Bootstrap

தமிழ் மக்களுக்கு உறுதியான பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் ஆபத்து!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு நாட்களே இருக்கின்றன. முன்னைய நாடாளுமன்ற தேர்தல்களை விடவும் இந்தத் தடவை இலங்கையின் அரசியல் கோலங்கள் பெருமளவுக்கு மாறியிருக்கும் சூழ்நிலையில் தேர்தல் நடைபெறுகிறது.

பாரம்பரியமான பிரதான அரசியல் கட்சிகளில் எந்த ஒன்றுமே தங்களை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்கவில்லை. பலம்பொருந்திய எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் செயற்படுவதற்கே வாக்களிக்குமாறு அவற்றின் தலைவர்கள்  கேட்கிறார்கள். அதேவேளை, முதன்முதலாக ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் கூட ஒழுங்கான முறையில் அரசாங்கத்தை நடாத்துவதற்குத் தேவையான உறுதியான நாடாளுமன்ற பெரும்பான்மையைத் தருமாறு மக்களை கேட்கிறதே தவிர, மூன்றில் இரண்டு அல்லது ஆறில் ஐந்து பெரும்பான்மை போன்று எதுவும் தேவையில்லை என்றுதான் கூறுகிறது. அதன் பல தலைவர்களின் தேர்தல் பிரசார உரைகளும் ஊடக நேர்காணல்களும் இதை வெளிக்காட்டுகின்றன.

ஆனால், ஜனாதிபதி திசாநாயக்கவும் அரசாங்கத்தின் ஒரேயொரு அமைச்சரான விஜித ஹேரத்தும் நாடாளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களால் நிரப்புமாறும் எதிர்க்கட்சியே தேவையில்லை என்றும் தேர்தல் பிரசாரங்களின் தொடக்கத்தில் மக்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு கடுமைான எதிர்ப்பு கிளம்பியது.

எதிரணி அரசியல்வாதிகள் குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி திசாநாயக்கவின் ஒன்றரை மாதகால ஆட்சியில் தவறு கண்டுபிடிப்பதிலும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களினால் நீண்ட நாட்களுக்கு ஆட்சிசெய்யக்கூடிய ஆற்றலும் அனுபவமும் இல்லை என்று பிரசாரம் செய்வதிலுமே கூடுதல் அக்கறை காட்டுகிறார்கள். ஒரு குறுகிய காலத்துக்குள்ளாகவே தேசிய மக்கள் சக்தியில் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியையே அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதரித்து பதவிக்கு கொண்டுவரும் வழக்கத்தில் இருந்து இந்தத் தடவை மக்கள் விலகுவார்கள் என்று நம்பமுடியாது. மக்களிடம் எதைக்கூறி வாக்கு கேட்பது என்றே தெரியாமல் எதிர்க்கட்சிகள் தடுமாறுகின்றன. ஜனாதிபதி திசாநாயக்க தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வசதியாக உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணையை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறார். அரசியல் குழப்பநிலை ஒன்று உருவாவதை மக்களும் விரும்பமாட்டார்கள்.

தென்னிலங்கை நிலைவரம் இவ்வாறிருக்கையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நிலைவரம் மிகவும் குழப்பகரமானதாக இருக்கிறது. அடுத்த நாடாளுமன்றத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் ஒரு கட்டுறுதியானதாக இல்லாமல் ஒவ்வொரு கட்சியும் ஓரிரு உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்துக்கு வரக்கூடிய வாய்ப்பே இருக்கிறது.

இரு மாகாணங்களிலும் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் முன்னென்றும் இல்லாத வகையில் பெரும் எண்ணிக்கையில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன. அதனால் வாக்குகள் சிதறடிக்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மொத்தம் 28 நாடாளுமன்ற ஆசனங்களுக்கு 2067 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

வட மாகாணத்தில் மாவட்ட ரீதியாக நோக்கும்போது ஆறு ஆசனங்களைக் கொண்ட யாழ்ப்பாணத்தில் 23 அரசியல் கட்சிகளும் 21 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மொத்தம் 396 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். வன்னி மாவட்டத்தின் ஆறு ஆசனங்களுக்காக 23 கட்சிகளையும் 25 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 432 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தின் நான்கு ஆசனங்களுக்காக 17 கட்சிகளையும் 14 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 217 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஐந்து ஆசனங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 கட்சிகளும் 27 சுயேச்சைக் குழுக்களும் 392 வேட்பாளர்களை களமிறக்கியிருக்கின்றன. அம்பாறை மாவட்டத்தின் ஏழு ஆசனங்களுக்காக 23 கட்சிகளையும் 40 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 630 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். நாடாளுமன்றத்தின் 225 ஆசனங்களில் 29 தேசியப்பட்டியல் ஆசனங்களைத் தவிர்த்தால் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கே மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். வடக்கு, கிழக்கின் 28 ஆசனங்களைத் தவிர்த்துப் பார்த்தால் எஞ்சிய ஏழு மாகாணங்களிலும் உள்ள 17 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 168 ஆசனங்களுக்கு 6821 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதாவது, தென்னிலங்கையில் ஒரு ஆசனத்துக்கு 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற அதேவளை, வடக்கு, கிழக்கில் ஒரு ஆசனத்துக்கு 73 பேர் போட்டியிடுகின்றார்கள்.

ஐந்து மாவட்டங்களின் வேட்பாளர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் தமிழ் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்த்தவர்களாகவே இருக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆதரவு இல்லாதவை என்பதுடன் பல வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள்.

தமிழ் அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல, சுயேச்சைக் குழுக்களும் கூட உணர்ச்சிகளைத் தூண்டுவதன் மூலமாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறவதற்காக தமிழ்த் தேசியவாத சுலோகங்களை தாராளமாகப் பயன்படுத்துகின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னதாக அரசியலில் எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் இருந்த பேர்வழிகளும் கூட திடீரென்று சுயேச்சைக் குழுக்களாக தேர்தல் களத்தில் இறங்கி தமிழ்த் தேசியவாதத்தை பாதுகாக்கப்போவதாக கூறுகிறார்கள்.

இலங்கை தமிழர் அரசியலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள பல்வேறு குழுக்களும் தனவந்தர்களும் பல தமிழ்க்கட்சிகளுக்கு நிதியுதவி செய்கிறார்கள். பல்வேறு சுயேச்சைக் குழுக்கள் களத்தில் இறங்கியதற்கு அந்த வெளிநாட்டுப் பணமே பெரிதும் காரணமாக இருக்கிறது.

தங்களுடன் தொடர்பு கொண்ட சில புலம்பெயர் தமிழ்க்குழுக்கள் பணம் தந்தால் சுயேச்சைக் குழுவை அமைத்து தேர்தலில் போட்டியிட முடியுமா என்று கேட்டதாக யாழ்ப்பாணத்தில் உள்ள பல கல்விமான்களும் சமூகத்தில் மதிப்புடைய முக்கியஸ்தர்களும் இந்தக் கட்டுரையாளரிடம் நேரடியாகவே கூறினார்கள். இலங்கை தமிழர் அரசியல் முன்னென்றும் இல்லாத வகையில ஊழல் மயப்படுவதற்கு  புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் உள்ள அரசியல் குழுக்கள் உதவியாக இருக்கின்றன.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களினால் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட தமிழ்க் கட்சிகள் தமிழரின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துவதில் நடைமுறைச் சாத்தியமானதும் விவேகமானதுமான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்திருந்தால் இன்று தமிழர் அரசியல் சமுதாயம் இந்தளவுக்கு சிதறிச் சீரழிந்திருக்காது.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் காலஞ்சென்ற தலைவர் இராஜவரோதயம் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம்  இயல்பாகவே வந்து சேர்ந்தது. அதற்குப் பிறகு வடக்கு, கிழக்கு தமிழர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான சக்தியாக கூட்டமைப்பே விளங்கியது.

போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 22 ஆசனங்கைளைக் கைப்பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு 2010 தேர்தலில் 14 ஆசனங்களையே பெறக்கூடியதாக இருந்தது. மீண்டும் 2015 நாடாளுமன்ற தேர்தலில்  கூட்டமைப்பின் ஆசனங்கள் 16 ஆக அதிகரித்தன. 2020 தேர்தலில் அதன் ஆசனங்கள் பத்தாகக் குறைந்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தவிர கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி போன்ற சில தமிழ் கட்சிகளும் ஓரிரு ஆசனங்களுடன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தன.

இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  அங்கத்துவ கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் வளரத்தொடங்கின. பிரதான அங்கத்துவ கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய எஞ்சியிருந்த தழிழீழ விடுலை இயக்கம் (ரெலோ ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) போன்றவை கடந்த வருட முற்பகுதியில் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி உள்ளூராட்சி தேர்தல்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற அமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு முடிவெடுத்தன. கூட்டமைப்பில் இருந்து ஏற்கெனவே வெளியேறியிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் வேறு சில குழுக்களும் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை களமிறக்கியதில் இந்த புதிய கூட்டணி முக்கிய பங்கு வகித்தது. அந்தத் தேர்தல் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளை மாத்திரமல்ல கட்சிகளுக்குள் நிவவிய பூசல்களையும் அம்பலப்படுத்தியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பலம்பொருந்திய  அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதில் தங்களுக்கு இருந்த வரலாற்றுப்  பொறுப்பை உணர முடியாதவர்களாக கட்சி அரசியல் நலன்களை மேம்படுத்துவதில் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் தீர்க்கதரிசனமற்ற முறையில் செயற்பட்டதன் விளைாகவே தமிழ் அரசியல் சமுதாயம் இன்று சிதறுப்பட்டுக் கிடக்கிறது.

தற்போது தமிழரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய மூன்று அணிகளையுமே வடக்கு, கிழக்கில் போட்டியிடும் முக்கியமான கட்சிகளாகும். மூன்று கட்சிகளுமே தங்களை குறைந்தது பத்து ஆசனங்களுடனாவது நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு தமிழ் மக்களிடம் கேட்கின்றன. இவற்றில் இரு மாகாணங்களிலும் பரந்தளவில் மக்கள் ஆதரவைக் கொண்டதாக இதுவரை தமிழரசு கட்சியே விளங்கிவந்தது.

அண்மைக்காலமாக நிலவிவரும் உள் முரண்பாடுகள் தமிழரசு கட்சிக்கு தமிழர்கள் மத்தியில் இருந்த ஆதரவை எந்தளவுக்குப் பாதித்திருக்கின்றது என்பதை இந்த வாரத்தைய தேர்தல் நிச்சயம் வெளிக்காட்டும். இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த பத்து ஆசனங்களில் ஆறு  ஆசனங்கள் தமிழரசு கட்சிக்குரியவை. இந்தத் தடவை அந்த ஆறு ஆசனங்களையாவது அந்தக் கட்சியினால் காப்பாற்றக்கூடியதாக இருக்குமா என்பது முக்கியமான கேள்வி.

உட்கட்சி முரண்பாடுகளை தேர்தல் காலத்தில் வெளிக்காட்டாமல் இருக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச அரசியல் பக்குவமோ, சாதுரியமோ கூட இல்லாதவர்களாக தமிழரசு கட்சியின் சில தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள். அதேவேளை, ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் தமிழரசு கட்சியை தாக்கிப் பேசுகிறார்களோ இல்லையோ அதன் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

அண்மைக்காலத்தில் சுமந்திரனைப் போன்று வேறு எந்தவொரு தமிழ்  அரசியல்வாதியும் இந்தளவு விமர்சனங்களுக்கு உள்ளாகியதில்லை எனலாம். இந்த தேர்தலுடன் அவரது அரசியலுக்கு முடிவு கட்டிவிட வேண்டும் என்று அவர்கள் கங்கணம் கட்டிநிற்கிறார்கள். காரணத்தைக் கேட்டால் சுமந்திரனால் தமிழ்த் தேசியத்துக்கு ஆபத்து என்கிறார்கள். தாங்கள் எல்லோரும் குடாநாட்டுக் ‘குண்டுச் சட்டிக்குள்’ இருந்துகொண்டு அவ்வப்போது மக்களை உணர்சிவசப்படுத்தும் பேச்சுக்கள் மற்றும் கற்பனாவாத சுலோகங்கள் மூலமாக  தமிழ்த் தேசியத்தை பாதுகாத்து வருவதாக அவர்களின் நினைப்பு.

சுயேச்சைக் குழு ஒன்றை அமைத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் வைத்தியர் ஒருவரும் கூட தமிழ்த் தேசியத்தின் பேரில்தான் வாக்குக் கேட்கிறார்.  அவருக்கு கணிசமானளவு மக்கள் வாக்களித்து விடுவார்களோ என்று தமிழ் அரசியல்வாதிகளே பயப்படுகிறார்கள்.. பாவம் தமிழ்த் தேசியம்.

இத்தகைய சூழ்நிலையில், குறைந்தது ஒரு பத்து ஆசனங்களுடனாவது எந்த கட்சியையும் தங்களது பிரதான அரசியல் அணியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பக்கூடியதாக தமிழர்கள் வாக்களிப்பார்களா என்பது இன்னொரு முக்கியமான கேள்வி.

இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலில் திசாநாயக்கவின் வெற்றியை அடுத்து ஒரு மாற்றத்துக்காக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதில் ஓரளவுக்கு நாட்டம் காட்டுவதாக தமிழ் அரசியல்வாதிகளே கூறுகிறார்கள். அதற்கு தமிழ் கட்சிகளின் இதுகாலவரையான செயற்பாடுகள் மீதான மக்களின் வெறுப்பைத் தவிர, வேறு என்ன காரணம் இருக்கமுடியும்?

தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றத்துக்கு மத்தியில் அடுத்த நாடாளுமன்றத்தில் உறுதியான தமிழ்ப் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டியது வெகுவாக உணரப்படுகின்ற போதிலும், சிதறுப்பட்டுக் கிடக்கும் தமிழ் அரசியல் சமுதாயம் அதற்கான வாய்ப்புக்கு இடையூறாக அமையக்கூடும் என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. அத்துடன், வடக்கில் தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையும் இருக்கிறது. மக்கள் நிதானமாகச் சிந்தித்து செயற்படக்கூடியதாக எமது அரசியல்வாதிகள் நடந்துகொள்ளவில்லையே!

வீரகத்தி தனபாலசிங்கம்

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural Newspaper Canada is the first human rights-focused newspaper launched from abroad to serve the Sri Lankan Tamil community. Based in Canada, it aims to highlight human rights issues, political developments, and social challenges faced by Sri Lankan Tamils, both in Sri Lanka and the diaspora. By amplifying marginalized voices, it seeks to foster dialogue and advocate for justice, while offering a platform for critical news, opinions, and analysis from a Tamil perspective.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc