ஆசிரியர்களின் ஈடுபாட்டோடு நாலக்க சில்வாவிற்கு எதிரான சேறு பூசும் பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. வாசகர்களே, உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறோம், நாலக்க சில்வா பொலிஸ் துறையில் சேர்வதற்கு போலி சான்றிதழ்களை சமர்பித்தார் என்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அக்டோபர் 2018 க்கு பிறகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இடையே ஏற்பட்ட அரசியல் பிளவை பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவை பழிவாங்க நிலந்த ஜெயவர்த்தன  பயன்படுத்தினார். அந்த சமயத்தில் நாலக்க சில்வா சஹரானை கைது செய்ய ஒரு இரகசிய திட்டத்தை தொடங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமல் குமார என்ற ஒரு முட்டாளை களத்தில் இறக்கி மிகவும் நுட்பமான முறையில் நாடகத்தை அரங்கேற்றிய நிலந்த ஜெயவர்த்தன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்படுவதாகவும் அந்த விடயத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா மீது அபத்தமான குற்றச்சாட்டினை சுமத்தி நாலக்க சில்வாவை சிறையில் அடைத்தார். ஆனால் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் கொடூரமாக மக்கள் கொல்லப்பட்டு ஆட்சி அதிகாரம் மாறிய பின் கொலை சதி தொடர்பான போலி நாடகம் முடிவுக்கு வந்தது.

நாலக்க சில்வா சஹரானை கைது செய்திருந்தால்...

அந்த நேரத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா சஹரான் ஹாசிமை கைது செய்து  விசாரணையைத் தொடங்கி இருந்தால் இந்த ' ஐ எஸ் ஐ எஸ் ' பயங்கரவாதத் தாக்குதல் என்று அழைக்கப்படும் கூட்டுச் சதியின் அனைத்து விவரங்களும் தெரிய வந்திருக்கும். அது மாத்திரமன்றி இலங்கையர்கள் மற்றும் முழு உலகத்திற்கும் உண்மை வௌிப்பட்டிருக்கும்.  அதை விட,  குண்டுத் தாக்குதல்களால் எங்களை விட்டு பிரிந்த குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் இன்று நம்மிடையே வாழ்ந்திருப்பார்கள்.

ராஜபக்சே குடும்ப அரசியலுக்கு ஆதரவான பல உளவுத் துறை அதிகாரிகளின் குழு எதிர் காலத்தில் வேறு பல நாடகங்களை அரங்கேற்றி நடிப்பதற்கு தயாராக வருகிறார்கள் என்பதை நாம் முன் கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம். ,அந்த நாடகத்தின் ஒவ்வொரு பக்கங்களே இன்று ஆங்காங்கே பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நாட்களில் அரங்கேற்றி விளையாடப்படும் நாடகங்கள்...

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முற்றிலுமாக நாசப்படு திசை திருப்பியுள்ள தற்போதைய அரசாங்கம், தனது சொந்த தேவைகளுக்காக இந்த 'நாடகங்களை' நிகழ்த்துவதன் மூலம் இந்த மனிதாபிமானமற்ற காட்டு மிராண்டித் தனமான தாக்குதலுடன் தனக்குள்ள நேரடி தொடர்பை வெளிப்படுத்துகிறது.

அது மட்டுமின்றி, பொது மக்களின் அழுத்தத்தை எதிர் கொண்டு அதன் மூளை தீப்பிடித்து எரிவதை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது இந்த பைத்தியக்காரத் தனமான விளையாட்டுகளை அரங்கேற்றி வருகிறது.

இதில் சீருடை அணிந்த கடற்படை அதிகாரிகள் ராகம, போபிட்டிய மற்றும் வத்தள பகுதிகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களைத் தேடிச் சென்று தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வழங்கியமை அரசாங்கத்தின் முட்டாள் தன நிகழ்ச்சி நிரலில் ஒன்றாகும். அரசாங்கத்தின் நாடகத்தில் இதுவும் ஒரு அங்கமாகும்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை ஒரு சதத்திற்கும் கணக்கில் எடுக்காத பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் இந்த சம்பவத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் கருத்து வௌியிட்டனர். இதில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறிய கதை மிகவும் அற்புதம். இது ஒரு ' பாதுகாப்புக்கான பயிற்சி ' என்று அவர் கூறினார். அவர் கடற்படையில் பணி புரிந்த போதிலும், Training Exercise என்ற வார்த்தையில் Exercise என்பது இராணுவ மொழியில் 'பயிற்சி' என்பதாகும். 'உடற்பயிற்சி ' என்பது அல்ல என்பது கூட தெரியாத முட்டாள் நபராக சரத் வீரசேகர உள்ளார். சம்பவத்தின் போது, முப்படைகள் ஆண்டு தோறும் நடத்தும் 'தியாகவா பயிற்சியை' நடத்திச் சென்றது உண்மைதான். இத்தகைய பயிற்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்பதும் உண்மை. உதாரணமாக, ஒரு தியாகவா பயிற்சியில், பயங்கரவாதிகள் பி.எம்.ஐ.சி.எச் -க்குள் நுழைந்து பொது மக்கள் குழுவை பணயக் கைதிகளாக வைத்திருப்பதாக ஒரு சம்பவத்தை உருவாக்கி அவர்களை மீட்பதற்கான பயிற்சியை நடத்தினர். மற்றொரு முறை தாமரை குளம் தியேட்டரில் இத்தகைய சம்பவம் நடந்துள்ளதாக பயிற்சி செய்தார். ஆனால் அந்த பயிற்சிகளின் போது BMICH அல்லது தாமரை குளத்தின் மக்களிடம் பொய் சொல்லாமல் உண்மையைச் சொன்ன பிறகுதான் இராணுவப் பயிற்சி செய்தனர்.

தியாகவா பயிற்சிகளில் வெளிநாட்டு படையினரும் பங்கேற்கின்றனர். அதன்படி, சரத் வீரசேகர அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார். இந்த பூதங்களின் பொய் கதைகளால் நாட்டின் படைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள நற்பெயர் அழிக்கப்படுகிறது. இத்தகைய முரண்பாடான கதைகளுடன், கோத்தபாயவின் அரசாங்கத்தின் கீழ் படித்தவர்களின் வழியில் வந்ததாகக் கூறும் இந்த முட்டாள் அமைச்சர் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் நாட்டுக்கும் சாபக்கேடு.

கோத்தபாய ராஜபக்சவின் அரசாங்கம் நாட்டின் பெரும்பான்மையான கத்தோலிக்கர்கள் வாழும் பகுதிகளில் தேவாலயங்களை குறிவைத்து குண்டு வெடிப்புகள் இடம்பெறப் போவதாக அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் கத்தோலிக்க சமூகத்தில் முஸ்லீம் சமூகத்தின் மீது செயற்கையாக வெறுப்பையும் விரோதத்தையும் உருவாக்க முயற்சிக்கிறது.

இனவெறி மற்றும் மத வெறி மோதலை ஏற்படுத்தி ஆட நினைக்கும் சில விளையாட்டுகள் இதோ...

கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பொது பல சேனா அமைப்பின் சில குண்டர்களும் மற்றும் மெதமுலன சோற்றுப் பார்சல் விரும்பி பிக்குகள் சிலரும் இணைந்து நாட்டில் கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் மக்கள் இடையில் விரிசலை மத மோதலை ஏற்படுத்தி வைக்க முயற்சித்து வருகின்றன. கத்தோலிக்க தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் மீண்டும் தாக்குதல் நடத்துவர் என சிங்கள மக்கள் மத்தியில் வசந்திகளை பரப்பி வருகின்றனர். இதன் மூலம் சிங்க மக்கள் மத்தியில் முஸ்லிம் எதிர்ப்பு விதையையும் விதைத்து வருகின்றனர்.

அதன் கீழ் முன்னரை போன்று அலுத்கம, தர்கா நகர் சம்பவம் கண்டி திகன, மினுவாங்கொட சம்பவம் போன்றவற்றில் முஸ்லிம்களின் சொத்துக்கள் பறித்து உயிர்கள் பலியெடுத்த காட்சிகள் போன்று மீண்டும் நடக்க விரும்புகின்றனர்.

எல்லா விடயங்களிலும் தோல்வியை தழுவி குளிக்கின்ற தற்போதைய கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம், இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கொடூரமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் அழித்து நாடு முழுவதும் மற்றொரு தீவிர இனவெறி, மதவெறி கலவரத்தை உருவாக்கி சமூக அழிவை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

ராஜபக்ச அரசாங்கத்தின் ஒப்புதலுடன் எதிர்காலத்தில் மேலும் பல சதித் திட்டங்களை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர்.

இதைத் தூண்டுவதற்காக, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடி, புத்தளம், மட்டக்களப்பு, அக்குரன மற்றும் மாளிகாவத்த போன்ற பகுதிகளில் அதிசக்தி வாய்ந்த வெடி குண்டுகளை மீட்பதும் நாட்டின் முக்கிய வீதிகளில் இரு புறமும் உள்ள புத்தர் சிலைகள் மற்றும் கத்தோலிக்க சிலைகளை உடைத்து அதன் பழியை முஸ்லிம்கள் மீது திணிப்பது போன்ற பல சம்பவங்களை அரங்கேற்ற திட்டம் தீட்டியுள்ளனர்.

மேலும் கத்தோலிக்க திருச்சபை மற்றும் சர்வதேச அளவில் இருந்து வரும் எதிர்ப்பை சமாளிக்கவென ஞாயிறு  தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறை படுத்துவதாகக் காட்டவென ஒரு வியத்தகு இராணுவ நீதிமன்றத்தை உருவாக்க உள்ளனர்.

அதன்படி, அந்த சமயத்தில் ஜோக்கரின் பாத்திரத்தில் நடித்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் " தாக்குதல் நடத்தப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது ஆனால் இத்தகைய பாரிய தாக்குதல் பற்றி தெரியாது " என்று ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டு உலகத்தையே உலுக்கிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிராக தலா 850 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கடுமையாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தாக்குதல் குறித்து இரண்டு வாரங்களுக்கு முன் தகவல் பெற்று தாக்குதல் நடத்தப்படும் வரை அது குறித்து நடவடிக்கை எடுக்காது தாக்குதலின் பின் தனக்கு வந்த தகவலை தொலைபேசி மற்றும் கணினியில் இருந்து அழித்த அப்போதைய அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்த்தன ஆகியோர் வௌியில் சுதந்திரமாக திரிவது சந்தேகத்திற்குரிய நிகழ்வாகும். அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் சட்ட மா அதிபர் இவர்களை பாதுகாத்து வருகிறார்.

பூஜித, ஹேமசிறி வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது ஆடவுள்ள விளையாட்டு இதோ...

இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது மற்ற சம்பவங்களை "முன்னெடுக்க" ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிழக்கில் உள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களான கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் மூலமாக வெறு சில தாக்குதல்களை நடத்தி ஞாயிறு தாக்குதல் விசாரணைகளைத் தவறாக வழி நடத்தவும் விசாரணைகளை குறை மதிப்பிற்கு உட்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள மூளையாளர்கள் சஹரான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள், வெளிநாட்டு நிதி உதவியாளர்கள் மற்றும் சர்வதேச தொடர்புகள் மற்றும் பயிற்சி முகாம்கள், தற்கொலை குண்டுதாரிகளின் தவறான தொடர்புகள் பற்றி மேலும் "கதைகளை" பரப்ப முயற்சிக்கின்றனர்.

ஞாயிறு தாக்குதல் குறித்து நீதியையும் உண்மையையும் தேடும் ஒவ்வொரு இலங்கையரும் இதை அறிந்திருக்க வேண்டியதுடன் இது குறித்து கூடிய அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

- ரசல் ஹேவாவசம்

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural Newspaper Canada is the first human rights-focused newspaper launched from abroad to serve the Sri Lankan Tamil community. Based in Canada, it aims to highlight human rights issues, political developments, and social challenges faced by Sri Lankan Tamils, both in Sri Lanka and the diaspora. By amplifying marginalized voices, it seeks to foster dialogue and advocate for justice, while offering a platform for critical news, opinions, and analysis from a Tamil perspective.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc